நுழைவுத் தேர்வு என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் சந்தை அரசியலை இந்த கட்டுரை விரிவாக ஆய்வு செய்கிறது.
பொது நுழைவுத்தேர்வு எனும் அரக்கன்:
நீட் தேர்வைத் தொடர்ந்து க்யூட் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. க்யூட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்க, திமுக, அதிமுக, விசிக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பின் தங்கிய மாநிலங்களுக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து இதன் மூலம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பின் தங்கிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் பயில வேண்டும் என்று ஆசையை இழக்கக்கூடிய துர்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
நுழைவுத் தேர்வுகள் இருப்பதால் மாணவர்கள் படிப்பதற்கும் எழுதுவதற்கும் கஷ்டப்படும் நிலை உருவெடுத்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே தனித்தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் சூழலில், பொது நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு கூறுவதை தனித்து ஆராய வேண்டியிருக்கிறது. அதாவது, பொது நுழைவுத் தேர்வு கொண்டு வருவதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் சமூகத்தில் அனைத்து வசதிகள் இருந்து கல்வி பயின்று வருபவர்களும், பின் தங்கிய நிலையில் இருந்து கல்வி கற்று, தங்களின் திறமை மூலம் உயர் கல்வியை எட்ட போராடுபவர்களும் போட்டியில் இறங்குகிறார்கள். தற்போது, அடித்தட்டில் இருந்து வரும் மாணவர்கள் இந்த தேர்வு முறையால் பாதிக்கப்படுவார்கள். அதாவது, சமூகத்தில் பின் தங்கியிருப்பவர்களுக்கு
மத்திய பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத சூழல் உருவாக்கப்படும். மத்திய அரசு பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவதே இத்தகைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எதிரான செயல் என்றே தமிழ்நாடு சட்டமன்றம் எதிர்க்கிறது.
சந்தையிடம் கல்வியை கொடுக்கும் அரசு:
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கண்ணியம் மிக்க வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவது தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கூறுகள். அப்படி என்றால், அரசின் பொறுப்பிலும் செலவிலும் மாணவர்களுக்கு கண்ணியமிக்க கல்வியைக் கொடுக்க வேண்டும். குழந்தையை பராமரித்து, கற்க வைக்கும் பொறுப்பை நல்வாழ்வு அரசு எடுக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை 2020, அதைப்பற்றி பேசவே இல்லை. பள்ளிக்கூடம் இருக்கும், அரசு பள்ளியில் ஆசிரியர் இல்லை. கட்டடம் இல்லை. குறைபாடு இருக்கிறது என்றால், குறைப்பாடு இருக்கும் பள்ளிகளைச் சேர்த்து பள்ளி வளாகமாக மாற்றிவிடுவோம், பள்ளி வளாகத்தோடு இணைந்துள்ள 10-15 பள்ளிகளுக்கு வளாகத்தில் இருக்கும் வளங்கள் பகிர்ந்து அளிக்கப்படும். அப்படியென்றால், வளங்களை பகிர்ந்து பயன்படுத்தும் பள்ளிகளும் இருக்கும். எல்லா வளங்களும் பள்ளி வளாகத்திலேயே இருக்கும் பள்ளிகளும் இருக்கும். ஆனால், கற்றல் திறன் வெளிப்பாடு இரு தரப்பினருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறது தேசிய கல்விக்கொள்கை. இது எப்படி சாத்தியம் ஆகும்?. பல அடுக்கு கல்வி முறை இருக்கும் இந்தியாவில், பணம் இருப்பவர், பணம் இல்லாதவர். வெவ்வேறு பொருளாதார நிலையில் உள்ள பள்ளியில் சேர்ந்து கல்வி பயிலுகிறார்கள். வாய்ப்புகளை சமமாக கொடுக்காமல் கற்றல் திறன் வெளிப்பாடு மட்டும் சமமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையில், அரசமைப்பு சட்டத்தின் சமத்துவ கோட்பாட்டுக்கு எதிரானது. இதைத் தான் தேசிய கல்விக்கொள்கை 2020 வலியுறுத்துகிறது.
தேசிய கல்விக்கொள்கை 2020 மத்திய அதிகாரத்தை எடுத்துக்கொண்டு மாநில அரசுகளுக்கு பொறுப்பைக் கொடுக்கிறது. மத்திய அரசு கேந்திர வித்யாலையா, நவோத்யா வித்யாலையா, சைனிக் பள்ளி போன்றவற்றை குறிப்பிட்ட நோக்கத்திற்காக நடத்துகிறது. இதே போல், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம், ஜாமியா மிலியா உள்ளிட்ட 54 மத்திய பல்கலைக்கழகங்களைத் தான் மத்திய அரசு நடத்துகிறது.
