முக்கியச் செய்திகள் கதைகளின் கதை கட்டுரைகள் சினிமா

மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் மெகா ஸ்டார் மம்முட்டியின் கதை


தினேஷ் உதய்

  • ஜவுளி வியாபாரியின் மகன், திரைத்துறையில் கோலோச்சியது எப்படி?
  • வழக்கறிஞர் மம்முட்டி, மெகாஸ்டாராக ஆனதன் பின்னணி என்ன?

பிரம்மாண்டங்கள் நிறைந்த தமிழ் சினிமாவில், நட்பை வெளிப்படுத்தும் பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், 1991-ல் வெளிவந்த தளபதி அளவுக்கு இன்றுவரை ஒரு படம் நட்பை போற்றியதில்லை. காரணம் கர்நாடகாவிலிருந்து வந்த ரஜினியையும், கேரளாவில் இருந்து வந்த மம்மூட்டியையும், தமிழ் சினிமா என்கிற ஒற்றை புள்ளியில் இணைத்திருந்தார் மணிரத்னம். நண்பர்களுடன் நாம் சண்டைப் போடும் போதெல்லாம் நொடிப்பொழுதில் மின்னல் போல வெளிப்படும் வார்த்தைகள், நட்புன்னா என்னனு தெரியுமா ? என்பது தான். இது ஒருசாதாரண உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை தான். ஆனால் ஒரு நடிகராக அந்த திரைப்படத்தில் அந்த கதாப்பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப ரஜினி பேசியது அனைவரையும் கட்டி போட்டது.

தமிழ் சினிமாவில் மம்முட்டிக்கு, தளபதி ஒன்றும் முதல் படமல்ல. அதற்கு முன்பே மௌனம் சம்மதம் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படமே மம்முட்டி என்ற கலைஞனை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அழகன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பரவலான கவனத்தை பெற்றார் மம்முட்டி. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்த மலையாள சினிமாவின் மகன் மம்முட்டியை கேரள திரை ரசிகர்கள் மெகாஸ்டார் என கொண்டாடுகின்றனர். அடிப்படையில் மம்முட்டி குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் சம்பந்தமே கிடையாது. மம்முட்டியின் தந்தை இஸ்மாயில் துணி மற்றும் அரிசி, வணிகம் செய்து வந்த ஒரு வியாபாரி. அவருக்கும் அவரது மனைவி பாத்திமாவுக்கும் பிறந்த 6 குழந்தைகளில் மூத்த பிள்ளை தான் மம்முட்டி. 1951ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பிறந்த மம்முட்டிக்கு பெற்றோர் ஆசை ஆசையாக வைத்த பெயர் முகம்மது குட்டி என்பது தான். குடும்பத்தின் தலைமகனாக இருந்த முகம்மது குட்டிக்கு இப்ராஹிம்குட்டி, ஜகாரியா என்ற இரண்டு தம்பிகளும், அமீனா, சவுதா, ஷஃபினா என மூன்று தங்கைகளும் இருந்தனர்.ஆரம்பத்தில் குலசேகரமங்கலத்தில் உள்ள புனித ஆல்பர்ட் பள்ளியில் தான் மமுட்டி படிப்பை தொடங்கினார். ஆனால் 1960ல் குடும்பம் எர்ணாகுளத்திற்கு, இடம்பெயர்ந்ததால் எர்ணாகுளம் அரசுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். பள்ளிக் கல்வியை முடித்த மம்முட்டி எர்ணாகுளத்திலுள்ள மகாராஜாஸ் கல்லூரியில் பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் சேர்ந்த போதுதான் முகம்மது குட்டி என்ற தனது பெயர் பட்டிக்காட்டுத்தனமாக இருப்பதாக மம்முட்டிக்குள் தோன்றியது. உடனே முகம்மதுகுட்டி என பெற்றோர்கள் வைத்த பெயருக்கு பதிலாக ஓமர் ஷெரிப் என தனக்குத்தானே பெயர் சுட்டிக்கொள்ள விரும்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகர் திலீப்குமார் யூசுப்கானாகவும், பிரேம் நசீர் அப்துல் காதராகவும் இருந்தவர்கள் தானே. அதே போல தன் பெயரையும் மாற்றிக்கொண்டால் பரவலாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் என்று நினைத்தார். ஓமர் ஷெரீஃபாக தனது பெயரை மாற்ற நினைத்தது அவருடன் நெருக்கமாக இருந்த சிலருக்கே தெரிந்திருந்தது. அதே நேரம் முகம்மது குட்டி என்ற பெயரை சுருக்கி, மம்முட்டி என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் அழைத்தனர். பட்டப்பெயராக இருந்த மம்முட்டி என்பதை முகம்மது குட்டி வெறுத்தாலும், முகம்மது குட்டியை, மம்முட்டி என்றே அழைக்க காலம் தீர்மானித்தது. சினிமா மீது தீராக்காதல் கொண்டிருந்த மம்முட்டி கல்லூரி படிக்கும் போதே சினிமாவில் நடிக்க தன்னை தயார் செய்து கொண்டார். கல்லூரி படித்துக் கொண்டிருந்தப் போது, 1971ல் வெளியான “அனுபவங்கள் பாலிச்சக்கல்” என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் மம்முட்டி. இந்த படம் தான், பின்னாளில் பல தேசிய விருதுகளை பெற்ற மெகாஸ்டார் மம்முட்டியின் சினிமா வாழ்க்கைக்கு தொடக்க புள்ளியாக அமைந்தது.

பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த மம்முட்டி, சினிமாவில் நடிப்பது அவரது குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. ஆரம்ப காலங்களில் சினிமாவில் நடிக்க கூடாது என குடும்பத்தினர் எச்சரித்தனர். ஆனால், சினிமாவில் நடித்தே தீர வேண்டும் என்ற வெறி, முகம்மது குட்டியை தொடர்ந்து சினிமாவை நோக்கி இழுத்துச் சென்றது. பி.ஏ படிப்பை முடித்த பிறகு எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். மலையாள சினிமாவில் தான் கொடிக்கட்டி பறக்கப்போவதை அறிந்திராத மம்முட்டி, 2 ஆண்டுகள் வழக்கறிஞர் பயிற்சியும் மேற்கொண்டார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவரை விடவில்லை. கல்லூரி படிக்கும் போது நடித்த அனுபவங்களை வைத்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்தார். “அனுபவங்கள் பாலிச்சக்கல்” திரைப்படத்திற்கு பிறகு காலச்சக்கரம் என்ற படத்தில் நடித்தார் மம்முட்டி. ஆனால், இந்த படம் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்த மம்முட்டிக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. எனினும் நடிப்பின் மீதான ஆர்வம் மட்டும் குறையவில்லை. அதே நேரம் குடும்பச்சூழல் காரணமாக சினிமா பயணத்தையும் தொடரமுடியத நிலை இருந்தது.சினிமா வாய்ப்பு கதவை தட்டாத நேரங்களில் தன் நடிப்பு திறமைக்கு தீனி போட மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் 1979ல் “தேவலோகம்” என்ற திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் மலையாள திரையுலகின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயரால் இயக்கப்படுகிறது என்ற செய்தி மம்முட்டியை மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்துச் சென்றது.

வழக்கறிஞர் பணி ஒருபுறமும், நடிப்பு மறுபுறமுமாக, “தேவலோகம்” படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் மம்முட்டி. இப்படம் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்று நம்பியிருந்த மம்முட்டிக்கு பேரிடியாக வந்தது அந்த செய்தி. நிதி பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து படபிடிப்பு நடத்த முடியாத நிலையில் தேவலோகம் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில், 1979ம் ஆண்டு மே 6 ஆம் தேதி சுல்ஃபத் குட்டி என்ற பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் மம்முட்டி. அதுவரை தனக்கு பெண் நண்பர்களே இல்லை எனவும், மனைவி தான் தன்னுடைய முதல் பெண் தோழி எனவும் அவர் பல முறை குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு சுருமி என்ற மகளும், துல்கர் சல்மான் என்ற மகனும் உள்ளனர். குடும்பத்தின் மீது அதீத பாசம் கொண்ட மம்முட்டி குடும்ப நிகழ்ச்சிகள் எதையும் தவறவிடுவதில்லை.அதற்கு முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது. வழக்கறிஞராக பணியாற்றிய மம்முட்டிக்கு ஒரு வயதான தம்பதியின் விவாகரத்து வழக்கு வந்தது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த போது 75 வயது மதிக்கத்தக்க அந்த மூதாட்டி திடீரென மயங்கி விழுந்து விட, உடனே பதறிப்போன அவரது கணவர் அந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனைகளை தாண்டி, காதலால் மீண்டும் இணைந்தனர். அன்பால் இருவரும் சமாதானம் அடைந்ததால், விவாகரத்து வழக்கும் தள்ளுப்படி செய்யப்பட்டது. இந்த நிகழ்வு மம்முட்டியின் மனதில் ஆழமாக பதிந்தது.

