முக்கியச் செய்திகள் கதைகளின் கதை

சதுரங்க ஆட்டத்தின் கதை

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நிலையில் செஸ் போட்டியின் வரலாறை விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம். 

மன்னரை சுற்றி வட்டம் கட்டப்பட்டுவிட்டது. ஒரு பக்கம் எதிரணியின் மந்திரி. மறுபக்கம் பாயும் குதிரை. பின்னே மதம் கொண்ட யானை. முன்னே, தாக்கத் தயாராக சிப்பாய்கள். இந்த வட்டத்திலிருந்து தப்பித்து உயிர் பிழைப்பாரா என்ற பதட்டத்தில் இருக்கின்றனர் அனைவரும். ஒருவேலை மன்னர் கொல்லப்பட்டால், வெற்றி எதிரணி மன்னர்க்கு அல்ல. அவரை வைத்து விளையாடும் நபருக்கு தான். ஆம், இது ஏதோ வரலாற்றிலோ, புராணத்திலோ வரும் சம்பவம் அல்ல. chess எனப்படும் சதுரங்க ஆட்டத்தின் நகர்வுகள் தான். மன்னர் காலம் முதல் தற்போது வரை ராஜதந்திரம், ஆக்கப்பூர்வ செயல்முறை, எதிரியை வீழ்த்தும் சதூர்ய காய் நகர்த்தல் என தமிழ்நாடு தனக்கான ஒருபுறம் சதுரங்க ஆட்டம் ஆடிக்கொண்டிருக்க, உலகமே ஒன்றிணைந்து சர்வதேச சதுரங்கப்போட்டியில் கலந்துக்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 1927-ல் தொடங்கிய உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி, (இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகம் முழுவதும் நடத்தப்பட்டு, 95 வருடங்களாக இடைவிடாது முயற்சியில், 43 ஒலிம்பியாட்களை கடந்து), தற்போது, 44வது செஸ் ஒலிம்பியாடில் அடியெடுத்து வைக்கிறது. இது, இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டின் சென்னை மாநகரத்தில் நடைபெறுவதே இதன் கூடுதல் சிறப்பு. பல வருடங்களாய் வரலாற்று சாதனை படைத்துவரும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் நடப்பது, இதுவே முதல் முறை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

செஸ் ஒலிம்பியாட் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச சதுரங்கப் போட்டி. இதில் உலக நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெரும் அணிகள் போட்டியிடுகின்றன. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், உலக நாடுகளே பங்குபெறும் அளவில், (chess போட்டிக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்), ஒரு ஒலிம்பிக்கிற்கு நிகரான போட்டி தான் இந்த செஸ் ஒலிம்பியாட். (இந்த ஒலிம்பியாடின் 44வது போட்டிகள் தான் தற்போது சென்னையில் நடைபெறவுள்ளது). உலக வரலாற்றில் சென்னை பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் வருகிற ஜூலை 28ம் தேதி தொடங்கி, ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை 44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்த போட்டியில், 189 நாடுகளைச் சேர்ந்த 343 அணிகளில், 2000த்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் அதிகளவிலான நாடுகள் பங்கேற்க உள்ளது, இதுவே முதன் முறை. இந்தியாவில் இருந்தும் 20 வீரர்கள் இதில் பங்கு பெறுகின்றனர். இந்த 44வது ஒலிம்பியாட் போட்டி முதலில் 2020ல் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், 2019ன் இறுதியிலேயே கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், அது தள்ளிப்போடப்பட்டது. பின்னர் இறுதியக 2022ல் நடத்துவது என்றும் அதனை, ரஷ்யாவில் நடத்தலாம் என்றும் chess ஒலிம்பியாடை நடத்தும் சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பான FIDE முடிவு செய்யதது.

