’ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ தொடரில் பில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் டாக்ரே மாண்ட்கோமெரி என நம்பி ஆன்லைனில் 10,000 டாலரை ஏமாந்த ஒரு பெண் தன் கணவரையும் அந்த போலி நபருக்காக பிரிந்துள்ளார்.
சிம்பிள் சயின்ஸ். நிறைய காதல். நிறைய நிறைய நட்பு. இப்படி மனிதனின் அடிப்படைத் தேவைகளை வைத்து அழகாய் வெளிவந்த ஓர் சீரிஸ்தான் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்’. இன்றும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இந்த தொடருக்கு தனித்துவமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த தொடரின் முதல் பாகம் வெளியாகும் போது அதில் பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பர்.
அண்மையில் இந்த தொடரின் நான்காம் பாகம் வெளியானது. அதில் குழந்தைகள் அனைவரும் கல்லூரி பருவத்தில் இருக்கும் தோற்றத்தில் நடித்திருப்பார்கள். இந்த தொடரில் மேக்ஸ், பில்லி, ராபின், எரிக்கா போன்றவர்கள் எதிர்மறை கதாபாத்திரங்களாக நடித்திருப்பார்கள். இந்த தொடரில் பில்லியாக நடித்திருபப்வர் நடிகர் டாக்ரே மாண்ட்கோமெரி.
இந்த நடிகரை போல் ஆன்லைனில் பொய்யான கணக்கு ஒன்றில் கென்டக்கி நகரை சேர்ந்த பெண்ணான மெக்கலா என்ற பெண் இணைந்துள்ளார். இந்த பெண் அந்த போலி கணக்கை உபயோகப்படுத்துவது நிஜமாகவே நடிகர் டாக்ரே என்று நம்பினார். இதனை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் பட்சத்தில் அந்த போலி நபர் அந்த பெண்ணிடம் 10,000 அமெரிக்க டாலர்களை ஏமாற்றியுள்ளார். இந்த பெண்ணிற்கு ஒரு குழந்தையும் உண்டு.
இவர் ஒரு யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். ஆனால் இந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் சுமூகமான உறவு இல்லாததால், இதனை பயன்படுத்திக்கொண்ட அந்த போலி கணக்கு நபர், அந்த பெண்ணை அவரது கணவருடனான உறவில் இருந்தும் வெளியேற வைத்தார். இறுதியில் ஒரு நாள் அந்த போலி நபரை நேரில் சந்திக்க ஆவலாக சென்றபோது தான், மெக்கலாவிற்கு அவ்வளவு காலம் தான் ஏமாந்தது தெரியவந்தது.
மேலும் அதற்கு பின் அந்த போலி கணக்கின் மூலமும் அந்த நபர் மெக்கலாவை தொடர்பு கொள்ளவில்லை. இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் அன்பு உங்களை முட்டாள்தனமான, நியாயமற்ற செயல்களைச் செய்ய வைக்கிறது. நீங்கள் என்னை போன்ற ஒருவராக இருந்தால், நீங்கள் கைவிடப்படுவீர்கள். என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.







