திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே அரசு தொடக்கப்
பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி,அந்தப் பள்ளியின் மாணவர்கள்
பேரணி நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளது. இந்த பள்ளியில் நவீன ஸ்மார்ட் போர்ட் வசதியுடன் தனி கட்டிடம், நூலகம், தோட்டம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன வசதியுள்ள கழிவறை ஆகியவை உள்ளன.
மேலும், விளையாட்டு மைதானம், அரங்க மேடை மற்றும் உணவுக்கூடத்தில் உண்ண வசதியாக மேஜை ஆகியவை உள்ளன. இதுதவிர, மாணவர்களின் தனித்திறமை வெளிக்கொணர்வதற்கான அறிவியல் கண்காட்சி மற்றும் இசை, நாடக, நடன பயிற்சிகள் தரப்படுகின்றன. மாணவர்களின் நிர்வாக திறமைக்கும், சுய ஒழுக்கத்திற்கும் தேவையான பயிற்சிகளும், கல்விசார் களப்பயணங்களும் மேற்கொள்ளப் படுகின்றன.
நகரப்புற பள்ளிகளுக் இணையாக எல்லா வசதிகளும் உடைய இந்த பள்ளியின் மாணவர் சேர்க்கைக்காக, இந்த தொடக்கப் பள்ளி மாணவர்கள் பதாகைகள் பிடித்தவாறு வேண்டுகோள் முழக்கங்கள் எழுப்பி, அருகிலுள்ள கல்லுக்கொல்லைமேடு வரை பேரணியாக சென்றனர். இதில் தலைமை ஆசிரியை கண்ணகி, ஆசிரியைகள் ரீனா, சுமதி மற்றும் 60 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
—கு.பாலமுருகன்