ஆனால், ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்த போராலும், அதனால் உலகம் முழுவதும் ரஷ்யா மீது ஏற்பட்ட அதிருப்தியாலும், chess olympiad போட்டியை ரஷ்யாவில் நடத்தும் முடிவிலிருந்து பின் வாங்கிக்கொண்டது FIDE சங்கம். இந்த சூழ்நிலையில் தான், அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் பரத்சிங் சவ்கான், சர்வதேச செஸ் சம்மேளன தலைவர் ஆர்க்கடி துவோர்கோவிச்சுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் எதிர்காலத்தில் இந்தியா சர்வதேச செஸ் போட்டிகளை நடத்த தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதைக்கண்டு ஆச்சரியப்பட்ட சர்வதேச செஸ் சம்மேளன தலைவர், ‘செஸ் ஒலிம்பியாட்?’ என்று மட்டும் வினவினார். உடனே இந்திய சம்மேளன தலைவர் ‘இந்தியா தயாராக இருக்கிறது’ என்று உறுதிபட தெரிவித்தார். பல நாடுகள் இந்த போட்டியை நடத்த அணிவகுத்து நிற்கும் நிலையில் இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. போட்டியை சென்னையில் நடத்துவது குறித்து, ஏப்ரல் 1ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லி சென்றீருந்தபோது, அங்கே உள்ள தமிழ்நாடு இல்லத்தில், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பை வகித்துவரும் டிவோர்கோச் ஆர்க்கடி சந்தித்தார். இருவரும், 44வது சர்வதேச சதுரங்கப் போட்டி குறித்து கலந்துரையாடினர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் ’சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோச் ஆர்கடி, இந்தியாவில், குறிப்பாக சென்னையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து, தனது மகிழ்ச்சியை முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தார். பதிலுக்கு, இப்போட்டி சிறப்புடன் நடைபெற தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்’ என தெரிவித்தது.

தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது குறித்து உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், “இவ்வளவு குறைந்த இடைவெளியில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியா அதுவும் தமிழ்நாடு ஏற்று நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், செஸ் மீது தமிழ்நாடு கொண்டுள்ள மரியாதையே இதற்கு காரணம்” என்றும் பெருமிதம் தெரிவித்தார். சென்னையில் ஒரு சர்வதேச போட்டி, அதுவும் ஒலிம்பிக்கிற்கு நிகரான ஒரு பிரம்மாண்ட போட்டி நிகழப்போகிறது என்றால் அது சாதாரணம் அல்ல. தமிழ்நட்டின், குறிப்பாக சென்னையின் பெயரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயரும் வரலாற்றில் இடம்பெறும் என்பதே உண்மை. எனவே, இந்த சர்வதேச போட்டி பிரம்மாண்டமாக தயாராக வேண்டும் என்று முழுமூச்சில் வேலைகள் தொடங்கின. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில், பொதுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றனர். போட்டிகளுக்கென ரூ.92 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு. மேலும், போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்தது. உலகெங்கிலும் இருந்து வீரர் வீராங்கனைகளும் சென்னைக்கு வருகை தந்து பயிற்சியில், ஈடுபடத் தொடங்கினர்.

அண்மைச் செய்தி: ‘செஸ் ஒலிம்பியாட்; முதலமைச்சருக்கு நடிகர் விஷால் வாழ்த்து!’

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று, தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இதனை தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட்டின் முதல் ஜோதி ஓட்டம் ஜூன் 19ம் தேதி டெல்லி இந்திராகாந்தி மைதானத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. 40 நாட்களுக்கு இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வரும் இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி, ஜூலை 27ம் தேதி மாமல்லபுரத்தை வந்தடையும். ”இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிகுந்த இத்தருணத்தின் பின்னணியில் இருப்பதில் சென்னை பெருமை கொள்கிறது. தொடர் ஓட்டத்தின் முடிவில் மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்க்த்தில் தெரிவித்தார். ஜூலை 15ம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்த போட்டிக்கான இலச்சினை எனப்படும் logo மற்றும் தம்பி என்ற போட்டி சின்னமான mascotஐயும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் செஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் காய்களில் ஒன்றான குதிரை முகத்துடன் கைகூப்பி வரவேற்பது போல அமைக்கப்பட்டது. அதன் மேற்புறத்தில் ‘தம்பி’ என்று தமிழிலும், கீழே ’வணக்கம் தமிழ்நாடு’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த சின்னத்தையும் செஸ் ஒலிம்பியாட் போட்டியையும் தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விளம்பரங்கள் முழு வீச்சில் அரங்கேறின. இந்நிகழ்ச்சியின் டீஸர் வீடியோவை வெளியிட்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்தியாவிலேயே முதன்முறையாக 44வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நட்டில் நடைபெறுவது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.

