முதல் மரியாதை படத்தின் ’குயில்’ கதாபாத்திரமும், பொன்னியின் செல்வன் படத்தின் ’பூங்குழலி’ கதாபாத்திரமும் வேறு வேறு என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை ராதா, சத்யராஜ், தீபன் உள்ளிட்டோர் நடித்து, இசைஞானி இளையராஜா இசையிலும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளிலும் 1985 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’முதல் மரியாதை’.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படம் வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 67 திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் ரீ-ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 12 திரையரங்குகளில் முதல் மரியாதை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதனைக் காண இயக்குனர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு வருகை தந்தார்.
இதையும் படியுங்கள் : ரமலான் நோன்பும் இந்திய பாரம்பரிய உணவுகளும்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லாம் ஜெயித்து விட முடியாது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லை என்றால் இந்த பாரதிராஜா இல்லை. சிவாஜி போட்ட பிச்சை தான் இதுவரையில் நான் நடிக்க காரணம். இதுபோன்ற ஒரு படைப்பை, நான் நினைத்தாலும் மறுபடியும் எடுக்க முடியாது.
படத்தில் நடித்த ராதா, சத்யராஜ், தீபன் உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளர் கண்ணன், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் இந்த படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்” என்று தெரிவித்தார்.
முதல் மரியாதை திரைப்படத்தில் நடிகை ராதாவின் கதாபாத்திரம் பரிசல் ஓட்டும் பெண்ணாக அமைக்கப்பட்டிருக்கும். அதேபோலவே பொன்னியின் செல்வனில் பூங்குழலி கதாபாத்திரம் ஒத்திருப்பது குறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இரண்டு கதாபாத்திரங்களும் வேறு வேறு. இரண்டையும் கலந்து பார்ப்பது தவறு. ஒரு கலைஞனின் படைப்பு மிகவும் முக்கியமானது. நான் இயக்குனர் மணிரத்தினம் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார்.