எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் திறந்து வைத்த பிறகு, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பேசியதாவது:
தாய், தாய்மொழி, தாய்நாடு ஆகியவற்றுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். வீட்டில் தாய்மொழியை பேசுங்கள். நான் கலைஞர் மிகவும் மதிப்பதற்கு முக்கியமான காரணம், தாய்மொழியை அவர் ஊக்குவித்ததுதான். பிற மொழிகளை கற்பதிலோ, பேசுவதிலோ தவறில்லை. ஆனால் தாய்மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும். அந்த வகையில் தமிழுக்காகவே போராடி மறைந்தவர் கருணாநிதி. நான் எங்கு சென்றாலும் எனது உடையைப் பற்றி தான் கேட்பார்கள். உடையை மாற்ற வேண்டியதில்லை ; முகவரியை மாற்றினால் போதும் என்பேன் நான். தாய்மொழி கண் போன்றது. எங்கு சென்றாலும் தாய்மொழியை மறக்கக் கூடாது.
எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது. தமிழ் மக்கள் தங்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிய வேண்டும். பிற மொழிகளை எதிர்க்க வேண்டாம். நம் மொழியை ஆதரிப்போம். ஒற்றுமையே நம் வலிமை. அனைவரும் ஒற்றுமையுடன் பயணித்தால் தான் எதையுமே சாதிக்க முடியும் என்றார் வெங்கய்யா நாயுடு.