ஆனால், உயர் கல்வியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள், கலை அறிவியல் கல்லூரிகள், பொது பள்ளிகள் எல்லாம் மாநில அரசுகள் தான் நடத்துகின்றன. அப்போது, மத்திய அரசு இங்கு என்ன செய்கிறது என்றால், நீங்கள் எந்த பள்ளியில் வேண்டுமென்றாலும் படியுங்கள். நீங்கள் பணம் கட்டாமல் கூட மாநில அரசின் பள்ளியில் படித்துக்கொள்ளுங்கள், ஆனால், உனக்கு தகுதி இருக்கிறதா என்பதை தீர்மானிக்க கல்வி மட்டும் அல்ல பணமும் தேவை என்பதை போல் உள்ளது. காரணம் என்.சி.ஆர்.டி பாடத்திட்டம் என்பது மாநில பாடத்திட்ட வழி கல்வியையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதனால், பணம் இருக்கும் மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் பயிலும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
க்யூட் தேர்வின் சிக்கலும் ஜி.எஸ்.டி அரசியலும் :
தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயிலும் மாணவ மாணவிகள் பணம் கட்டாமல் கூட தேர்வு எழுத முடியும். ஆனால், அது தகுதி இல்லை. நீ தகுதிப்படுத்த வேண்டும் என்றால், தேசிய தகுதி தேர்வில் 1,200 ரூபாய் பணம் கட்டி தேர்ச்சி பெற்று வா என்கிறது. இங்கு அது கூட பிரச்னை இல்லை. தேசிய பொதுநுழைவுத் தேர்வு வினாத்தாள் தெரியாது என்றால் பயிற்சி மையங்களுக்கு செல் என்று மறைமுகமாக தள்ளுகிறது. பயிற்சி மையங்களில் பணம் கட்டினால், அரசுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வருவாய் கிடைக்கிறது.
தமிழ் இலக்கியத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்றால், அவர் தேசிய பொது நுழைவுத் தேர்வில் சமஸ்கிருதத்தில் தேர்வு எழுதிவிட்டு வா என்ற சூழலை பொது நுழைவுத் தேர்வு உருவாக்குகிறது. இந்த இடத்தில் தான் பொது நுழைவுத்தேர்வை எதை செய்யப்போகிறது என்ற கேள்வியே எழுகிறது. க்யூட் பொது நுழைவுத் தேர்வில் வினாக்களை பார்த்தால் இது நன்றாக விளங்கும். 1Aவில், 13 மொழிப்பாடங்கள் உள்ளன. குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகள் வருகின்றன. அதில் ஆங்கிலமும் உள்ளது. தமிழும் உள்ளது. 13லிருந்து ஒரு மொழியைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்க போகிறீர்களா? அல்லது தமிழை தேர்ந்தெடுக்க போகிறீர்களா? என்பது தாள் B ல் 20 மொழிகள் உள்ளன. முதள் தாளில் உள்ள 13 மொழிகள் இல்லாமல் வேறு மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த 20 மொழிகளில் தான் சமஸ்கிருதம், அரபிக், ஸ்பேனிஸ், ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகள் வருகின்றன. மன்னார்குடியில் தமிழ் இலக்கியம் படிப்பதற்காக விருப்பப்படும் ஒரு மாணவன் சமஸ்கிருதம் படிக்க வேண்டுமா? ஏன் அவன் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது மத்திய அரசு? சமஸ்கிருதம் படித்து தேர்வில் வெற்றி பெற்றால் தான் தமிழ் இலக்கியமே படிக்க முடியும் என்பது எந்த வகையில் நியாயம்? மொத்தத்தில், பள்ளிக்கூட படிப்பை நிர்மூலமாக்கிவிட்டு, பள்ளி படிப்பால் எந்த விதமான பலனும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு, இந்த பொது நுழைவுத் தேர்வு மாணவர்களை பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்க வைக்கிறது. பயிற்சி மையங்கள் பெருமளவு பணத்தை சம்பாதித்தால் தான் 18 சதவிகித ஜிஎஸ்டி தொகை கட்டி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்ற நிலையை மறைமுகமாக ஏற்படுத்துகிறது. பயிற்சி மையங்கள் மாணவர்களிடம் எவ்வளவு வேண்டுமென்றாலும் பணம் வாங்கிக் கொள்ளுங்கள் ஆனால் அரசுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி கட்டிவிடு என்று சொல்கிறது. அதாவது சந்தையிடம் கல்வியைக் கொடுப்பதும், முடிந்தால் போட்டி போட்டுவிட்டு பல்கலைக்கழகத்திற்குள் வா. இல்லையே வெளியே நில் என்கிறது. திறமை இருந்தால் பொழச்சிக்கோ, அப்படி திறமை இருந்து பல்கலைக்கழகத்திற்குள் வருகிறாயா? அதன் பிறகு உனக்கு இடஒதுக்கீடு தருகிறேன் என்கிறது மத்திய அரசு. இதுதான் க்யூட் பொதுநுழைவுத் தேர்வின் சூழ்ச்சி.

