மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசை சார்ந்தது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
உறுதியான முடிவுகளால் உன்னதமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மத்திய அரசுக்கு நன்றி என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பாதுகாப்பு வழித்தடம் திட்டத்திற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, தமிழக அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்.
இந்தத் திட்டம் தமிழகத்தில் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும்.
இதன் மூலம் கோவை, சேலம், கரூர் உள்ளிட்ட பல நகரங்களில் வளர்ச்சியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும் உருவாகும். மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் எந்த திட்டம் என்றாலும் அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முழு பொறுப்பும் மாநில அரசை சார்ந்தது.
ஆகவே இந்தத் திட்டத்திற்கான முயற்சிகளை மாநில அரசு விரைந்து முன்னெடுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சி காலத்திலே, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சென்னை சேலம் எட்டு வழித் தடம் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இது பாதிக்கிறது என்று கூறி விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டமும் நடத்தியது. திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இந்த திட்டத்தை கொண்டுவர மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது ஆளும் கட்சியாக வந்த பிறகு, திமுக தன் நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டுவிட்டது. அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பல உறுதி மொழிகளை கண்டுகொள்ளாமல் விட்டது போல, இதையும் வசதியாக மறந்து விட்டது.
தமிழக அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ”துண்டு போட்ட எல்லோரும் விவசாயிகள் என்று எடுத்துக்கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.
ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவரே, இப்படி பேசுவது விவசாயிகளை அவமதிக்கும் செயல். தமிழக முதல்வர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அதற்கான காரணத்தை மக்களிடம் விளக்க வேண்டும்.
போக்குவரத்து மேம்பாடு அடைய, நாடு முழுவதும் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிறிய நகரங்களில் கூட, உடான் திட்டத்தில், சிறிய விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசு உதவிகள் செய்யத் தயாராக இருக்கும்போது, பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்க மக்களின் கோரிக்கைகளை கேட்டு, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண்பதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தங்க நாற்கரச்சாலை திட்டத்தில், தமிழகத்தையும் இணைக்கும் போது, எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல், திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது போல, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் விஷயத்தில், தமிழக அரசின் திட்டமிடும் குழுவில் வெளிப்படைத்தன்மை இல்லாததுதான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அரசு மேற்கொண்ட பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பீடுநடை போடுகிறது.
நம் நாட்டில் உள்ள மாநிலங்களின் தனி வருவாய் கடந்த காலாண்டில் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில், 11 மாநிலங்களில் சராசரி வருவாய் 43% அதிகரித்துள்ளது.
இந்த 11 மாநிலங்களில் ஆறு மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
கொள்ளைநோய் கொரானா பாதிப்பிலிருந்து இன்னும் உலக நாடுகள் மீளமுடியாமல் போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இந்தியாவின் பல மாநிலங்களில், பொருளாதார வளர்ச்சி காணப்படுவது மத்திய அரசின் உறுதியான பொருளாதார கொள்கை முடிவுகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.
இதன் தாக்கத்தினால் தமிழகத்திலும் கேரளத்திலும் கூட வருவாய் அதிகரித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் எந்த விதமான எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் தராத வகையிலே மத்திய அரசு எடுக்கும் உறுதியான முடிவுகள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்துகிறது.
இதற்காக பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.








