“அரசியல் களமும் மாறாது… கூட்டணியும் மாறாது …மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார்” – அமைச்சர் ரகுபதி!

“எந்த காரணத்தைக் கொண்டும் 2026ல் அரசியல் களம் மாறாது. திமுக மீண்டும் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்பார்” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட…

“அரசியல் களமும் மாறாது... கூட்டணியும் மாறாது ...மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார்” - அமைச்சர் ரகுபதி!

“எந்த காரணத்தைக் கொண்டும் 2026ல் அரசியல் களம் மாறாது. திமுக மீண்டும் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்பார்” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சட்டத்துறை அமைச்சர்
ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் தலைமையில்
இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி பேசியதாவது;

“2026 இல் ஆட்சியை பிடிப்போம் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. மக்களுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று அவர் கூறும் கருத்து தவறானது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேரில் செயல்படுத்தப்படும் எல்லா திட்டங்களுமே மக்களுக்கான திட்டம் தான்.

நடிகர் விஜய்யை கண்டு நாங்கள் பயப்பட தேவையில்லை. நடிகர் விஜய்யின் கட்சியால் எங்களுக்கு கவலை இல்லை. அவர்கள் எவ்வளவு வாக்கு சதவீதம் வாங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை. 2026-ல் திமுக மீண்டும் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்பார். எந்த காரணத்தைக் கொண்டும் 2026ல் அரசியல் களம் மாறாது.

களம் எங்களுடையது; கூட்டணி எங்களுடையது. திமுக கூட்டணி இதே நிலைமையில் 2026 இல் நீடிக்கும். கூட்டணியில் உள்ள எந்த கட்சியினரும் எங்களை விட்டு செல்ல மாட்டார்கள். திருமாவளவன் நிச்சயம் திமுக கூட்டணியை விட்டு செல்லமாட்டார். தேர்தல் களத்தில்
நாங்கள் இறங்கிவிட்டோம். மற்றவர்கள் இன்னும் இறங்கவில்லை. பணிகளை தொடங்கி
விட்டோம். நிச்சயமாக மக்களிடம் எங்களுடைய திட்டங்களை கொண்டு சென்று சேர்த்து,
அதன் மூலமாக வாக்குகளை பெறுவோம். அதை யாராலும் தடுக்க முடியாது.

நாங்கள் வேண்டுமென்று யார் மீதும் வழக்கு போடுவது கிடையாது. அந்தப் பழக்கமும்
பழிவாங்குகின்ற எண்ணமும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிடையாது. விஜய் அதிமுகவை பற்றி விமர்சிக்காததற்கு பல கருத்துக்களை கூறலாம். அதிமுகவிடம் ஒன்றுமே இல்லாததால் விஜய் அவர்களை விமர்சிக்காமல் இருந்திருக்கலாம். சிறையில் நடந்த பிரச்சனைக்கு நடவடிக்கை எடுத்து, அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

துறை ரீதியான விசாரணையும் நடைபெறும். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக உள்துறை
செயலாளருக்கு விளக்கமும் அனுப்பப்படும்” என்றார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.