தமிழ் திரையுலகின் பொல்லாதவன்

ஹீரோவுக்காக தியேட்டருக்கு வருகிறேன் என சொல்வோர்களுக்கு மத்தியில் டேரக்டருக்காக தியேட்டருக்கு வந்தேன் என சொல்ல வைத்தவர் வெற்றிமாறன். எளிய மக்களின் வாழ்வியலை மட்டுமே தன் படங்களில் தொடர்ந்து மையக்கருத்தாக்கி அதனை வணிக சினிமாவாகவும் அனைவராலும்…

ஹீரோவுக்காக தியேட்டருக்கு வருகிறேன் என சொல்வோர்களுக்கு மத்தியில் டேரக்டருக்காக தியேட்டருக்கு வந்தேன் என சொல்ல வைத்தவர் வெற்றிமாறன்.

எளிய மக்களின் வாழ்வியலை மட்டுமே தன் படங்களில் தொடர்ந்து மையக்கருத்தாக்கி அதனை வணிக சினிமாவாகவும் அனைவராலும் ரசிக்கும்படியும் எதார்த்தத்துக்கு நெருக்குமாகக் காட்சிப்படுத்திய படைப்பாளி வெற்றிமாறன். ”நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துகிடுவானுவ , ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம் படி, அதிகாரத்துக்கு வா , அதிகாரத்துக்கு வந்து அவன் உனக்கு செஞ்சத , நீ எவனுக்கு செய்யாத பகைய வளர்க்கறதவிட அத கடக்குறது தான் முக்கியம்”. இது போன்ற வசனங்களை வைத்து சமத்துவத்தையும், சமூகநிதியையும் அடித்தளமாகக்கி, மக்கள் வாழ்வியல் பேசும் கதைகளைத் திரைப்படுத்தி வருகிறார்.வெளியானது வெறும் 5 படங்கள் தான் என்றாலும் இவர் தமிழ் திரைத்துறைக்கு அளித்த பங்களிப்பு அளப்பறியாதது. சமூகப் பொறுப்புகளைக் கையில் எடுத்த இயக்குநர்களின் படைப்புகள் பெறுமளவில் வெற்றி பெறுவதில்லை ஆனால் இவருக்கு அது ஒரு தடையாகக் கூட இருந்ததில்லை.

எளிய மக்களின் வாழ்க்கையும் அதில் உள்ள சிக்கல்களும் தான் இவரின் படத்தின் மையக்கதை ஆனால் இவர் அதை மக்களிடம் கொண்டு சேர்த்த அளவிற்கு வேறு யாரும் சேர்த்திருப்பார்களா என்பது கேள்விக் குறிதான். இவரின் முதல் படமான பொல்லாதவன் படதிலேயே பாடல்கள், காதல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என அனைத்து கமர்ஷியல் அம்சங்கள் இருந்தாலும் நடுத்தர குடும்ப சிக்கல்,அப்பா – மகன் உறவு, ஒரு சாமானிய இளைஞனுக்கு சமூகத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு எனப் படத்தின் கதை பல அடுக்குகளில் நகரும்.

அதையடுத்து ஆடுகளம் படத்தில் தென்மாவட்டங்களில் நிகழும் சேவல் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதிலும் காதல், நட்பு, துரோகம், பகை, எனப் படத்தில் பல உணர்வுகளால் சிக்கித்தவிக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையையும் களத்தில் புழுதி பறக்கப் படமாக்கி 6 தேசிய விருதுகளை தமிழ் திரைத்துறைக்குப் பெற்றுத்தந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் எடுத்த விசாரணை திரைப்படம் ஆஸ்கர் வரை சென்று வந்தது. பின் மீண்டும் ‘வடசென்னை’யில் தனுஷுடன் இணைந்த வெற்றிமாறன் ரவுடியிசமும் அதன் பின்னணியில் இருக்கும், அரசியல் குறித்து மிகத்தெளிவாக எடுத்த படங்களுள் ஒன்றாகும்.


தமிழ் திரைத்துறையில் சாதி ஆதிக்கத்தை தோலுரித்துக் காட்டியதில் 2019ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இப்படத்தில் பஞ்சமி நில உரிமை குறித்தும், அதை வாங்கும் விற்கும் அதிகாரம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்ட காட்சிகள் மக்களுக்கான விழிப்புணர்வாகவே பார்க்கப்பட்டது.“கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே, அந்தாப்ல தலமேல ஏறி உட்காந்துக்கீடுவிங்களே, நீ கட்டிக்கப்போர பொண்ணு தலைல செருப்பு வச்சதும், என் சொந்தக்கார பய ஊர் முன்னாடி அடி வாங்குறதும் ஒன்னாலே”, பிரச்சினைகளைப் பேசி தீர்த்துக்கொள்ளலாம், வன்முறை வேண்டாம் என்ற கருத்தை வன்முறை காட்சிகளோடு காட்டியது அசுரன் திரைப்படம். அதனாலேயே இந்த திரைப்படம் கொண்டாடப்பட்டது.

பாவக் கதையில் ஓர் இரவு எனும் கதையை இயக்கிய வெற்றிமாறன் கலப்பு திருமணம் குறித்தும் அதில் இன்னும் இந்த சமூகம் எவ்வளவு பின்னோக்கி உள்ளது என்பதை காட்சிபடுத்தி இருப்பார். கௌரவக் கொலை என்ற பெயரில் தான் பெற்ற மகளையே கொன்று,அதில் தான் தனது கௌரவம் இருக்கிறது என நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு அது மிருகத்தனமான செயல் என்பதனை புரிய வைத்டிருப்பார்.


இப்படி தன் படங்களில் வலுவான கருத்துகளைத் தொடர்ந்து பதித்து அதனைக் காட்சிப் படுத்தி அப்படங்களை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்கும் வித்தையில் கை தேர்ந்தவராகவே திரையுலகில் வலம் வருகிறார் வெற்றிமாறன். வணிக நோக்கமாக இருந்தாலும் இவர் படத்தில் பறந்து, பறந்து சண்டையின் காட்சிகளோ, மாஸ் வசனங்களோ வைக்காமல் ரசிகர்களுக்கும் மரியாதை அளித்து அவர்களின் நேரத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் தனதுப் படைப்புகளைப் படைத்துவருகிறார்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்திலும், சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகிறது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் சூர்யாவை வைத்து வாடிவாசல் என ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்க்கும் படங்களை இயக்கி வருகிறார். இப்படைப்புகளும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் வழக்கம்போல் மக்களிடம் நீங்காமல் அவர்கள் மனதில் இடம் பெறும் என்பத்தில் எந்த ஐயமும் இல்லை.

சினிமாவில் வெற்றி இயக்குநராக ஜொலிக்கும் வெற்றிமாறன் சினிமாவைத் தாண்டி விவசாயத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் விவசாயம் செய்து வருறார். இதற்காக வேடந்தாங்கல் அருகேயுள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி பசுமை பண்ணை அமைத்து பாரம்பரிய முறையில் விவசாயம் செய்து வருறார்.

தமிழ் திரைத்துறையில் இன்னும் பல மைல் கற்களைப் பதிக்கவுள்ள இயக்குநர் வெற்றிமாறனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

“I don’t make films, I witness when a film happens.” -Vetrimaaran

-செ.யுதி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.