தமிழ்நாட்டு மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் கருணாநிதி என குடியரசுத் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்.
தொடர்ந்து, வணக்கம் எனக் கூறி உரையைத் தொடங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை திறந்துவைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று தமிழில் பேசினார்.
பாராதியார் பாடலை சுட்டிக்காட்டி பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பல்வேறு புரட்சிகரமான சட்டங்களை இயற்றிய தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட காலத்திலேயே அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் கருணாநிதி எனக்கூறிய அவர், தனது வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார். தமிழ்மொழிக்கும், இலக்கியத்திற்கும் கருணாநிதி சிறந்த பங்களிப்பை ஆற்றி இருப்பதாகவும், தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்தவர் கருணாநிதி என்றும் குடியரசு தலைவர் தெரிவித்தார். சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்ற உரிமை பெற்றுதந்தவர் கருணாநிதி என்றும் புகழாரம் சூட்டினார்.