இனி மக்களுக்காக போராட மாட்டார்கள்:
கடந்த பத்து ஆண்டுகளாக அடித்துட்டு பகுதி பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் ஏதோ பல காரணங்களால் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைய முடிந்தது. கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய பல்கலைக்கழகங்களில் நடந்த போராட்ட வரலாற்றை நாம் கவனிக்க வேண்டும். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போதும், நீட் உள்ளிட்டவற்றில் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்ட போதும், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாட்டுக்கறி வைத்திருந்ததால் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைக்கு எதிராகவும், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் நடந்த போராட்டங்களை கவனிக்க வேண்டி இருக்கிறது. தனி தெலுங்கானா போராட்டத்திற்காக உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை புறந்தள்ளிவிட முடியாது.
இலங்கை இறுதி யுத்தத்திற்காக தமிழ்நாட்டில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்ததையும் கடந்த காலத்தில் கவனித்திருக்கிறோம். அதாவது, மக்களின் பிரச்னைக்காக போராட்டங்களில் ஈடுபடுவது, அறிவுத்தளத்தில் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பது என தொடர் போராட்டத்தை பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்து வந்தார்கள். இது போன்ற நிலையை தடுக்க வேண்டும் என்பதற்காகவே நுழைவுத் தேர்வுகளின் நோக்கம்.
மாணவர்களை வடிகட்டவா பொது நுழைவுத் தேர்வு?
எழுபதுகள் வரை பொது நுழைவுத் தேர்வே இல்லாத நிலை தான் இருந்தது. அடித்தட்டு மாணவர்கள் படிப்புகளில் நுழைவதையொட்டி நுழைவுத் தேர்வுகள் கொண்டு வரப்பட்டன. புதிய கல்வி நிறுவனங்கள் கட்டுவதற்கு பதிலாக நுழைவுத் தேர்வுகளை அரசுகள் நடத்தின. தற்போது, அடித்தட்டில் இருந்து வரும் மாணவர்களை வடிகட்டுவதற்காக புதிதாக மீண்டும் நுழைவுத் தேர்வுகள் மத்திய பல்கலைக்கழகங்களில் கொண்டு வருகிறார்கள் என்று தமிழ்நாடு அரசு, கல்வியாளர்கள், முற்போக்குவாதிகள் தெரிக்கின்றனர்.
அடித்தட்டில் இருக்கும் மாணவர்கள் தேசிய கல்விக் கொள்கையின் படி குலத்தொழிலுக்கு போக வேண்டும். அல்லது பெரு நிறுவனங்களுக்கு மலிவு விலையில் உழைப்பை விற்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தும் நிலை தான் தற்போது இருக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை உயர்த்தாமல், மாணவர் – மாணவிகளுக்கு பொது நுழைவுத்தேர்வு, தகுதி தேர்வு என்ற பெயரில் அவர்களை வடிகட்டுவது என்பது மிகத்தவறான முன்னுதாரணம். இது இந்திய மக்களுக்கு அரசியல் அமைப்புக்கும் எதிரான செயல். எனவே, மக்களின் கற்றல் திறனை அதிகரிப்பதோடு, அவர்களுக்கான வேலை உத்தரவாதத்தை உறுதி செய்வதும் ஒரு அரசின் நோக்கம். இங்கு, வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கான வேலை உத்தரவாதத்தை கொடுக்க அரசுகள் தயங்குகின்றன. இதனை மறைப்பதற்காக பள்ளியில் அதிக எண்ணிக்கையில் படித்து கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்க செல்லும் மாணவ மாணவிகளின் ஆசையை உடைத்து, பொது நுழைவுத் தேர்வு என்ற பெயரில் அவர்களை வடிகட்டி, அவர்களுக்குள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதோடு, போட்டி சமூகத்திற்குள் போட்டி போட்டு வாய்ப்பில்லாத நிலையை தற்போது நுழைவுத் தேர்வு அரசியல் உணர்த்துகிறது.
இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் இங்கு வாழவும், தாங்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்வதற்கும், தாங்கள் என்னை வேலை செய்ய வேண்டும், என்பதை தேர்ந்தெடுப்பதற்கும் உரிமை உண்டு. அப்படி உத்தரவாதத்தை அளிக்க கூடிய மத்திய அரசே பொது நுழைவுத் தேர்வை கொண்டு வருவது தான் அரசியல் முரணாக பார்க்கப்படுகிறது.
- நன்றி







