ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை பாகிஸ்தான் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
15-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை லீக் ஆட்டத்தில் மோதிய இவ்விரு அணிகளும் அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 2-வது லீக் ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கையும் தோற்கடித்தது. இதனால் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்து இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இதேபோல் பாகிஸ்தானும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
இதையடுத்து சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, ரவி பிஷ்னாய் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி வெற்றி பெற 182 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
அதிகபட்சமாக இந்தியா சார்பில் விராட் கோலி அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 60 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் சார்பில் சாதாப் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.