முக்கியச் செய்திகள் கதைகளின் கதை சினிமா

காவிய கவிஞர் வாலியின் கதை

இரண்டாயிரத்துக்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உரையாற்றிய மேடைகளில் எல்லாம், தவறாது இடம் பிடித்தவர் ஆன்மிக பற்றாளரான கவிஞர் வாலி. கருணாநிதியும் வாலியும் இருவேறு சித்தாந்தங்களை பின்பற்றியவர்கள். இருவருக்கும் இடையே வேறுபட்ட பண்பாட்டு தொடர்பு இருந்தது. ஒருவருக்கு கருப்புதான் கொள்கை உடை. மற்றொருவருக்கோ சிவப்பே நெற்றித்திலகம். அண்ணாவின் தம்பியாக மேடை மேடையாக ஏறி கருணாநிதி பகுத்தறிவு பேசிக்கொண்டிருந்த போது, கவிதை வரிகள் மூலம் ஆன்மிகம் பேசிக் கொண்டிருந்தார் வாலி. ஆனாலும், இருவரையும் இணைத்தது தமிழ். நெற்றி நிறைய விபூதியும் குங்கும திலகமும் இட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்துவிட்டு கவிதை எழுத அமரும் வாலிக்கு, கருணாநிதியை நண்பனாக்கியது திரையுலகம். தன் இறுதிக்காலம் வரை கருணாநிதியின் நண்பனாக உற்றத் தோழனாக வாழ்ந்து மறைந்தவர் வாலிப கவிஞர் என்றழைக்கப்பட்ட வாலி. கவிஞர், பாடலாசிரியர், வசன கர்த்தா என பன்முக திறனாளராக வாழ்ந்து மறைந்த வாலியின் வசந்த வரலாற்றை திரும்பி பார்க்கிறது இன்றைய கதைகளின் கதை.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆச்சார அனுஷ்டாங்கங்களை பின்பற்றிய அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர் வாலி. வாலியின் குடும்பத்துக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் தான் பூர்வீகம். துவக்கத்தில் வாலியின் குடும்பத்தினர் அங்குதான் வசித்தனர். பணிநிமித்தமாகவே குடும்பம் திருச்சிக்கு இடம்பெயர்ந்தது. வாலியின் தந்தை ஸ்ரீநிவாச அய்யங்கார் ஆசார அனுஷ்டானங்களை அதிகம் கடைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர். சை உணவைத் தவிர வேறெதையும் கனவிலும் நினைத்துப்பார்க்காதவர். ஆனால், அவர் பார்த்த உத்தியோகமோ, மீன்களுக்கு உணவிடுவது. மீன்களுக்கு உப்பு அடைப்பதையும் மரத்திலிருந்து இறக்கிய கள்ளுக்குச் சீல் வைப்பதையும் மேற்பார்வையிடும் ஆய்வாளராகப் பணியாற்றினார் ஸ்ரீநிவாச அய்யங்கார். இந்த நிலையில் தான் ஸ்ரீரங்கத்துக்கு இடம்பெயர்ந்தனர். இங்குதான் 1931 அக்டோபர் 29ம் தேதி ஸ்ரீநிவாச அய்யங்கார் – பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் வாலி. இந்த குழந்தைக்கு ஸ்ரீரங்கத்து நாயகன் ரங்கநாதனை நினைவுக்கூறும் வகையில், ரங்கராஜன் என்றே பெயரிட்டனர். தமிழ் சினிமாவில் பேசும் படம் வெளிவந்த 1931ம் ஆண்டு பிறந்த இந்த ரங்கராஜன், தமிழ்சினிமாவிலேயே தலைசிறந்த கவிஞராவார் என்று ஒருவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எல்லா குழந்தைகளையும் போல ஓடியாடி விளையாடி கொண்டும் கல்வி கற்றுக்கொண்டும் இருந்த ரங்கராஜனுக்கு இரண்டு விஷயங்கள் மீது தீராக்காதல் இருந்தது. ஒன்று, தமிழ். மற்றொன்று, ஓவியம். ரங்கராஜன் எழுதும் எழுத்துகள் எல்லாம் கவிதையாகின, வரையும் கோடுகள் எல்லாம் ஓவியங்களாகின. ரங்கராஜனின் ஓவியங்களை எல்லாம் பார்த்து ரசித்த அவருடைய தோழர் பாபுவுக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையின் ஓவியர் மாலியின் நினைவு வந்தது. அந்த நொடியில் நண்பன் ரங்கராஜனுக்கு வாலி என்ற புனைப்பெயரைச் சூட்டினார் பாபு. ரங்கராஜன் பின்னாளில் கவிஞராக மாறியப் பிறகும் தன் பெயரை வாலி என்றே குறிப்பிட்டார். ஒருமுறை எம்ஜிஆர் அழைத்து, “வாலி, இந்தப் படத்தில் உங்களுக்குப் பாட்டெழுத வாய்ப்பில்லை” என்றார். அதைக் கேட்டு கொஞ்சமும் தடுமாறாமல் பதில் சொன்ன வாலி, “என் பெயர் இல்லாமல் உங்களால் இந்தப் படத்தை எடுக்கவே முடியாது” என்றார். அந்தப் படம் தான், உலகம் சுற்றும் ”வாலி”பன். உண்மையில் வாலி கூறியதை கேட்டு எம்.ஜி.ஆர் சிரித்துவிட்டார்.