ஜுலை 21ம் தேதி வணக்கம் சென்னை chess என்ற முழு பாடல் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த பாடல், மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள நேப்பியர் பாலத்திலும், மாமல்லபுரத்தில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களிலும் படமாக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ சதுரங்கப் பலகையைப் போன்ற பாலத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இந்த சதுரங்க வண்ண நேப்பியர் பாலம், மக்களை அதிகம் கவர்ந்ததோடு அங்கே சென்று புகைப்படங்கள் எடுக்கவும் தொடங்கினர். சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் விளம்பரங்கள், கோயம்புத்தூர், திருச்சி போன்ற பிற நகரங்களில், நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்யும் வகையில், பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்தன. முதலமைச்சர் ஸ்டாலின், ‘நம்ம சதுரங்கம், நம் பெருமை’ என்ற விளம்பர வாசகங்கள் அடங்கிய பேருந்துகளை, நகரம் முழுவதும் பயணிக்க கொடியசைத்து துவக்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாடு இத்தனை முன்னேற்பாடுகள் செய்யக்காரணம், செஸ் ஒலிம்பியட் ஒரு சர்வதேச ஒலிம்பிக்கிற்கு நிகராணப் போட்டி என்பதனையும் தாண்டி, chess என்ற விளையாட்டு உருவாவதற்கும் இந்தியாவிற்கும் ஒரு முக்கிய தொடர்பு இருக்கிறது என்பதனால் தான்.

செஸ் எனப்படும் சதுரங்கம் விளையாட்டு, மன்னர் காலத்திலே போரில் ராணுவ வியூகங்களை வகுக்க பயன்படுத்தபட்டவை என்பதே வரலாறு நமக்கு கூறும் செய்தி. சரியான வியூகத்தை அமைத்து போர் புரியும் மன்னரே வெற்றியையும் அடைகிறார். கிட்டத்தட்ட 1500 வருடங்களுக்கு முன்பு, கி.பி.6ம் நூற்றாண்டிற்கும் முன், இந்தியாவில் தான் தொடங்குகிறது சதுரங்க விளையாட்டின் வரலாறு. அப்போது இந்தியாவில் ஆட்சி புரிந்துவந்த குப்தா பேரரசை சேர்ந்த மன்னர் ஒருவர் இளம் வயதிலேயே போரில் கொள்ளப்படுகிறார். போரில் மன்னர் எப்படி இறந்தார் என்பதை, மன்னரின் சகோதரர் தாயாரிடம் விவரிக்க, போர்களத்தை குறிக்க ஒரு பலகையையும், போர் வீரர்களை குறிக்க சில காய்களையும் பயன்படுத்தினார். இதுவே சதுரங்க விளையாட்டின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. இதனை, அஷ்டபதம் மற்றும் சதுரங்கம் என்று அழைத்தனர். அஷ்டபதம், என்றால் எட்டுக்கு எட்டு கட்டங்கள் உடைய சதுரப்பலகை என்று அர்த்தம். தொடக்கத்தில் சதுரங்கம், நான்கு திசையிலிருந்து 4 பேர் விளையாடக்கூடியதாக இருந்தது. பகடைக்காயை பயன்படுத்தி காய்களை வெவ்வேறு திசைகளில் நகர்த்தி விளையாடினர். 7ம் நூற்றாண்டில், இந்தியாவிற்கு பெர்ஷியா நாட்டினர் வர்த்தகம் புரிந்து வந்ததால், இந்த விளையாட்டு பெர்சிய நாட்டிற்கும் பரவியது. அங்கு, இந்த விளையாட்டை shah என்று அழைத்தனர். Shah என்றால் மன்னர் என்று அர்த்தம். அதுவே, பின்னாளில் chess என்று உருமாறியது. விளையாட்டின் இறுதியில், shah mat என்ற வார்த்தைகளை பயன்படுத்தினர். அதாவது, மன்னரை காப்பாற்ற வழியில்லை என்று அர்த்தம். அதுவே பின்னாளில், check mate என்று ஆனது. அரேபியர்கள் பெர்சிய நாட்டை கைப்பற்றியபோது, அவர்களிடமிருந்து சதுரங்க விளையாட்டை கற்றுக்கொண்டனர். அரேபிய மன்னர்களிடையேயும் இந்த விளையாட்டு பிரபலமானது.