குடும்பம் ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும், சினிமாவில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்தது மம்முட்டிக்கு பெரும் மன உளைச்சலை உண்டாக்கியது. 1980 ல் மீண்டும் எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதி எம். ஆசாத் இயக்கிய “வீல்கணுண்டு ஸ்வப்ணங்கள்” எனும் மலையாள திரைப்படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்தார் மம்முட்டி. இந்த திரைப்படம் தான் அவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அதுவரை சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த மம்முட்டிக்கு, மேலா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலா திரைப்படத்தில் சர்க்கஸில் பைக் சாகசம் செய்யும் சாகச வீரராக நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்காக சில பயிற்சிகளையும் மேற்கொண்டிருந்தார் மம்முட்டி. கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் மலையாள சினிமாத்துறையில் மம்முட்டி ஒரு நட்சத்திர நடிகராக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட தருணம் அது. 1981ல் பி.ஜி.விஸ்வாம்பரன் இயக்கத்தில் வெளியான ஸ்போதனம் திரைப்படம், மம்முட்டி மீது ரசிகர்கள் அதிக கவணம் செலுத்த காரணமாக அமைந்தது. படப்பிடிப்பின் போது சிறைச்சாலையின் பெரிய மதில் சுவரை தாண்டும் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த காட்சியில் நடிக்க பாதுகாப்புக்காக உடலில் பஞ்சு போன்ற மெத்தையை கட்டிக்கொண்டு குதிக்க வேண்டும். படத்தின் நாயகன் சுகுமாரனுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் புதுமுகமான மம்முட்டிக்கு அளிக்கப்படவில்லை. இதனால் படத்தின் நாயகி ஷீலா, இயக்குனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் தன்னுடைய பாதுகாப்பை விட சினிமாவில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக பாதுகாப்பில்லாமல் அந்த சுவரிலிருந்து மம்முட்டியை குதிக்க வைத்தது. இதனால் மம்முட்டியின் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அந்த காயத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படபிடிப்பில் கலந்து கொண்டு படத்தை முடித்து கொடுத்தார் மம்முட்டி. இந்த விவகாரம் காட்டுத்தீ போல பரவ இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டியுள்ளது. மேலா படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் பி.ஜி.விஸ்வாம்பரன் முகம்மது குட்டி என்ற பெயரை மாற்றினார். ஜாதியும், மதமும் புரிபடாத ஒரு பெயராக இருந்தால் எல்லாத் தரப்பிலிருந்தும் கொண்டாடுவார்கள் என்றும் நினைத்தார். அக்கருத்தில் மம்முட்டிக்கும் முழு உடன்பாடு இருந்தது. அதனால் படத்தின் போஸ்டர் அடித்தபோது சஜின் என்று பெயரை மாற்றி அடைப்புகுறிக்குள் மம்முட்டி என்றும் அச்சடித்திருந்தனர்.
படம் வெளியாவதற்கு முன்பே, சஜின் என்ற பெயரை விட அடைப்புக்குறிக்குள் இருந்த மம்முட்டி என்ற பெயர் பெரிதாகப் பேசப்பட்டது. மனதால் வெறுக்கவும், எதிர்க்கவும், வேதனைப்படவும் வைத்த அந்த பெயர்தான் பிறகு எல்லோருக்கும் பிடித்தமானதாக அடையாளப்படுத்தியது.ஆனால் முதன்முதலாக அவரை தேடிவந்த சினிமா வாய்ப்பு மம்முட்டி என்ற பெயரில்தான் வந்தது. அட்வகேட் பி.ஏ.முகம்மதுகுட்டி என்ற பெயர் பலகையோடு அவர் இருந்த நாட்களில், ஒரு போஸ்ட்மேன் மம்முட்டி என்று விசாரித்தபடியே வந்தார். அவருடைய கையில் அட்வகேட் முகம்மது குட்டிக்கொரு கடிதம் இருந்தது. ஜனசக்தி ஃபிலிம்சிலிருந்து எம்.டி.வாசுதேவன் நாயர் அந்தக் கடிதத்தை மம்முட்டி என்று பெயரிட்டே அனுப்பியிருந்தார். மம்முட்டி என்ற பெயரை வெறுத்து ஒதுக்க நினைத்த அவருக்கு மீண்டும் அந்தப் பெயரால்தான் சினிமா வாய்ப்பும் தேடி வந்தது. எத்தனை பெயர்களை அவர் மாற்றினாலும், அவரது தந்தை இஸ்மாயிலும், தாய் பாத்திமாவும் அவரை மம்முது குஞ்ஞே என்று தான் செல்லமாக அழைத்தனர்.

