சந்திரயான் 3 விண்கலத்தின் உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவுக்கு செல்லும் ‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்று வட்டாரப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
பூமியைச் சுற்றி வந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஆக. 1-ஆம் தேதி புவியீா்ப்பு விசையிலிருந்து சந்திரயான்-3 விலக்கப்பட்டு நிலவை நோக்கிச் செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. நிலவின் தரைப் பகுதியிலிருந்து குறைந்தபட்சம் 153 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 163 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்று வட்டப் பாதையில் விண்கலம் நிலவைச் சுற்றி வந்தது.
நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வந்த சந்திரயான் – 3 விண்கலத்தின் தொலைவு, படிப்படியாக குறைக்கப்பட்ட நிலையில், நிலவின் தரைப்பகுதிக்கு மிக நெருக்கமாக வந்த போது விண்கலத்தின் உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் இன்று வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி பயணிப்பதாகவும், வரும் 23ஆம் தேதி நிலவில் விண்கலம் தரையிறக்கப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