எனவே, அப்போது அரேபியர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்த ஈராக், சிரியா, போன்ற நாடுகளுக்கும் சதுரங்க விளையாட்டு பரவியது. மேலும், அரேபியர்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில், பகடைக்காய் வைத்து விளையாடும் முறையை நீக்கி, உருவத்துடன் இருந்த காய்களை, உருவமில்லாமல் வடிவமைத்து, விளையாட்டில் சில மாற்றங்களை கொண்டுவந்தனர். பின் எட்டாம் நூற்றாண்டில், சீனா மற்றும் கொரியாவிற்கு சதுரங்கம் பரவியது. அதனைத்தொடர்ந்து, மங்கோலியா வழியே ரஷ்யாவிற்கு பாரசீகத்தின் வழியாக ஐரோப்பாவிற்கும் பரவியது. ஒவ்வொரு, நாட்டிற்கு பரவும் போதும், அந்தந்த நாடுகள் சதுரங்க விளையாட்டை அவர்களுக்கேற்றார் போல் மாற்றினர். ஆனால், ஐரோப்பாவில் தான், இந்த விளையாட்டு தற்போதைய விளையாட்டு வடிவத்தை பெற்றது. 15ம் நூற்றாண்டில் இத்தாலி, சதுரங்க விளையட்டில் ஒரு புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியது. அது தன் ராணி என்ற கூடுதல் சிறப்பு. ராணியால் அனைத்து பக்கமும், அனைத்து வழியிலும் சென்று தாக்க முடியும். இதனை அறிமுகப்படுத்தி விளையாட்டின் விதிகளை முறைப்படுத்தினார். பெண்களை வீரமங்கைகளாக போர்களத்தில் அங்கீகரிக்கும் வகையில் ராணியை அறிமுகப்படுத்தியதால், இந்த விளையாட்டு மேலும் பிரபலமடையத் தொடங்கியது. 1497ம் ஆண்டு, சதுரங்க விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்ற புத்தகத்தை ஸ்பெயினில் வெளியிட்டார் எழுத்தாளர் Luis Ramirez De Lucena. 18ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு உலகின் மூலைமுடுக்கெங்கும் பரவத்தொடங்கியது. 1851ம் வருடம், லண்டனில் உலக அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. அதில் ஜெர்மனியைச் சேர்ந்த Adolf Anderssen வெற்றி பெற்று உலகின் சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் என்ற பெயரை பெற்றார். ஆனால், அதுவரை சதுரங்க விளையட்டிற்கு என கூட்டமைப்பு எதுவும் இல்லை. 1924 ஜூலை 20ம் தேதி அன்று, பாரிஸில் நிறுவப்பட்டது.

1924 ஒலிம்பிக்கில் சதுரங்க விளையாட்டியும் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் முதல்முறை ஆடுபவருக்கும், அனுபவசாலிகளுக்கும் இடையே வேறுபாடு கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருந்ததால் அது தோல்வியடைந்தது. கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே ​​முதல் அதிகாரப்பூர்வமற்ற செஸ் ஒலிம்பியாட் பாரிஸில் நடத்தப்பட்டது. அதன் முடிவில் தான் சர்வ்தேச் செஸ் சம்மேளன் கூட்ட்மைப்பான FIDE அமைக்கப்பட்டது. இந்த நாள் தான் ’உலக செஸ் தினமாக’ கொண்டாடப்படுகிறது. பாரிஸை தொடர்ந்து 1927ல் hungaryயிலும் அதிகார்ப்பூர்வமற்ற chess ஒலிம்பியாட் நடத்தப்பட்டது. 1927ல் முதல் அதிகாரப்பூர்வ ஒலிம்பியாட் லண்டனில், FIDEஆல் நடத்தப்பட்டது. அது முதல், இரண்டாம் உலகப் போர் வரை, ஒலிம்பியாட் போட்டிகள் ஆண்டுதோறும் அல்லது ஒழுங்கற்ற இடைவெளியில் நடத்தப்பட்டு வந்தது. 1950 முதல் தற்போது வரை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலகப் போரில் தொடங்கி, தற்போது வரையிலும், 70 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யர்கள் தான் சதுரங்க விளையாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சோவியத் ஒன்றிய ஆட்சியின் ஆரம்ப நாட்களில் கூட, சதுரங்கம் விளையாட்டு, ஒரு புத்திசாலியான தலைமையுடன் தொடர்புடையதகக் கருதப்பட்டது.

