கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதையை கழிப்பதற்கு, சென்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்த இரு பெண் குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரியகரம் அருகே உள்ள காந்திநகர் கிராமத்தில் காவியா என்பவர் இயற்கை உபாதை கழிக்க வயல்வெளிக்கு இன்று காலை சென்ற போது அவர் பின்னால் அவரது மகள் பவ்ய ஸ்ரீ மற்றும் காவியாவின் அண்ணன் குழந்தையான சிந்து பாரதியும் சென்ற போது இந்த இரண்டு பெண் குழந்தைகளும் விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளனர்.
காவியாவின் குழந்தை பவ்யஸ்ரீ மற்றும் அவரது அண்ணன் குழந்தை சிந்து பாரதி ஆகிய இரு பெண் குழந்தைகளுக்கும் இந்த துயர முடிவு நேரிட்டது. கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இரு பெண் குழந்தைகளின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், அப்பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறைகள் உடனடியாக ஏற்படுத்தித் தரப்படும் எனவும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்கிறேன் எனவும் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொலைப்பேசி வாயிலாக நியூஸ்7 தமிழுக்கு தகவல் அளித்துள்ளார்.







