30.6 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் கதைகளின் கதை

பாட்டாளி மாடலை முன்னிறுத்தும் அன்புமணியின் கதை

சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு, மருத்துவப் படிப்பை முடித்து, வீடு திரும்பிய ஒரு இளைஞன், ”நான் இப்போது எங்கே மருத்துவம் பார்க்க வேண்டும் என்று தந்தையிடம் வினவியதற்கு, “நீ கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களுக்காக மருத்துவம் பார்” என்றார் மூத்த மருத்துவரான அந்த தந்தை.  ‘தனது தந்தை ஏன் கிராமங்களில் பணியாற்ற சொல்கிறார்?” என்று குழம்பிய இளைஞன், அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று மருத்துவ பணியாற்றிய போதுதான், நகரங்களை விடவும் கிராமங்களில் தான் மருத்துவ தேவை அதிகம் இருப்பதை  உணர்ந்தார் அந்த இளைஞர். அங்கே, மருத்துவ பிரச்னைகளோடு, அம்மக்கள் சந்தித்த சமூக ரீதியிலான பிரச்னைகளும் அந்த இளம் மருத்துவரை பாதித்தது. இதுவே அந்த இளம் மருத்துவரை மருத்துவ வாழ்வில் இருந்து பொது வாழ்வின் பக்கம் திருப்பியது.

அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிய இளம் மருத்துவரின் ஒவ்வொரு அடியும் வெற்றிப் படிக்கட்டுகளாகவே இருந்தன. அரசியலில் எந்த அளவுக்கு முன்னேற்றம் என்றால், “உங்கள் மகன் நிச்சயம் ஒரு நாள் இந்தியாவை ஆளுவான்” என்று பிரதமராக இருந்த ஒருவரே அந்த இளைஞனை பற்றி பெருமிதமாய் கூறியது, அவரது தந்தையை பெருமைக் கொள்ள வைத்தது. இதன் பிறகு அவரது அரசியல் வளர்ச்சி அசுர வளர்ச்சி தான். அரசியலில் ஆக்கப்பூர்வ மாற்றங்களை ஏற்படுத்தி, தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துடிக்கும் அந்த மருத்துவர்தான், பாமகவினரின் செல்லப்பிள்ளை டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2026ல் பாமக ஆட்சியை கைப்பற்றும்: அன்புமணி | News7 Tamil

திராவிட மாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி முன்வைத்து வருகிறார். இதற்கு முன், இன்றைய பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்த போது தான் குஜராஜ் மாடல் என்கிற பிம்பம் உருவானது. அதிலிருந்து தான் மாடல் என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டு மாடலுக்கும் மாற்றாக ஒரு புதிய மாடலை முன்னிறுத்தி இருக்கிறார், பாமகவின் இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ். அவர் முன் வைத்த மாடல் தான் ‘பாட்டாளி மாடல்’.

2022 மே 15ம் தேதி, ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் நடைப்பெற்றது. அதில், தான் முதன்முறையாக பாட்டாளி மாடல் குறித்து பேசினார் அன்புமணி ராமதாஸ். ”தமிழ்நாட்டை முன்னேறச் செய்வது தான் பாமகவின் இலக்கு. தமிழ்நாட்டில் பாமகவிடம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு இருக்கிறது. செயல்திட்டம் இருக்கிறது. தொலை நோக்கு பார்வை இருக்கிறது” என்ற அன்புமணி, ”புதிதாக ‘பாட்டாளி மாடல்’ என்கிற சொற்பதத்தை அறிமுகப்படுத்தினார். பாமக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் ஒரு சொட்டு சாராயம் இருக்காது. பெண்கள் இரவு 12 மணிக்கு சுதந்திரமாக வெளியே போகலாம். எல்லோருக்கும் வேலைவாய்ப்பு இருக்கும். விவசாயிகள் விளை பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றார்.