அப்பொது ரஷ்யாவில், பொது பூங்காக்கள், நகர நடைபாதை ஓரங்களிலெல்லாம் கூட, தினசரி போட்டிகளுக்கான இடமாக, ஆர்வலர்கள் ஒருவருக்கொருவர் சதுரங்க ஆட்ட போட்டியில் ஈடுபட்டனர். 1920ல் சதுரங்க விளையாட்டை ஆட்சியாளர்களுக்கு பயனுள்ள விளையட்டாக விளாடிமிர் லெனின் கருதியதாக, ரஷ்ய கவிஞர் விளாடிமிர் மாயகோவ்ஸ்கி பதிவிட்டுள்ளார். தற்போது அதிபர் விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு தொடர் குடைச்சல் கொடுத்து வரும், கடுமையான விமர்சகர்களில் ஒருவரான கேரி காஸ்பரோவ், இளம் வயதிலேயே, உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றவறாவார். அடிப்படையிலேயே ரஷ்யர்கள் சதுரங்க போட்டிகளில் ஆர்வம் கொண்டதால், வியூகங்கள் வகுக்கும் திறன் அவர்கள் மத்தியில் அதிகம் வளர்ந்திருந்தது. இதனாலேயே ரஷ்ய ஆட்சியாளர்கள் முக்கிய முடிவுகளை தாங்களே எடுத்து, திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்து வந்தனர். ஆலோசனை கூற ஆலோசகர்களை ஆட்சியாளர்கள் யாரும் வைத்துக்கொண்டதில்லை. சதுரங்க ஆட்டத்தினால் ரஷ்யர்களின் அறிவுத் திறன் அந்த அளவு வளர்ந்திருந்தது. உலகிலேயே ரஷ்யாவின் kgb உளவுத்துறை சிறந்து விளங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சொல்லப்போனால், சர்வதேச செஸ் சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் ஆர்க்கடி துவோர்கோவிச்சும் ரஷ்யர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், எப்பேற்பட்ட சதுரங்க ஆட்டக்காரரும் இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்தை தோற்கடிக்க திணரியுள்ளனர் என்பதே உண்மை. 2003ம் ஆண்டு FIDE உலக செஸ் கூட்டமைப்பு நடத்திய போட்டியில் வென்று `உலகின் அதிவேக சதுரங்க வீரர்’ என்ற பட்டத்தை, தமிழ்நாட்டை சேர்ந்த 34 வயதுடைய விஸ்வநாத் ஆனந்த் பெற்றார். 14 வயதில் இந்திய செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், 2000ம் ஆண்டு நடைபெற்ற உலக சதுரங்க இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் `அலெக்ஸீ ஷீரோவை’ வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். 2007ம் ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து, 2008, 2010, 2012 என அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து 5 முறை சதுரங்கத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்று வீழ்த்த முடியாத சாதனையளாராக திகழ்ந்தார். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என இந்திய அரசின் அங்கீகாரத்தை இளம் வயதிலேயே பெற்றவர். செஸ் விளையாட்டில் பல்வேறு விருதுகளையும் சாதனைகளையும் கடந்து, உலகெங்கும் செஸ் விளையாடும் பலருக்கும் ரோல்மாடலாக மிளிருகிறார் தமிழர் விஸ்வநாத் ஆனந்த். அந்த சாதனையை எட்டுவதற்கும், முறியடித்து மேலும் முன்னேறுவதற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மற்றுமொரு ஒரு இளம் வீரரும் வளர்ந்து வருகிறார். அவர் தான் 16 வயது சதுரங்க ஆட்ட வீரர் பிரக்ஞானந்தா. 2013ம் ஆண்டு நடந்த 8 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் பிரக்ஞானந்தா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார். 2016ம் ஆண்டு, தனது 10 வயதில், சதுரங்க ஆட்டத்தில் இளைய சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும் வென்றார்.

12 வயதில், ரஷ்யாவின் செஸ் நட்சத்திரம் செர்ஜி கர்ஜாகினுக்குப் பிறகு இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றார். விஸ்வநாத் ஆனந்த் தான் இவரை கவர்ந்த சிறந்த ஆட்டக்காரர். பிரக்ஞானந்தா இளைய கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்ற பிறகு விஸ்வநாதன் ஆனந்த், அந்த இளம் வீரருக்கு தனது வாழ்த்துக்களை ட்வீட் மூலம் தெரிவித்தார். 2022 பிப்ரவரி 22ம் தேதி ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து அனைவரையும் ஆச்சரியித்தில் ஆழ்த்தினார் பிரக்ஞானந்தா. இதன்மூலம், உலக செஸ் அரங்கையே மீண்டும் ஒருமுறை தன்பக்கம் கவனம் ஈர்த்து, ஒரு பிரமிப்பான சாதனையை படைத்தார். பிரக்ஞாநந்தா போன்ற அதிரடி ஆட்டக்காரர்களின் அணிவகுப்பில் இந்தியா ஒரு பக்கம், மீண்டும் சதுரங்கத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்க துடிக்கும் ரஷ்யா ஒருபக்கம் இருக்க, நாங்கள் தான் வெற்றிப்பெறப்போவது என முழு உத்வேகத்துடன் உலக நாடுகளின் வீரர்களும் வீராங்கனைகளும், கடும் பயிற்சியில் ஈடுபட்டு, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தயாராகி வருகின்றனர். 2 வருட கொரோனா பெருந்தொற்று பேரிடருக்குப்பின், உலகமே உற்றுநோக்கும் போட்டியாக சென்னையில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

– பா.பிரபாகரன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Arivazhagan Chinnasamy

வரும் காலங்களில் மரணத்தை வெல்வது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் -இஸ்ரோ தலைவர்

EZHILARASAN D

இமாச்சல் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

EZHILARASAN D