கள்ளக்குறிச்சியில் 6 நாட்களாக நடைபெற்ற போராட்டம் நேற்று வன்முறையாக மாறியதற்கு தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கே காரணம் என வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தது தொடர்பாக நேற்று வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இதனால் பள்ளிகள் சேதமானதோடு, காவல்துறையினரும் தாக்கப்பட்டனர். இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர்களும், சக மாணவர்களும் நியாயம் கேட்டு போராடி வரும் நிலையில், அது நேற்று வன்முறையாக வெடித்தது. இதில் மாணவர்கள் மீது தடியடி மற்றும் காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆகியும் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டதாலே, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று வன்முறையாக வெடித்துள்ளதாக சாடினார்.
மேலும் இந்த வன்முறைக்கு தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கே காரணம் என அனைவரும் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் குறுக்கீடு இல்லாமல் காவல்துறை வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான், உயிரிழந்த மாணவிக்கும், சக மாணவர்களுக்கும் மற்றும் மாணவியின் பெற்றோர்களுக்கும் இந்த நேரத்தில் ஆறுதல் அளிக்ககூடியதாக அமையும்.
அதேபோல், ஒருதவறை சுட்டிக்காட்ட மற்றொரு தவறு செய்யக்கூடாது. வன்முறை எதற்கும் தீர்வாகாது என சுட்டிக்காட்டியுள்ள வி.கே.சசிகலா, அமைதியான முறையில் போராடி நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து, மாணவி உயிரிழப்பில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்