திராவிட மாடலுக்கும், பாட்டாளி மாடலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்று அவர் பேசியதை பலரும் யோசிக்க ஆரம்பித்தனர். உண்மையில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஒன்றினைத்து வகுக்கப்பட்டதே ’பாட்டாளி மாடல் என்று அன்புமணி கூறுவதை கவனிக்க வேண்டும். சாமானியர்களுடனே பயணித்து, அவர்களுக்கான தேவைகளை புரிந்து, அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து, அது பல நூறு வருடங்கள் நீடித்திருக்கும் அளவு பல்வேறு மக்களுக்கான திட்டங்களை கொண்டதே அன்புமணி ராமதாஸ் முன்வைக்கும் பாமகவின் பாட்டாளி மாடல் திட்டம்.

அன்புமணி ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறார் என்றால் அதன் சாதகபாதகங்களை அறிந்தே களத்துக்கு வருபவர். ஆகையால் தான் எத்தனை போராட்டம் வந்தாலும் சாதித்துக்காட்டுவார் என்று, அவரது பாட்டாளி மாடலுக்கு தொண்டர்கள் ஆதரவு அளிக்கின்றனர். அன்புமணியின் எண்ணங்களையும் அரசியலையும் வெறும் ஒரு மாநிலத்திற்குள்ளேயே அடக்கிவிட முடியாது. காரணம் இன்று நாம் பாராட்டி பங்கு கொள்ளும் பல தேசிய திட்டங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் பின்னால்அன்புமணியும் இருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது.

2004ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி வைத்தது பாமக. கூட்டணி ஒப்பந்தப்படி, மாநிலங்களவை சீட்டுக்கு இரண்டு பெயர்களை முடிவு செய்து வைத்திருந்தார் ராமதாஸ். ஆனால், பாமகவின் மூத்த தலைவர்களோ, ”இதற்கு முன் சீட் கொடுக்கப்பட்டவர்கள் தங்களது பணியை திறம்பட செய்யவில்லை. மாநிலங்களவை சீட்டை மருத்துவர் அன்புமணிக்கு தரலாம்” என பரிந்துரைத்தனர். ஆரம்பத்தில், ராமதாஸுக்கு இதில் விருப்பமில்லை. வாரிசு அரசியல் பேச்சுகள் எழும் என அஞ்சினார். கட்சியினருடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், இதைப்பற்றி வெளிப்படையாக கூறினார்.  “அன்புமணிக்கு மாநிலங்களவை சீட் தருவதில் எனக்கு விருப்பமில்லை. உங்களது வர்புறுத்தலால் தான் அவருக்கு சீட் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. ஒரு வருடம் மட்டுமே அந்த சீட் அன்புமணிக்கு கொடுக்கப்படும். அதற்குள், அவர் தனது திறமைகளை நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால், அவரது பதவி பறிக்கப்படும்” என்ற நிபந்தனையுடனே அவருக்கு மாநிலங்களவை சீட் வழங்கினார் ராமதாஸ்.

அன்புமணி மாநிலங்களவைக்கு செல்வது அதுவே முதல்முறை. அதற்கு முன் அன்புமணி எம்.எல்.ஏவும் இல்லை, எம்.பியும் இல்லை. ஆனால், முதல் முறை மாநிலங்களவைக்கு சென்ற போதே மத்திய அமைச்சராகும் யோகம் அடித்தது அன்புமணிக்கு. எனவே இது அவருக்கு சவாலானதாக இருந்தது. ராஷ்ட்ரபதி பவனில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் அன்புமணி ராமதாஸ்.கூடவே மத்திய அமைச்சர் பதவி. பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது பொறுப்புகள் குறித்து கேட்டார் அன்புமணி. நீங்கள் நம் நாட்டின்  சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்”உங்கள் பணியை செய்யுங்கள் என்றார் மன்மோகன் சிங்.