சின்ன சின்ன கதாப்பத்திரங்களில் நடித்து வந்த மம்முட்டி திரிஷ்னா என்ற படத்தின் மூலமாக கதாநாயகன் அந்தஸ்தைப் பெற்றார். ஐவி சசி இயக்கத்தில் 1981ல் வெளியான திரிஷ்னா திரைப்படம் மம்முட்டியின் ரசிகர் பட்டாளத்தை அதிகரித்தது. கேரளாவில் பல இடங்களில் மம்முட்டியின் பெயர் எதிரொளிக்க தொடங்கியது. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார் மம்முட்டி.

கேரளாவில் நடந்த இந்து, முஸ்லீம் அரசியல் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அஹிம்சா திரைப்படத்தில் மோகன்லால் உள்ளிட்ட முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். மிகப்பெரிய நடிகர்கள் நடித்த இந்த திரைப்படம், கேரளாவில் பேசுப்பொருளாக மாறியதோடு, வெற்றியையும் பெற்றது. இந்த திரைப்படம் தான் மம்முட்டிக்கு முதல் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றுத்தந்தது.
நடிகர் முகேஷும், மம்முட்டியும் ஒரு திரைப்படத்தின் படபிடிப்பு தளத்தில் நடித்துக்கொண்டிருந்தனர். படப்பிடிப்புத் தளமே பரபரப்பாக காணப்பட்டது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் யாரிடமோ தொலைபேசியில் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார் மம்முட்டி. இதை கவனித்த முகேஷ், எல்லாம் நலம் தானே? எதற்கு இத்தனை முறை கால் செய்கிறீர்கள்? யாருக்கும் எதாவது பிரச்சனையா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மம்முட்டி எனது மனைவி ஒரு வழக்கறிஞரை தான் திருமணம் செய்து கொண்டாரே தவிர நடிகரை அல்ல என்றாராம். மம்முட்டி தன் குடும்பத்தாரிடம் தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை எப்போதும் காண்பித்து கொண்டதே இல்லை. சாதாரண மனிதரை போலவே தான், தன் குடும்பத்தினரிடம் நடந்து கொள்வார். அவர்களுக்காக எப்போதும், எதையும் அவரே முன் நின்று செய்வார். இந்த எளிமையும், அன்பும் தான் அவரை இத்தனை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நடிகர் மம்முட்டி மலையாள சினிமாத்துறையில் பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக 1982 முதல் 1987 வரை 150 க்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். 1986 இல் மட்டும் 35 திரைப்படங்களில் நடித்து சாதனைப் படைத்துள்ளார் மம்முட்டி.

