திருச்சியில் திருப்புமுனை மாநாடு. தொண்டர்களே திரண்டு வாருங்கள்… என்று தலைவர்கள் அழைப்பு விடுப்பதைப் பார்த்திருப்போம். அதென்ன திருச்சியில் திருப்பு முனை. அதன் வரலாறு என்ன…? பார்க்கலாம்….

தமிழ்நாட்டு வரலாற்றில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் மிக முக்கியத்துவம் பெற்றவை. கடந்த 1937ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் மாநாட்டை நடத்தினார் கி.ஆ.பெ.விசுவநாதம். இதையடுத்து 1964ம் ஆண்டும் இந்தித் திணிப்புக்கு எதிரான மாநாடு, மாணவர்களின் போராட்டக்குழு, சென்னை நோக்கிய பேரணி என திருச்சியே முக்கிய களமாகியது. அப்போது கிழப்பழுவூர் சின்னச்சாமி திருச்சி ரயில்வே சந்திப்பில் தீக்குளித்து, போராட்ட பெருந்தீயை பற்ற வைத்தார். மாணவர்களின் போராட்டத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சென்ற மாவட்ட ஆட்சியரே பேரணியில் நடந்து சென்ற நிகழ்வும் திருச்சியில் நடைபெற்றது. ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட, மாணவர்களின் அந்த போராட்டம் இப்போதும் பெருமிதமாக பேசப்படுகிறது.
திமுகவின் திருப்பு முனை
கடந்த 1949ல் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக, தேர்தலில் போட்டியிடாத இயக்கமாக இருந்தது. அக்கட்சியின் 2வது மாநில மாநாடு, 1956ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான், தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, தேர்தலில் போட்டியிடலாம் என்று 56, 942 பேரும், வேண்டாம் என்று 4, 203 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மையினரின் முடிவையடுத்து, திமுக தேர்தல் களத்திற்கு வந்தது.
திமுக 1957ம் ஆண்டு முதலில் தேர்தலில் போட்டியிட்டு, 1967ம் ஆண்டு ஆட்சிக்கும் வந்தது. அண்ணா முதலமைச்சரானார். திமுகவின் பெரும்பான்மையான மாநில மாநாடுகள் திருச்சியிலேயே நடத்தப்பட்டுள்ளன. அந்த மாநாடுகளைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் உள்ளிட்ட அரசியல்ரீதியில் திமுகவிற்கு திருப்பங்களையும் கொடுத்துள்ளன.
எம்.ஜி.ஆர் கொடுத்த முக்கியத்துவம்
திமுகவின் முக்கிய தலைவராக இருந்த எம்.ஜி.ஆர், 1972ம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்க நம்பிக்கையூட்டிய தொண்டர்கள், எம்.ஜி.ஆரின் முதல் பொதுக் கூட்டம், பொதுக்குழு, தேர்தல் நிதி திரட்டும் கூட்டம், கட்சியின் மாநில மாநாடு என அரசியல் ரீதியிலும் சத்துணவுத் திட்ட மேம்பாட்டு மாநாடு, திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகராக்கும் திட்டம் என அரசு ரீதியிலும் திருச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார்.
மேலும், பெரியாரைப் போல, அங்கேயே தங்க விரும்பி இடமும் வாங்கி, அவர் கட்டிய வீடு, எம்.ஜி.ஆர் பங்களாவாக திருச்சி உறையூரில் இப்போதும் காட்சியளிக்கிறது. அதிமுகவின் கொள்கை பரப்புச்செயலாளராக ஜெயலலிதாவின் முதல் பொதுக் கூட்டமும் திருச்சியில்தான் நடைபெற்றது என்கிறார்கள்.
நம்பிக்கை பெற்ற ஜெயலலிதா
கடந்த 2011ம் ஆண்டு திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டம் அதிமுகவிற்கு குறிப்பாக கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவிற்கு பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது என்கிறார்கள்.
இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் வென்று, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தை சென்டிமென்டாக அதே ஜி கார்னர் மைதானத்தில் நடத்தினார் ஜெயலலிதா. அதிமுக தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்தது. திருச்சியோடு இந்த மைதானமும் அதிமுகவினருக்கும் பிடித்த இடமாகியது.
தலைவர்கள் விரும்பும் திருச்சி
இதே ஜி கார்னர் மைதானத்தில்தான் ஜி.கே.வாசனின் தமாகா தொடக்க விழா, மதுரையில் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக் கூட்டம், காங்கிரஸ், பாஜக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. திமுகவில் இருந்து விலகிய வைகோவிற்கு உத்வேகத்தை தந்த மதிமுகவின் மாநாடு, நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு…என கட்சிகளின் முக்கிய மாநாடுகள் திருச்சியில் நடைபெற்றுள்ளன. கடந்த கால நிகழ்வுகளை மனதில் கொண்டு திருப்புமுனை காண திருச்சிக்கு வாருங்கள் என்று தலைவர்கள் அழைப்பு விடுப்பதும் வழக்கமாகியுள்ளது.
6 மணி நேரத்தில் பயணிக்கலாம்
அதே நேரத்தில், தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால், இங்கிருந்து எந்த மாவட்டத்திற்கும் 6 மணி நேரத்தில் சென்று விடும் தூரமும் போக்குவரத்து வசதியில் மாநாடுகள் அதிகம் நடக்க ஒரு காரணம் என்கிறார்கள். குறிப்பாக, பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து வசதிகளும் உள்ளன.
இந்நிலையில்தான், அதிமுக பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள் மன்றம் செல்கிறோம் என்று கூறி ஏப்ரல் 24ம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை அறிவித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். இந்த மாநாடு ஓபிஎஸ்-க்கு திருப்பத்தை தருமா? அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா… ? தொண்டர்களின் ஆதரவு யாருக்கு…? காத்திருப்போம்…








