பிரதம மந்திரி கிராம சாலைகளை மாநில அரசே பராமரிக்க வேண்டும்; எம்பி ஃபகன் சிங்

பிரம மந்திரி கிராம சாலைகள் பராமரிப்பு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ஃபகன் சிங் குலஸ்தே “ மாநில அரசே பராமரிக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார். மக்களவை திமுக…

பிரம மந்திரி கிராம சாலைகள் பராமரிப்பு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ஃபகன் சிங் குலஸ்தே “ மாநில அரசே பராமரிக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

மக்களவை திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி எழுத்துப்பூர்வமாக மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்விகள் பின்வருமாறு

“பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட சாலைகள்… கடந்த 2021 நவம்பரில் பெய்த பருவ மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளின் சேதம் பற்றிய மதிப்பீட்டை ஒன்றிய அரசு மேற்கொண்டு இருக்கிறதா? அப்படி மேற்கொண்டிருந்தால் சேத மதிப்பீடு என்ன? மதிப்பீடு செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை?
ஒன்றிய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்படி அமைக்கப்பட்ட சாலைகளைப் பழுதுபார்க்கக் கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா?


கனிமொழியின் இந்தக் கேள்விக்கு ,ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஃபகன் சிங் குலஸ்தே பதிலளிக்கையில்….

“பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் என்பது கிராமப்புற இந்தியாவின் போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்துவதற்கான, அதன்மூலம் கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான ஒரு சிறப்புத் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்குத் தான் உள்ளது. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் அனைத்து சாலைகளும் முதல் ஐந்தாண்டுக் காலத்துக்குப் பராமரிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது.


அதற்குப் பிறகான சாலை பராமரிப்பு பணிகளுக்கான நிதி சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஊரக சாலை மேம்பாட்டு முகமைகளால் வழங்கப்பட வேண்டும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நிலையில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகளைப் பழுது பார்க்கவோ மறு நிர்மாணம் செய்யவோ ஒன்றிய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. இதுதொடர்பான அனைத்து பணிகளும் தொடர்புடைய மாநில அரசுகளாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்”என்று பதிலளித்திருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.