கவிஞன் என்பவன் கற்பனை தேரில் வலம் வந்து களிப்புறுவான் என்ற சொல்லாடலை உடைத்தவர்களில் முதன்மையானவர் கவியரசர் கண்ணதாசன். அவரைப் பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு.
நேற்று, இன்று, நாளை என எல்லா தலைமுறைகளுக்கும் பாட்டெழுதியவர் கவியரசர் கண்ணதாசன். திருவள்ளுவரையும், கம்பனையும், பாரதியாரையும், பாரதிதாசனையும் உள்வாங்கி, அதை காலத்தில் அழியாத திரையிசை பாடல்களாக தந்த தனிப்பெரும் கவிஞராக திகழ்ந்தார். பாரசீகத்தில் உமர்கய்யாம் என்றால் தமிழில் கண்ணதாசன் என அவரின் பாடல்களின் ஆழ்ந்த புலமையை குறிப்பிடப்படுவதுண்டு.
30 ஆண்டுகள் தமிழ் திரைப்பட பாடல்களின் முடிசூடா மன்னனாக இருந்தார். இரு 1949 ஆம் ஆண்டு கன்னியின் காதலி திரைப்படத்தின் -கலங்காத்திரு மனமே முதல் பாடலில் ஆரம்பித்து, 1981 ல் மூன்றாம் பிறை – படத்தில் – கண்ணே கலைமானே பாடலோடு அமைதி கொண்டது
1927 ஆம் ஆண்டு,ஜூன் 24 ம் தேதி,சிவகங்கை மாவட்டம் ,காரைக்குடி அடுத்த சிறுகூடல்பட்டியில் சாத்தப்பர் – விசாலாட்சி தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தவர் கண்ணதாசன், பெற்றோர் வைத்த பெயர் சாத்தையா.
8 ம் வகுப்பு வரை பயின்ற கண்ணதாசன் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 5000 திரைப்பட பாடல்கள் , கட்டுரைகள் எழுதியவர், சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.
அரபு நாட்டு பயணத்தில் இஸ்லாம் மதத்தை தழுவிய சேர இளவரசனின் வரலாற்றை கூறிய சேரமான் காதலி நாவலுக்காக 1980 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதை பெற்றார் கவியரசர் கண்ணதான். கண்ணதாசனுக்கு 3 மனைவிகள், 15 குழந்தைகள், சினிமாவிலும், பத்திரிகையிலும் சேர்த்த செல்வத்தை அத்துறைகளிலே முதலீடு செய்து கையை சுட்டுக்கொண்ட அனுபவத்தையும் பாட்டாகவே குறிப்பிடுவார்.
ஆத்திகம்-நாத்திகம்-ஆத்திகம் என அனைத்திலும் கரை கண்டவர் கவியரசர். திமுகவில் தீவிரமாக செயல்பட்டவர். பிறகு ஈவிகே சம்பத் ஆரம்பித்த தமிழ் தேசிய கட்சியில் முக்கிய தளபதியாக இருந்தார் . திருக்கோஷ்டியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரசில் இணைந்து காமராஜர் மற்றும் இந்திரா காந்தி ஆதரவாளராக மாறினார். ஆதரிப்பதோ,எதிர்ப்பதோ எதுவானாலும் கடுமையாக இருக்கும்.யாரைக்கண்டும் பயப்படமாட்டார்.
எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கிய விவகாரத்தில் அவசரப்பட்டு விட்டீர் என திமுக தலைவர் கருணாநிதியை அன்றே எச்சரித்தவர் கவிஞர். ஆம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.’
முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை, கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனாலும் தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை 1978 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நியமித்தார். நான் இறந்தால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும் அல்லவா அதற்காக இந்த பொறுப்பை ஏற்கிறேன் என்றார் கவிஞர். அமெரிக்கா சென்றவர் 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ம் தேதி மறைந்தார். அவர் ஆசைப்படி கவியரசர் கண்ணதாசன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது
திரைப்படத் துறையில் பாட்டு,கதை, வசனம், தயாரிப்பு, தமிழ் இலக்கியம், சிறுகதை, புதினம், கட்டுரை, கவிதை, நாவல், காப்பியம் என பன்முகம் கொண்டவர். பிறப்பு முதல் இறப்பு வரை பாடல்கள் தந்தவர் கவியரசர் கண்ணதாசன். பாட்டு ராஜாவுக்கு மறைவில்லை என்ற வரிகளுக்கு ஏற்ப பாடல்கள் வழியே கவியரசர் கண்ணதாசன் இன்றும் திரையிசை பாடல்கள் எனும் தேரில் உலாவருகிறார்
-ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்







