தமிழ் சினிமாவின் ‘அசுரன்’ வெற்றிமாறன்

சமூக பார்வையோடும், வாழ்க்கையின் யதார்தங்களை பிரதிபலிக்கும் வகையிலும் சிறந்த படங்களை தரும் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவின் ஆகச்சிறந்த சினிமா கதை இயக்குனர்களில் ஒருவர் தான் வெற்றி மாறன். பொல்லாதவன்…

சமூக பார்வையோடும், வாழ்க்கையின் யதார்தங்களை பிரதிபலிக்கும் வகையிலும் சிறந்த படங்களை தரும் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் ஆகச்சிறந்த சினிமா கதை இயக்குனர்களில் ஒருவர் தான் வெற்றி மாறன். பொல்லாதவன் படத்தில் பக்கத்து வீட்டில் இருக்கும் சாதராண குடும்ப பின்னணி கொண்ட படித்த இளைஞன் சந்திக்கும் பிரச்னையை கதையாக்கியிருப்பார். ஆடுகளம் படத்தில் மனிதர்களின் குருரமான மறுபக்கத்தை காட்டியிருப்பார். விசாரணை படத்தில் சிறைகளிலும், காவல் நிலையங்களிலும், நடக்கும் வெளித்தெரியாத கருப்பு பக்கங்களை படமாக்கியிருப்பார். வட சென்னை பூர்வகுடி மக்களை பற்றினது, அசுரன் தமிழ் சினிமா தொட யோசித்த பஞ்சமி நிலத்தை பற்றிய கதை… இப்படி 5 படங்கள் மட்டுமே எடுத்து இந்தியாவின் நோட்டபிள் பிலிம் மேக்கராக வலம் வருபவர்தான் வெற்றி மாறன்.

இந்த படங்களின் வெற்றிக்குப் பின்னால், அவரின் தூங்காத பல இரவுகள் இருக்கின்றன. தன் நண்பனின் பைக் தொலைந்து போக அதை கதைக்களமா வைத்து உருவாக்கபட்டது தான் வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன். முதல் படமே பெரிய தடைகளை கடந்து தான் திரைக்கு வந்தது. அந்த நேரத்திலேயே வடசென்னை படத்திற்கான கதையும் அவரிடம் இருந்தது. அதில் ஒரு சின்ன பகுதியை மட்டும் வைத்து எடுத்த திரைப்படம் தான் பொல்லாதவன்.

வெற்றிமாறன் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய வலிமையே அவரின் கதை மாந்தர்களை வடிவமைக்கும் விதம்தான். சில இயக்குனர்களை போல, கற்பனையாக வடிவமைக்க மாட்டார். தான் படித்த, பார்த்து பழகிய, தூரத்தில் இருந்து கவனித்த மனிதர்களிடம் இருந்து தத்துருபமாக கதை மாந்தரை வடிவமைப்பார். அப்படி உருவானது தான் ஆடுகளம் திரைப்படம். இதற்காக 6 மாதங்கள் மதுரையிலேயே தங்கி, மதுரை மக்களின் பேச்சு மொழி, அன்றாட வாழ்க்கை முறை, கோவம் என எல்லாவற்றையும் ஆய்வு செய்தார். அலெக்ஷ் ஹேலியின் வேர்கள் புத்தகத்தின் தாக்கம் இருந்தாலும், அது வெற்றிமாறனன் முழுவடிமைப்பாக இருந்தது.

இவர் இயக்கும் படங்கள் பெரும்பாலும் புத்தங்களை தழுவி இருக்கும். அப்படி LockUp என்ற புத்தகத்தை தழுவி எடுத்த படம் தான் விசாரணை. அப்படத்தின் முதல் பாதியிலேயே முழு புத்தகமும் முடிந்து விடும். படத்தின் இரண்டாம் பாதி அவர் வடிமைத்தது. கதையை எப்படி கூறினால் மக்கள் புரிந்து கொள்வார்கள். கதையில் வரும் மனிதர்களை எப்படி சுவராசியமாக காட்ட வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர் வெற்றிமாறன்.

சாதிய ஏற்றத்தாழ்வு, கல்வியறிவு அவசியம் என சமூக பார்வை அதிகம் கொண்டவர் வெற்றிமாறன். ‘வெக்கை’ நாவலை தழுவி இவர் இயக்கிய அசுரன் படம் வெற்றியின் உச்சத்தை தொட்டது என்றே கூறலாம். மற்ற இயக்குனர்களை போல காட்சிகளை முன் கூட்டியே தீர்மானம் செய்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்றாலும், தேவையை ஒட்டி படப்பிடிப்பு தளத்திலே கூட காட்சியை மாற்றி அமைப்பார். இதனால் கால தாமதம் ஆனதும் உண்டு.

தமிழ் சினிமாவில் புத்தகங்களை தழுவி படத்தை இயக்கும் யுக்தியை அதிகம் பயன்படுத்தியவர் பாலு மஹேந்திரா. “ஒரு புத்தகத்தை படிச்சவுடனே தெரிஞ்சுரும் அத படம் பண்ணலாமா வேணாமான்னு. நமக்கு அந்த புத்தகம் புடிச்சுது அப்படின்றதுகாகல்லாம் பண்ண கூடாது. அத வச்சு ஒரு படம் பண்ண முடியுமான்னு பார்க்கனும் இல்லாட்டி ஒதுக்கி வச்சுடனும்” குருவின் வார்த்தைகள் இது. அதை இன்று வரை பின்பற்றி வருகிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் உருவாகிவரும் விடுதலை திரைப்படம் நா.முத்துக்குமாரின் ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ கவிதையின் ஒரு வரியை கொண்டு உருவாகும் கதை. இவ்வாறு திரைக்கதையின் காட்சிகளில் கதை களத்தை பரபரப்பாக மாற்றுவது, கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பது என தனக்கென ஒரு வழியை ஏற்படுத்தி அதில் நடைபோடுகிறார் வெற்றிமாறன்.

– வந்தனா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.