சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த குடியரசுத் தலைவரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் வரவேற்றனர்.
நூற்றாண்டு விழா நிகழ்வின் தொடக்கத்தில் ‘EARLY WRITING SYSTEM’ என்ற புத்தகத்தை, குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சருக்கு குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய ராஜேந்திர சோழன் புத்தகத்தை பரிசளித்தார் சபாநாயகர் அப்பாவு.
நிகழ்வில் வரவேற்புரையாற்றிய சபாநாயகர், வழக்கறிஞராக இருந்தபோது ஏழை மக்களுக்காக போராடிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதி உருவப்படத்தை திறந்துவைப்பது சிறப்பு வாய்ந்தது என்று பெருமிதம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர். யானை சிலை மீது கருணாநிதி கைவைத்து நிற்பது போன்ற உருவப்படம் அமைந்துள்ளது. அதற்கு கீழே காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.