90 களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ரஜினிகாந்த் கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தார். அதற்கு முன்பு ரஜினியின் நடிப்பில் வெளியான பில்லா, ரங்கா, முரட்டுகாளை, ராஜாதி ராஜா போன்ற படங்கள் வசூல் சாதனையை படைத்து வந்தது. இதனை தொடர்ந்து பி வாசு இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் 1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டியை முன்னிட்டு வெளியான பணக்காரன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 175 நாட்கள் திரையரங்கில் ஓடி வசூல் சாதனையும் படைத்தது. ரஜினியின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க தருணம் அது. எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் இளையராஜா இசையில் அதியசப் பிறவி என்ற திரைப்படம் வெளியானது.

அதே நாளில் ரஜினியின் அதிசயப்பிறவிக்கு போட்டியாக மௌனம் சம்மதம் என்ற திரைப்படம் வெளியானது. கே.மது இயக்கத்தில் மம்முட்டி தமிழில் நேரடியாக நடித்த முதல் படமான மௌனம் சம்மதம் திரைப்படத்திற்கும் இளையராஜா தான் இசையமைத்திருந்தார். இதில் ரஜினியின் அதிசயப்பிறவியை விட மம்முட்டியின் மௌனம் சம்மதம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைபெற்றது. படத்தின் த்ரில்லர் கதையோட்டமும், அமலா, ஜெய்சங்கர், சரத்குமார், நாகேஷ் போன்றோரின் நடிப்பும் மௌனம் சம்மதம் திரைப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட, இளையராஜாவின் இசை கூடுதல் வலு சேர்த்தது. குறிப்பாக கல்யாண தேனிலா பாடலும், பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்தது.

அன்று முதல் மம்முட்டிக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினர். 1991 ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அழகன் திரைப்படத்தில் நடித்தார் மம்முட்டி. விமர்சன ரீதியாகவும், வசூல் ரிதியாகவும் வெற்றிப்பெற்றது. குறிப்பாக பானுப்பிரியாவுடன், மம்முட்டி தொலைபேசியில் பேசும், சங்கீத ஸ்வரங்கள் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இன்று வரை இந்த பாடல் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
மம்முட்டி தமிழில் நடித்த முதல் படமே ரஜினியுடன் திரையரங்கில் மோதிய நிலையில் ரஜினியும், மம்முட்டியும் ஒன்றாக இணைந்து தளபதி படத்தில் நடிக்க உள்ளனர் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவத்தொடங்கியது.

அதிலும் மணிரத்னம் அந்த படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல், இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மௌனம் சம்மதம், அதிசயப்பிறவி திரையில் மோதிய அடுத்த ஆண்டே மம்முட்டி ரஜினி சேர்ந்து நடித்த தளபதி வெளியானது. 1991 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான தளபதி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு பல விருதுகளையும் வாரி குவித்தது தளபதி.தளபதியின் வெற்றியைத் தொடர்ந்து கிளிப்பேச்சு கேட்கவா, மக்கள் ஆட்சி, புதையல், அரசியல், மறுமலர்ச்சி என பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் மம்முட்டி. 2000 ஆம் ஆண்டு அஜித்குமார், தபு, ஐஷ்வர்யா ராயுடன் இணைந்து கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்ற படத்தில் நடித்தார் மம்முட்டி. ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த இந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. பெரிய அளவில் கவனம் பெற்ற இத்திரைப்படம் சிறந்த பின்னனி பாடலுக்கான தேசிய விருதையும், பல பிலிம்பேர் விருதுகளையும் வென்றது.

பல வெற்றிகளுக்கு பிறகு மம்முட்டியின் திரைப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம். 1998 ஆம் ஆண்டு அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை, ஜப்பார் பட்டேல் இயக்கினார். இந்த படத்தில் அம்பேத்கர் வேடத்தில் நடிக்க வைக்க உலகம் முழுவதும் நடிகர்கள் தேர்வு நடைபெற்றது. ஆனால் யாருக்கும் பொருந்தவில்லை. இறுதியாக மம்முட்டியை ஒரு பத்திரிக்கை அட்டை படத்தில் பார்த்த இயக்குனர், அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க அவரை அனுகினார். மீசையை ஷேவ் செய்ய வேண்டும் என்பதால், முதலில் தயக்கம் காட்டிய மம்முட்டி, பிறகு நடித்திருக்கிறார்.
அம்பேத்கரின் தோற்றத்தில் மம்முட்டி இருந்த புகைப்படங்கள் அம்பேத்கரை அப்படியே பிரதிபளிப்பது போல இருந்தது. 1998 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் எடுத்து முடிக்கப்பட்ட அம்பேத்கர் திரைப்படம் இரண்டு ஆண்டுகள் கழித்து 2000 ஆம் ஆண்டு தான் வெளியானது.

