‘குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்’

சர்வதேச நிகழ்வுகளில் நாட்டைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் ஆரம்பத்திலேயே இடம்பெறாததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதைத் தமிழ்நாடு அரசு…

சர்வதேச நிகழ்வுகளில் நாட்டைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் ஆரம்பத்திலேயே இடம்பெறாததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காகத் தமிழ்நாடு அரசு வெளியிட்ட விளம்பரங்களில் ஆரம்பத்திலேயே பிரதமர் மோடியின் படத்தைச் சேர்க்காதது ஏன் எனக் கேட்டு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மட்டுமே செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்திற்காகப் பெருமளவில் பொதுமக்களின் வரிப்பணத்தைத் தமிழ்நாடு அரசு செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்குப் பெருமை சேர்க்கக்கூடிய இந்த நிகழ்வினை ஆளும் கட்சி தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாகப் பயன்படுத்திக் கொண்டது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிகழ்விற்கான விளம்பரங்களில், இந்தியக் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களைத் தவிர்த்து முதலமைச்சரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ராஜேஷ் குமார், இது சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளார். ஆகவே, ” 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பெயர் மற்றும் புகைப்படத்தைச் சேர்க்க உத்தரவிட வேண்டும்” என ராஜேஷ்குமார் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் அணில் காணொலி வழியாக ஆஜராகினார். “பிரதமர், குடியரசுத் தலைவர் புகைப்படத்தை இத்தகைய நிகழ்வில் இடம்பெறச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது ஏற்கத்தக்கதல்ல. அதற்குத் தமிழக அரசுத்தரப்பில் மன்னிப்பு கோர வேண்டும்” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘சதுரங்க ஆட்டத்தின் கதை’

இதற்கு தமிழ்நாடு அரசுத் தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிரதமர் வருகை 22ஆம் தேதிதான் உறுதி செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது என்றும் அதனைத் தொடர்ந்து பிரதமரின் படம் 44வது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் சேர்க்கப்பட்டு, இன்றைய நாளிதழ்களில் கூட பிரதமரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது” எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது “குடியரசுத் தலைவரும், பிரதமரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்” எனக் கூறினர். மேலும், “முதலில் இது நமது தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வு. தேசம் குடியரசுத்தலைவர், பிரதமரின் கீழ் நிர்வகிக்கப்படும் சூழலில், இது போன்ற சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும்” எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கைத் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.

அதனைத்தொடர்ந்து, மாலையில் கூடிய நீதிமன்றம் உச்சநீதிமன்றம் ஏற்கனவே சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் விளக்கங்கள் ஏற்கத்தக்கவை அல்ல எனவும், செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொது மக்களின் உணர்வுகளை மதிப்பதும், சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி அழியாத முத்திரையைப் பெற்றுத் தருவதும் ஒருங்கிணைப்பாளர்களில் சிறந்த மன்னிப்பா அமையும் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.