“எனது சிறு வயதில் எனக்கு கண்ணில் கோளாறு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை செய்து கொள்ள நான் 17 கி.மீ தூரம் நடந்தேன். இப்பொதும் அந்த நிலை தொடர்கிறது. எனவே, நீங்கள் கிராமப்புற சுகாதாரத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்” என தனது விருப்பத்தையும் அன்புமணியிடம் தெரிவித்தார் மன்மோகன் சிங். தனது தந்தை ராமதாஸை சந்தித்தபோது, ”குடியரசு தலைவருக்கு என்ன மருத்துவ சிகிச்சை கிடைக்கிறதோ, அதுவே கிராமத்தில் ஒவ்வொரு ஏழைக்கும் கிடைக்க வேண்டும்” என்றிருக்கிறார். இருவரது வார்த்தைகளையும் மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டு, மக்கள் சேவை என்ற ஒற்றை இலக்கை மட்டுமே மனதில் வைத்து களத்தில் இறங்கினார் அன்புமணி.

35 வயதே நிரம்பிய அன்புமணி, தனது அலுவலகத்திற்கு சென்றதும், அங்குள்ள மூத்த அதிகாரிகள் அன்புமணியை பார்த்து, “யார் இவர் சின்ன பையன் போல இருக்கிறார், இவர் என்ன செய்துவிடுவார்” என்று கேலியாகபேசியுள்ளனர். ஆனால், அரசியலில் இளம் ரத்தத்தை பாய்ச்சினால், அது என்னவெல்லாம் செய்யும் என்பதை தனது செயல்களின் மூலம் நிரூபித்துக்காட்டினார் அன்புமணி. ”கிராமப்புற மக்களின் ஆரோக்கியமே நமது லட்சியமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளது சுகாதாரத்திற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்” என முதல் நாளே அன்புமணி பேசிய பேச்சு, அவரது அலுவலக அதிகாரிகளை நெஞ்சுருக வைத்துள்ளது.

இதன்பின்னர், இடைவெளி இல்லாமல் மக்கள் பணியாற்றத் தொடங்கினார். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாக national rural health mission எனப்படும் தேசிய ஊரக சுகாதார இயக்கம் அன்புமணியால் தொடங்கப்பட்டது. அதன் மூலம், பல்வேறு இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு, மாவட்ட மருத்துவமனைகள் வரை அனைத்து நிலை மருத்துவ நிலையங்களும் மேம்படுத்தப்பட்டன. 2004ல் தொடங்கப்பட்ட இந்த தொலைநோக்கு திட்டத்தால், இப்போது வரை இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் 55 விழுக்காடுக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. தாய் இறப்பின் விகிதம் 50 விழுக்காடுக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. இது அத்தைனையும் நடந்தது, அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்த தேசிய ஊரக சுகாதார இயக்கத்தால் தான். அதற்குப்பின் அன்புமணி தொடங்கிய ஒரு திட்டம் தான் இன்று வரையிலும் பல்வேறு உயிர்களை காப்பாற்றி வருகிறது என்றால் அது மிகை ஆகாது. அதுதான் அன்புமணியால் அறிமுகம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ். இதற்கு மூலக்காரணமாக இருந்தது சத்யம் கம்ப்யூட்டர்ஸின் நிறுவனர் ராமலிங்க ராஜு தான்.

அன்றைய ஆந்திராவின் ஹைதராபாத்தில், அவசர சிகிச்சைக்காக சில ஆம்புலன்ஸ்களை மட்டுமே வைத்து தனது பொறுப்பில் இயக்கி வந்தார் ராமலிங்க ராஜு.public health foundation indiaவின் public health schoolஐ திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் ஒய்.எஸ்.ஆர்-ம் அன்புமணி ராமதாஸும் கலந்துக் கொண்டனர். அங்கே தான் முதன்முதலில் ராமலிங்க ராஜுவை சந்தித்தார் அன்புமணி. நிகழ்ச்சியின் மேடைப்பேச்சில், அவசர சிகிச்சை ஊர்த்திகள் தேவை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பேசினார் அன்புமணி. பேசி முடித்து இறங்கியதும், ராமலிங்க ராஜு, அன்புமணியிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ”நீங்கள் உங்கள் ஹோட்டலுக்கு செல்ல 10 நிமிடங்கள் ஆகும். அதுவரை உங்களுடன் நானும் பயணித்து சில விஷயங்களைப் பற்றி பேசலாமா?” என்று கேட்டார். ஆரம்பத்தில் தயங்கிய அன்புமணி பிறகு அனுமதித்தார். அப்போது ராமலிங்க ராஜு தனது அவசர சிகிச்சை ஊர்திகளின் தன்மை குறித்து விளக்கினார். அது அன்புமணிக்கு மிகவும் பிடித்துப்போனது. அவர் கூறியதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டார்.

