திருடாதே பாப்பா திருடாதே…. பாடலில், வறுமை இருக்கு பயந்துவிடாதே என்ற வரிகளை வறுமையுடன் எழுதியவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சென்னையில் திரைப்பட வாய்ப்புக்காக ஏங்கிய கவிஞரை பட்டினி கிடக்காமல் ஊருக்குப் போய்விடு என கூறினார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். ஆனால் திறமை இருக்கு மறந்துவிடாதே என்ற அவரது வரிகளுக்கேற்ப பின்னர் பெரும்புகழ் பெற்றார் பட்டுக்கோட்டையார்.
திருடாதே பாப்பா திருடாதே என குழந்தைக்கு போதித்த அவர், சின்னப்பயலே சின்னப்பயலே என சிறுவயதுப் பையனுக்கு பாட்டெழுதி, தூங்காதே தம்பி தூங்காதே என தம்பிக்காக போதனை சொல்லும் பாடலை எழுதி புகழ்பெற்றவர் பட்டுக்கோட்டை.
குழந்தைகள், சிறுவர்கள், தம்பிகள் எனக்குறிப்பிட்டு எழுதினாலும், பாடல் வரிகளில் பொதிந்துள்ள உட்பொருள், பெரியவர்களுக்கு உரைத்த சொல்லாகவே இருந்தது. பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்ற பட்டுக்கோட்டையார், தொடக்கத்தில் விவசாயியாக வாழ்க்கையை தொடங்கி, பல்வேறு வகையான வியாபாரங்களை மேற்கொண்டு, இறுதியில் பாடகராகி, கவிஞரானவர்.
கம்யூனிசத்தில் ஈடுபாடு கொண்டதால் பாடல் வரிகளில், தொழிலாளர் சிந்தனைகள் ஓங்கி நிற்கும். பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது என்ற வரிகளில் ஆதங்கம் தெரியும். குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா பாடலில் எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தினார்.
பொதுவுடமை பாடல்கள் மட்டுமின்றி அழகிய காதல் பாடல்களையும் படைத்துள்ளார். கவிஞர் பட்டுக்கோட்டை, அமுதவள்ளி திரைப்படத்தில் எழுதிய ஆடை கட்டி வந்த நிலவோ பாடல் இன்றும் மயக்குகிறது. தங்கப்பதுமை திரைப்படத்தில், முகத்தில் முகம் பார்க்கலாம் பாடலில் காதல் வரிகள் கொஞ்சும்.
15 வயதில் கவிதை எழுதத் தொடங்கிய பட்டுக்கோட்டையார், திரைப்பட உலகில் அறிமுகமான 3 ஆண்டுகளில் 180 பாடல்கள் மட்டுமே எழுதி 29 வயதில் மறைந்தார். ஆனால் காலத்தால் அழியாத பாடல்களால் கோட்டையென கம்பீரமாக உயர்ந்து நிற்கிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.







