காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய பெண்… டி.பி. சத்திரத்தில் பரபரப்பு!

மதுபோதையில் இருந்த பெண் ஒருவர் டி.பி.சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை டி.பி சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த சீதா…

மதுபோதையில் இருந்த பெண் ஒருவர் டி.பி.சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை டி.பி சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த சீதா என்ற பெண் ஒருவர் மதுபோதையில் தனது 6 வயது குழந்தையை பொது இடத்தில் வைத்து தாக்குவதாகவும், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் காவல் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு தகவல் கிடைத்தது.  இந்த தகவலின் அடிப்படையில் டி.பி சத்திரம் உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து, உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி மதுபோதையில் இருந்த அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குழந்தையை மீட்க முயன்றுள்ளார். அப்பொழுது திடீரென அந்த இளம்பெண் உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை தாக்கியுள்ளார். இதில் அவரின் முகத்தில் நகக் கீறல், வீக்கம் ஏற்பட்டது.  இதனையடுத்து அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றார்.

 

இந்த சம்பவம் குறித்து டி.பி சத்திரம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி அண்மையில் ரோகித் என்ற ரவுடியை சுட்டுப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவுடியை சுட்டுப் பிடித்ததற்காக காவல் ஆணையரிடம் பாராட்டையும் பெற்றிருந்தார். இந்த சூழலில் மது போதையில் சுற்றித்திரிந்த நேபாள பெண்ணால் அவர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.