பின், அமெரிக்காவிற்கு சென்ற போது அங்கே அன்புமணி இருந்த இடத்திற்கு அருகில் ஒரு விபத்து நடைபெற்றது. அப்போது 911 என்ற எண்ணை அழைத்ததும் 2 நிமிடங்களில் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் வந்ததை கவனித்தார். இதனுடைய சாராம்சம் என்ன? என்று ஆர்வம் கொண்டு ஆராயத் தொடங்கினார். விபத்து நடந்த இடம் முதல், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 80 சதவீத paramedic சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே முடிந்து விடுகிறது என்றும், 20 சதவீத சிகிச்சை தான் மருத்துவமனையில் நடைபெறுகிறது என்பதனையும் புரிந்துக்கொண்டார் அன்புமணி.

இதுபோன்ற ஒரு வசதி நமது மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று முடிவு செய்த அன்புமணி, தனது துறை அதிகாரிகள், ராமலிங்க ராஜு தரப்பினர், அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைகழக ஆய்வாளர்கள் ஆகியோரை வரவழைத்து, ஆய்வு செய்து அவசர சிகிச்சை ஆம்புலன்ஸின் பணிகளை வெற்றிகரமாக  தொடங்கி வைத்தார். அப்போது, தொலைதொடர்பு அமைச்சராக திமுகவின் ஆ.ராசா இருந்ததால், எளிமையாக ராணுவத்திடம் இருந்த 108 என்ற எண்ணும் அதிகாரப்பூர்வமாகப் பெறப்பட்டது. இதை வைத்தே 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு, அது இன்று வரையிலும் சிறப்பாக செயல்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகிறது.

விபத்துகளுக்காக அவசர ஊர்தி என தொடங்கப்பட்ட 108ல், ”24 சதவீதத்திற்கும் மேலான அழைப்புகள் பிரசவத்திற்காகவே அழைக்கப்பட்டது. 21 சதவீதம் மட்டுமே விபத்துகளுக்காக அழைக்கப்பட்டுள்ளது” என்ற புள்ளிவிவரங்கள் வெளியாகி, அன்புமணியையே ஆச்சரியப்படுத்தியது. ஒரு நல்ல திட்டம் எதிர்பாராத வகையிலும் நல்லது செய்யும் என்று அன்று தேசமே புரிந்துக்கொண்டது. பெண்களையும், குழந்தைகளையும் பேணிக்காப்பது என்ற தனது கொள்கையில் வெற்றிக்கண்டதாக அன்று அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தார் அன்புமணி. பிரசவ வலியில் துடித்துக்கொண்டு, பேருந்துக்காக காத்திருந்த அவலநிலை மாறி, அழைப்பு விடுத்த சில நிமிடங்களில் உதவிக்கு வரத்தொடங்கின 108 ஆம்புலன்ஸ்கள்.

தேசிய ஊரக சுகாதார இயக்கம், 108 ஆம்புலன்ஸோடு, பல்வேறு திட்டங்கள் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு, அன்புமணியால் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக, பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்க தடைச்சட்டம் அன்புமணி அமைச்சராக இருந்தபோது தான் கொண்டு வரப்பட்டது. திரைப்படங்களில் புகை, மது காட்சிகள் இடம்பெறும் போது எச்சரிக்கை வாசகங்கள் வருவதையும் அவர் உறுதி செய்தார். புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படங்கள் போடுவதிலும், குட்கா மற்றும் பான்மசாலா உட்கொள்வதை தடை செய்ததிலும், அன்புமணி ராமதாஸுக்கு மிகப்பெரிய பங்குண்டு, இதற்காக, அவர் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் உட்பட பலரது எதிர்ப்பையும் சந்தித்தார்.

பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும், தடைகளையெல்லாம் தகர்த்து எதையும் செயல்படுத்தாமல் அன்புமணி விடுவதாக இல்லை. அதோடு, உலக வங்கியின் உதவியுடன், ’ஒருங்கிணைந்த நோய்கள் கண்காணிப்புத் திட்டம்’, தேசிய மருந்துகள் ஆணையம், இந்திய பொது சுகாதார அறக்கட்டளை, தேசிய நோய் கண்கானிப்பு அமைப்பு, பாரம்பரிய அறிவுசார் எண்ணியல் நூலகம், தேசிய பள்ளி குழந்தைகளுக்கான மருத்துவத் திட்டம், என 2004 முதல் 2009ம் ஆண்டு வரை மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் அன்புமணி ராமதாஸ். இதற்கெல்லாம், ஆரம்பப்புள்ளியாக இருந்தது அவரது தந்தை மருத்துவர் ராமதாஸின் வழிகாட்டுதல்கள் தான். அன்புமணி எனும் ஒரு சாதாரண மருத்துவர், சமூக மருத்துவராக களம் இறங்கியதற்கு, முக்கிய வரலாறு உண்டு.

1968 அக்டோபர் 9ம் தேதி புதுச்சேரியில், ராமதாஸ் – சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார் அன்புமணி, சிறு வயதிலிருநந்தே சுட்டித்தனமான சிறுவனாகவே வளர்ந்தார். sacredheart பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தார். மகனின் சுட்டி தனத்தை அடக்கவும், படிப்பின் மீது நாட்டம் கொள்ளவைக்கவும், 3வது முதல் பத்தாம் வகுப்பு வரை ஏற்காடில் உள்ள மான்ஃபோர்ட் பள்ளி ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தனர். பள்ளி காலத்தில் சிறந்த ஓட்டப் பந்தைய வீரராக வலம் வந்தார் அன்புமணி. 100மீட்டர் ஓட்டத்தை 11 செகண்டுகளில் கடந்து அப்போது ஜூனியர் ரெக்கார்டும் படைத்தார். ஒவ்வொரு வருடமும் சாம்பியன் பட்டத்தையும் பெற்றார். பெரிய தடகள வீரராக ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், மருத்துவத் துறை அவரை இழுத்தது. தனது தந்தையே தனக்கு ஆசிரியராய் மாற, 1992ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பையும் படித்து முடித்தார்.

மருத்துவக் கல்வி படித்து முடித்த பின், 2003ம் ஆண்டு லண்டன் பொருளாதாரப் பள்ளியில்,Introductory MacroEconomics எனும் பொருளாதார படிப்பையும் முடித்தார். தனது தந்தையின் வார்த்தைகளுக்கு இணங்க திண்டிவனத்திலுள்ள நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பு கிராமத்தில் மருத்துவராக ஒன்றரை ஆண்டுகாலம் பணி புரிந்தார். அங்கே, மருத்துவ சேவை ஆற்ற, அங்கே அவர் கண்ட, பிரச்னைகளும், ஏற்றத்தாழ்வுகளுமே அவரை அரசியலை நோக்கி பயணம் செய்ய வைத்தது.

1995ம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்த `’பசுமைத்தாயகம்’ எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக, கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் பணியாற்றினார் அன்புமணி. அப்போது, ஐநா பொருளாதார மற்றும் சமூக சபையின்(ECOSOC) ஆலோசகராக இருந்தார். ஐநாவின் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் அந்தஸ்தையும, அங்கீகாரத்தையும் பசுமைத்தாயகம் அமைப்புக்கு பெற்றுக் கொடுத்தார் அன்புமணி. பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் இதுவரைக்கும் 25 லட்சம் மரக்கன்றுகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி குளங்களையும் தூர்வாரியுள்ளார். அன்புமணியின் நிர்வாக செயல்பாடுகள் பசுமைத் தாயகத்திலிருந்து பாமகவின் பக்கம் திரும்பவே, பாமகவின் இளைஞரணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 2004-ம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார் அன்புமணி ராமதாஸ்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளராக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் கனிசமான வாக்குகளைப் பெற்று மக்களின் நம்பிக்கைகுரியவர் ஆனார். தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், அதிமுக, பாமக கூட்டணி ஒப்பந்தப்படி மாநிலங்களவை சீட் கிடைக்கப்பெற்று மீண்டும் மாநிலங்களவை உறுப்பினரானார் அன்புமணி. அன்புமணி முதலமைச்சர் போட்டியாளராக களமிறங்கிய தேர்தல் 2016ம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தான். அது அப்போது பெரும் பேசுபொருளானது. “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் தனித்து களம்கண்ட பாமக, பல லட்சம் வாக்குகளை பெற்று தன் பலத்தை நிரூபித்தது.