இந்து மதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை, அமெரிக்கா இங்கிலந்தில் அம்பேத்கர் படித்தது, பூனா ஒப்பந்தம், காந்தி மீது அம்பேத்கர் வைத்த குற்றச்சாட்டுகள், அரசியல் அமைப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது என அம்பேத்கரின் இளமை காலம் முதல் அவரது முதுமை வரையிலான அனைத்து காட்சிகளிலும் அம்பேத்கராகவே நடித்திருந்தார் மம்முட்டி. பல உண்மைகள் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததால் படத்தை வெளியிடுவதில் தயக்கம் இருந்தது. ஆனாலும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் பின்னர் மொழி பெயர்பு செய்தனர். இந்த படத்தில் அம்பேத்கராகவே வாழ்ந்தார் மம்முட்டி. ஒடுக்கப்பட்ட இளைஞனாக, மேல்நாட்டு கல்வி பயிலுபவராக, பேராசிரியராக, வழக்கறிஞராக, மக்களை திரட்டி போராடுபவராக, கணவனாக, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக, அரசியல் அமைப்பை உருவாக்கியவராக, எல்லா வகையிலும் அந்தந்த சூழலுக்கு ஏற்ற வகையில், குரலிலும், நடிப்பிலும் மிளிர்ந்தார் மம்முட்டி. வட்டமேசை மாநாட்டில் ஆங்கிலேயர்கள் மத்தியில் காந்தியை எதிர்த்து பேசியது. பல்கலை கழகத்தில் தண்ணீர் அருந்த எதிர்ப்பு தெரிவித்த சக பேராசிரியர்களிடம் சமஸ்கிருத மந்திரங்களை வைத்து உரிமைக்காக பேசுவது, நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது என ஒவ்வொரு காட்சிக்குமான உச்சரிப்பில் கூட அவர் செலுத்திய கவனம், நடிப்பிற்கான இலக்கணமாக இருக்கும்.

ஒரு மகத்தான மக்கள் தலைவரைப் பற்றிய படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. பிரிட்டிஷ் திரைப்பட விழாவில் அனைத்து இயக்குநர்களும் ஒருமித்த குரலில் இந்த படத்தை பாராட்டினர். இப்படி உலக அளவில் பலரால் பாரட்டப்பட்ட இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பிற்கான விருது என 3 தேசிய விருதுகளை பெற்று சிறப்பு சேர்த்தது. அதே நேரத்தில் 2002 இல் தமிழில் மொழி பெயர்பு செய்யப்பட்ட போதிலும், 10 ஆண்டுகள் கழித்தே தமிழ்நாட்டில் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் வெளியானது.

