கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த 55 வயதான நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ், தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக பணியாற்றியிருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு சிகிச்சையளிக்கும்போது அவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை எடுத்த மருத்துவர் சைமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி விருப்பத்தின்படி கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது அப்பகுதி மக்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக இவரது உடல் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயான பூமிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால், அப்பகுதி மக்கள் சிலர், கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதால் தொற்று பரவும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு வன்முறையாக வெடித்தது. இதில் மாநகராட்சி ஊழியர்கள் சிலர் காயமடைந்தனர். இதனையடுத்து கூடுதல் காவல்துறையினரின் உதவியால் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மருத்துவர் சைமன் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவரின் மனைவி ஆனந்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், “சைமன் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய” இன்று உத்தரவுரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் புதைக்க உரிய பாதுகாப்பினை காவல்துறை வழங்க வேண்டும் என்றும் அனைத்து நடைமுறைகளையும் விடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.