தனது அசாத்திய அரசியல் பணிக்காக, லூதர் எல் டெர்ரி விருது, உலக சுகாதார நிறுவன விருது, உலக ரோட்டரி சங்கத்தின் போலியோ ஒழிப்பு சாதனையாளர் விருது, 2008ல் தேசிய சமூக நீதி விருது, போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் அன்புமணி. தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி அன்புமணியின் கால்கள் பயணத்தை தொடங்கியுள்ளன. அவர் தன் கைகளில் பாட்டாளி மாடல் என்ற சாமானியர்களுக்கான மாடலை உயர்த்தி பிடித்தே, பாமக 2.0வுக்கான பயணத்தை மேற்கொள்கிறார். சாமானியனின் அடிப்படை தேவைகளோடு, அவர்களது வாழ்வு சிறக்கவேண்டும் என்ற ஒற்றை கண்ணோட்டத்திலேயே பாட்டாளி மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என அன்புமணி கூறுவதில்இருந்தே அவர் முன்வைக்கும் வருங்கால திட்டங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும் .

மது இல்லா தமிழ்நாடு, ஊழல் இல்லா மாநிலம், இலவச தரமான கட்டாயக் கல்வி, இலவச மருத்துவ வசதி, cbse தரத்திற்கு இணையான கல்வி முறை, தமிழ்நாட்டை 100 சதவீதம் எழுத்தறிவு, மற்றூம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவது, சுய வேலை மற்றும் சுய தொழிலை ஊக்குவித்தல், ஒரு குடும்பத்தில் நிச்சயம் ஒருவருக்கு வேலை, என அனைத்தும் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவே என்பது போன்ற பாட்டாளி மாடலை உருவாக்கியுள்ளது அன்புமணியின் அரசியல் அனுபவம். தமிழ்நாடு அரசு தற்போது விவசாயத்திற்கென்று தனி பட்ஜெட்டையே அறிவித்து வருகிறது. ஆனால் இதுபாமகவின் நீண்டகால நிழல் பட்ஜெட்டில் ஒன்று.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் அறிவித்துள்ள “6 உலக சுகாதார தலைவர்கள்” விருதுகளில் ஒன்று இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களான ஆஷாக்களுக்கு கிடைத்தது. “கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது தான் ஆஷாக்கள் திட்டம் உருவாக்கப்பட்டது. எனது காலத்தில் தான் 8.06 லட்சம் ஆஷாக்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் கொரோனா ஒழிப்பு பணிக்காகத் தான் இந்த விருது. தன்னை படைத்த 10 லட்சம் ஆஷாக்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் அன்புமணி ராமதாஸ். இப்படியாக, மக்களின் நலனுக்காக தொலைநோக்கு பார்வையோடு அன்புமணி உருவாக்கிய திட்டங்கள் இன்று பாராட்டுக்களை பெற்று வருகின்றன. பாமக என்றாலே அது வன்னியர் சமூக மக்களுக்கான கட்சி மட்டுமே என்ற பிம்பத்தை உடைத்து, இது அனைவருக்குமான கட்சி என்று உரக்கச்சொல்லும் வகையில், பாட்டாளி மாடலை முன்னிறுத்தி, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மாற்றத்தை கொண்டு வர முன்னேறிக் கொண்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading