சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு பின்னால் பிரதமர் மோடி இருப்பதாக தாம் கருதவில்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான பார்த்தா சாட்டர்ஜி, அனுப்ரதா மண்டல் ஆகியோர் சமீபத்தில் அடுத்தடுத்து ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மேற்குவங்கத்தில் எல்லைமீறி பயன்படுத்தப்படுவதாக கண்டனம் தெரிவித்து மேற்குவங்க சட்டப்பேரவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 189 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி, மத்திய பாஜக அரசு சர்வாதிகாரபோக்குடன் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இந்த தீர்மானம் தனிப்பட்ட யாரையும் குறிப்பிட்டு நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்த மம்தா பானர்ஜி மத்திய விசாரணை அமைப்புகளின் பாரபட்சமான அணுகுமுறையை கண்டித்தே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறினார். சிபிஐ, அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுவதின் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பதாக தாம் கருதவில்லை என தெரிவித்த மம்தா பானர்ஜி, சில பாஜக தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காக இதனைச் செய்வதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசின் நடவடிக்கைகளும் பாஜகவினரின் விருப்பங்களும் ஒன்றாக கலப்பதை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.