இதற்கிடையே, 2001 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் ஆனந்தம் திரைப்படத்தில் நடித்தார் மம்முட்டி. அண்ணன், தம்பி உறவு முறைகளையும், குடும்ப வாழ்வையும் மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் மம்முட்டியுடன் இணைந்து முரளி, அப்பாஸ், தேவயாணி, ரம்பா, சினேகா என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர். குடும்பத்தின் மூத்த பிள்ளையாக நிஜ வாழ்க்கையில் தன் தம்பிகளையும், தங்கைகளையும் அரவணைத்த மம்முட்டி ஆனந்தம் படத்திலும், தனது நடிப்பில் அதை பிரதிபளித்தார். மம்முட்டியின் எதார்த்தமான நடிப்பு படத்தை பார்த்த ரசிகர்களை உருக செய்ததோடு விமர்சன ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. எஸ்.ஏ ராஜ்குமார் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. குடும்பங்களை ஈர்த்த ஆனந்தம் திரைப்படம் அந்த ஆண்டில் வெளியான படங்களிலேயே அதிக வசூல் சாதனை படைத்தது. பழசி ராஜா, பேரன்பு என்று வித்தியாசமான கதைக்களங்களில், அனைவரையும் ஈர்க்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் மம்முட்டி. அவரை போலவே அவரது மகன் துல்கர் சல்மானும் திரைப்படத்துறைக்குள் நுழைந்து கோலோச்சி வருகிறார். மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தடம்பதித்து முத்திரைபதிக்க ஆரம்பித்துள்ளார் துல்கர்சல்மான்.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் மம்முட்டி, சிரித்த முகத்துடன் நகைச்சுவையாக பேசக்கூடியவர். அதே நேரத்தில் அதிக கோவக்காரரும் கூட. ஆனால் இடத்திற்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக்கொண்டுவிடுவாராம். குறிப்பாக மேடைகளில் பேசும் போது தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த பதிலை தெரிவிப்பார். சுருங்க பேசு அதிகம் செயலில் காட்டு என்பார்கள் அதை அப்படியே கடைபிடிப்பவர் மம்முட்டி. திருவண்ணாமலையில் புற்றுநோய் மருத்துவமனை கட்ட ஆர்வம் கொண்டிருந்தது முதல் மக்களுக்கான பணிகளில் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தவர் மம்முட்டி. கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உதவுவது தொடங்கி சிவகாசி பட்டாசு விபத்து நடந்த போது தன்னுடைய ஆயுர்வேதிக் மருந்து நிறுவனத்தின் மூலம் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான மருந்துகளை அனுப்பி வைத்தது வரை, மம்முட்டியின் மக்கள் பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

எந்த உதவியையும் சத்தமில்லாமல் செய்துவிடுவார். அதேபோல் தனி நபர்களுக்கு, தன்னிடம் வருபவர்களுக்கு உதவுவதை தாண்டி, செய்யும் தொண்டு நிலைத்து நின்று மக்களுக்கு பலனளிக்க வேண்டும் என்பதில் கவனத்தோடு இருப்பார் மம்முட்டி. தான் படித்த பள்ளியில் விளையாட்டு மைதான கேலரி அமைத்தது போன்ற உதாரணங்கள் ஏராளம். தொண்டு என்பதை தாண்டி அழுத்தமான அரசியல் பார்வையும் கொண்டவர் மம்முட்டி. கம்யூனிசத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட மம்முட்டி, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டும், ஒடுக்குமுறைகளை களைய வேண்டும் போன்ற முற்போக்கு கொள்கைகளில் நாட்டம் கொண்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பின்னணி கொண்ட கைராளி டிவிக்கு தலைவராக இருந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் ஆவார் என்று அடிக்கடி யூகிக்கப்படும் அளவிற்கு இடதுசாரி அரசியலோடு அவர் இணைத்து பார்க்கப்படுகிறார். மத்திய அரசு சிஏஏ சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்தது வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல்கொடுப்பவராகவும் இருந்து வருகிறார். புத்தகங்கள் மீதும் இலக்கியத்தின் மீதும் அதீத ஆர்வம் கொண்ட மம்முட்டி, ஓய்வு நேரங்களில் மலையாள இலக்கியங்களை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். புத்தகங்கள் தொடர்பான விமர்சன கூட்டங்களில் பங்கேற்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளார். மேலும் தனது வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
40 வருடங்களுக்கு மேல் தனது திரை துறையில் கோலோச்சிப் பயணிக்கும் மம்முட்டி இன்று 71வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவருக்குத் திரை பிரபலங்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பத்ம ஶ்ரீ விருது, மூன்று தேசிய விருது, 7 கேரளா மாநில விருது என பல விருதுகள் தொடர்ந்து அவரை தேடி, தேடி வந்தாலும் மற்ற நடிகர்களை போல எந்த பந்தாவும் இல்லாமல் மிகவும் எளிமையாக வலம்வரும் மம்முட்டி திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஒரு சூப்பர் ஸ்டார்தான்.

 

-தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மத சுதந்திரம் – விமர்சித்த அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

Mohan Dass

ட்விட்டர் பக்கத்தை நிரப்பும் செல்வராகவனின் தத்துவ ட்வீட்கள்

G SaravanaKumar

அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை

EZHILARASAN D