சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் வந்தே பாரத் ரயிலின் முதல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார் . பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் வந்தே பாரத் ரயிலின் முதல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார் .

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக தனி விமான மூலம் இன்று பிற்பகல் சென்னை வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்,ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா, அஷ்வினி வைஷ்ணவ், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையடுத்து  பழைய விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துக் கொண்டு கார் மூலமாக சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்திற்கு பிரதமர் மோடி வந்தார். அங்கு புதிய விமான நிலைய முனையம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த பிரதமர்,  புதிய முனையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதன் பின்னர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ஆளுநர் ரவி , விமானப் போக்குவத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன்  உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் புதிய பன்னாட்டு முனையத்தை பார்வையிட்டனர்.

இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அடையாறு கடற்படை தளத்திற்கு சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து  சென்னை-கோவை  இடையே முதன்முறையாக இயக்கப்படும் வந்தே பாரத் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

முன்னதாக வந்தே பாரத் ரயிலின்  உள்ளே சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். ரயிலில் உள்ள வசதிகள் குறித்து அதில் பயணம் செய்யவிருந்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதன் பின்னர் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து பிரதமர்  நரேந்திர மோடி துவக்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை புறப்பட்டு சென்றது.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.