புதுவண்ணாரப்பேட்டையில் பகோடா சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடையின் உரிமையாளரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் பகோடா கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் காளிமுத்து கடைக்கு நண்பருடன் சேர்ந்து பகோடா சாப்பிட சென்றுள்ளார். பின்னர் சாப்பிட்டதும் அங்கிருந்து செல்ல முயற்சி செய்துள்ளார்.
உடனே காளிமுத்து பகோடா சாப்பிடதற்கான பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன்னிடமே காசு கேட்பதா என கூறி காளிமுத்துவை சரமாரியாக தாக்கியுள்ளார். இவர் அவருக்கு காயம் ஏற்பட்டதால், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் விரைந்து வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, பகோடாவிற்கு காசு கேட்டதற்காக கடையின் உரிமையாளரை தாக்கிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








