மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏற்ற மறுத்த இண்டிகோ நிறுவனத்துக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரிலிருந்து ஹைதராபாத்துக்கு செல்ல கடந்த 9ம் தேதி தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் மாற்றுத்திறனாளி சிறுவன் பயணிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தச் சிறுவனுடன் வந்த பெற்றோரும் விமானத்தில் ஏற மறுத்தனர்.
இந்தச் சம்பவத்தை விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த பயணி ஒருவர் முகநூலில் வீடியோ பதிவாக வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக விசாரிக்க உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திலிருந்தும் அறிக்கை கோரப்பட்டது. பின்னர், இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில், “மாற்றுத்திறனாளி குழந்தை விமானத்தை பார்த்த அச்சமடைந்தார். எனவே, அவரது பெற்றோரும் விமானத்தில் ஏற மறுத்தனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், விமான நிறுவனம் அளித்த பதிலில் திருப்தி அடையாத உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அபராதம் விதிக்க முடிவு செய்தது.
இதுகுறித்து அந்த இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், “இண்டிகோ விமான நிறுவனத்தின் ஊழியர், அந்தக் குழந்தையை கையாண்ட விதம் சரி கிடையாது. நிலைமையும் மிகவும் மோசமாகி இருக்கிறது. இதை கருத்தில் வைத்து ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