தமிழின் மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும் வருகிற கதையெழுதும் ஆர்வம் வாலிக்கும் இளவயதில் வந்தது. சிறுகதை ஒன்றை எழுதி கல்கிக்கு அனுப்பினார். அந்தக் கதை பிரசுரத்துக்குத் தகுதியுடையது அல்ல என்று சொல்லித் திருப்பியனுப்பப்பட்டது. படைப்பாளிக்கே உரிய செருக்கு வாலிக்கும் இருந்தது. “என் கதையின் எடை என்னவென்று எனக்குத் தெரியும், உங்கள் துலாக்கோல் துருப் பிடித்திருக்கிறது என்பதுதான் உங்களுக்குத் தெரியவில்லை” என்று கல்கிக்குக் கோபக் கடிதம் எழுதினார். எழுத்து கைகூடிவந்த மகனை ஓவியராக பார்க்க விரும்பிய தந்தை ஸ்ரீநிவாச அய்யங்கார், வாலியை சென்னையிலுள்ள ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் சேர்த்துவிட்டார். மனதுக்குப் பிடித்த படிப்பு என்பதால் வாலியும் மிகுந்த உற்சாகத்துடன்தான் தொடங்கினார். ஆனால், அந்த உற்சாகம் ஓராண்டுக்கு மட்டுமே நீடித்தது. மீண்டும் ஸ்ரீரங்கத்துக்கே சென்றுவிட்டார். வந்த கையோடு வாலி பப்ளிசிட்டீஸ் என்கிற பெயரில் விளம்பர நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ஓவியமும் எழுத்தும் தொழிலுக்குக் கைகொடுத்தன. ஆனால், அது பொருளாதார ரீதியாக லாபம் தரவில்லை. அப்போதுதான் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் வந்தது. குறிப்பாக, மருதநாட்டு இளவரசி படத்தின் வசனத்தை கேட்டு புல்லரித்தது வாலிக்கு. இதுபோன்ற தீப்பொறி வசனங்களை எழுதி, புகழ்பெற வேண்டும் என்ற எண்ணம் வாலியின் மனத்துக்குள் எழுந்தது.

கதை, கவிதையைத் தாண்டி நாடகத்தின் மீதும் ஆர்வம் முளைவிட்டது. பள்ளிக்காலத்தில் துணைப்பாட நூலில் வந்த கிங்லியர் கதையை தளபதி என்ற பெயரில் நாடகமாக எழுதினார். அதுதான் வாலியின் முதல் அதிகாரபூர்வ நாடகம். ஸ்ரீரங்கத்தில் வைத்து தளபதி நாடகத்தை அரங்கேற்றம் செய்தார் வாலி. அந்த நாடகத்தில் திமிர் பிடித்த தளபதி பாத்திரம் ஒன்றை வடிவமைத்திருந்தார். அந்த நாடகத்தில் தளபதியைக் கடுமையாக விமரிசிக்கும் வசனங்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. அந்த வசனங்கள் வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியுடன் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டன. ஆச்சரியத்துக்குக் காரணம், இளைஞரான வாலியின் சொல்லாடல்கள். மற்றொரு காரணம் அண்ணா. அப்போது அண்ணாவுக்குக் கட்சிக்குள் தளபதி என்ற அடைமொழி இருந்தது. பெரியாரின் தளபதி என்ற அடிப்படையில் அவரைத் தளபதி என்றே அழைத்தனர். இந்த நிலையில் தான், அந்த நாடகத்தில் தளபதி கதாபாத்திரம் விமர்சிக்கப்பட்டிருந்தது. உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் சிலர் வசனம் எழுதிய வாலியைத் தாக்குவதற்காகத் தயாராகினர். பிறகு பெரிய மனிதர்கள் சிலரின் தலையீட்டால் வாலி மீதான தாக்குதல் தடுக்கப்பட்டது.

நாடகங்களை எழுதி, அவற்றுக்கு வசனமும் எழுதக்கூடியவரான வாலி, நண்பர்களின் நாடகங்களுக்குப் பாடல்களை எழுதிக் கொடுத்து வந்த காலகட்டம் அது. பேராசை பிடித்த பெரியார் என்ற பெயரில் நாடகம் ஒன்றை எழுதி நடத்தினர் வாலியின் நண்பர் எம்.ஆர்.பாலு. இங்கே பெரியார் படும் பேராசை என்பது தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் ஆசையைக் குறிக்கிறது. அந்த நாடகத்துக்காக வாலி எழுதிய பாடல்தான், இவர்தான் பெரியார், இவரை எவர்தான் அறியார்” என்ற பாடலாகும். பெரியாரின் குணாம்சங்களை, செயல்பாடுகளை விவரிக்கும் இந்தப் பாடல் இன்றும் மேடைகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த நாடகத்தைப் பார்க்கவந்த பெரியாரை முதன்முறையாக நேரில் சந்தித்தார் வாலி. தளபதி நாடகம் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்ததால், அடுத்தடுத்து நாடகங்களை எழுதி, அரங்கேற்றிக்கொண்டிருந்தார். அப்படி வாலி எழுதிய நாடகங்களுள் ஒன்று, மலர் மஞ்சம். நாடகத்துக்குத் தேதி குறித்து, ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் முன்பணமும் வாங்கிவிட்டார். டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. ஆனால், நடிக்க வேண்டிய நடிகைதான் வரவில்லை. காய்ச்சல் என்று கூறி ஒதுங்கிவிட்டார் நடிகை. நிலைமை சிக்கலாகிவிட்டது.

அண்மைச் செய்தி: ‘`குடியரசுத் தலைவர் தேர்தல்; வாக்களித்த அமைச்சர் நாசர், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்’

இந்த நேரத்தில் தான், “ரேடியோ நாடகத்தில் நடிப்பதற்காக ஒரு பெண் வந்திருக்கிறார். அவரை உங்கள் நாடகத்தில் நடிக்கவைக்கலாம்” என்றார் வாலியின் நண்பர் ஒருவர். வாலிக்கு கொஞ்சம் போல மூச்சு வந்தது. உடனடியாக அந்த நடிகையிடம் சென்று பேசினர். நடிப்பதற்கு அந்தப் பெண் தயார். ஆனால், ஒரேயொரு சிக்கல். அந்தப் பெண் வந்திருந்த நாடகக் குழுவினர் அனைவரும் அன்றைய தினமே ஊருக்குப் புறப்படுவதாகத் திட்டமிட்டிருந்தார்கள். ஆகவே, அந்த நடிகையை மட்டும் தனியே விட்டுச் செல்லமுடியாத நிலை. பிறகு நடன ஆசிரியர் ஒருவர் அந்த நடிகைக்குத் துணையாக இருக்கச் சம்மதிக்கவே, வாலியின் நாடகத்தில் நடிக்க சம்மதித்தார் அந்த நடிகை. விடிய விடிய நாடகத்துக்கான ஒத்திகை நடந்தது. மறுநாள் நாடகமும் சிறப்பாக நடந்தது. வாலிக்கு நிம்மதி பெருமூச்சாக வந்தது. அந்த நடிகைக்கு நன்றி கூறி, பத்திரமாக ரயிலேற்றி அனுப்பிவைத்தார். ஆபத்தில் உதவிய அந்த நடிகையின் பெயர், தர்மா என்கிற தர்மாம்பாள். ஆம். திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள்தான் அந்த தர்மாம்பாள்.

திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதவேண்டும் என்ற கனவை வளர்த்துக்கொண்டிருந்தார் வாலி. ஆனால் வாய்ப்புக்குதிரைதான் வாலியின் வாசலுக்கு வந்து சேரவில்லை. ஸ்ரீரங்கத்துக்கு உள்ளேயே உட்கார்ந்துடு கவிபாடினால் வாய்ப்பு வந்து வாரி அணைக்காது, நேரே சென்னைக்குக் கிளம்பு என்றார்கள் நண்பர்கள். இல்லை வாலி, கதை எழுது, கவிதை பாடு, நாடகம் போடு, ஆனால் பிழைப்புக்கு வேறு வேலை பார்த்துக்கொள் என்றார்கள் சில நலன் விரும்பிகள். இரண்டுமே நல்ல யோசனைதான் என்றபோதும் வாலியின் மனம் சென்னைக்குச் செல்வதிலேயே இருந்தது. இதனால், வாய்ப்புத்தேடி சென்னைக்குப் புறப்பட்டார். சென்னை வந்திறங்கிய வாலிக்கு அடைக்கலம் கொடுத்தவர் திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பா. அங்கு தங்கியபடியே நண்பர்கள் உதவியுடன் இசையமைப்பாளர்கள் வீடுகளில் ஏறியிறங்கி வாய்ப்பு கேட்டார்.

ஜி.ராமநாதன், டி.ஜி.லிங்கப்பா, அருண் ராகவன், கோவிந்தராஜுலு நாயுடு, ஜி.கே.வெங்கடேஷ் என்று பல இசையமைப்பாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வாலிக்கு ஏற்படுத்திக்கொடுத்தார் வாலியின் நண்பர் கோபி என்கிற வி.கோபாலகிருஷ்ணன். ஆனால், அந்தச் சந்திப்புகள் எல்லாம் வாலிக்கு வசந்தத்தைக் கொடுக்கவில்லை. ஆனாலும் சோர்ந்துவிடாமல் வாய்ப்பு தேடினார். ஒருமுறை இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசனிடம் தனது பாடல் வரிகள் சிலவற்றை வாசித்துக்காட்டினார் வாலி. பாடல் வரிகள் நன்றாக இல்லை என்பதை நாசூக்காகச் சொல்லிவிட்டார் எம்.பி.சீனிவாசன். என்றாலும், அந்தப் பாடலைப் பின்னாளில் வெளியான படத்தில் பயன்படுத்தினார் வாலி. அது வாலிக்கு மட்டுமல்ல, எம்.ஜி.ஆருக்கும் நீடித்த புகழைக் கொடுத்தது. அந்தப் பாடல், படகோட்டி படத்தில் இடம்பெற்ற “கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.. அவன் யாருக்காகக் கொடுத்தான்’பாடல்.

அப்போது, வாலி சென்று வாய்ப்பு கேட்காத பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.வி மட்டுமே. அவரைச் சந்திக்கும் வாய்ப்பையும் வாலியின் நண்பர் கோபியே ஏற்படுத்திக் கொடுத்தார். வாலியின் கவிதைகளையும் பாடல்வரிகளையும் வாசித்துப் பார்த்த எம்.எஸ்விக்கு வாலியின் எழுத்து மீது நம்பிக்கை ஏற்படவில்லை. அதை நாசூக்காகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். அவர் சொன்னதன் ஒருவரிச் சாரம், “வாலிக்கு சினிமா வேலைக்கு ஆகாது, சொந்த ஊரில் வேறு வேலை பார்க்கச் சொல்லுங்கள்” என்பதுதான். அந்த வார்த்தை வாலியின் தன்னம்பிக்கை பொதிந்த மனத்துக்குள் தாக்குதலை ஏற்படுத்தியது. காரணம், அதைச் சொன்னவர் சாதாரண மனிதர் அல்ல, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இனிமேல் சென்னையில் இருந்து சினிமா வாய்ப்பு தேடிப்பெறுவது சாத்தியமில்லை, ஸ்ரீரங்கத்துக்கே சென்றுவிடலாம் என்ற எண்ணம் வாலிக்கு வந்திருந்தது. அப்போது வாலிக்கு வித்தியாசமானதொரு வாய்ப்பு தேடி வந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

Jeba Arul Robinson

தேசிய பங்குசந்தை முறைகேடு: ஆனந்த் சுப்பிரமணியன் கைது

Halley Karthik

உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்

G SaravanaKumar