தூத்துக்குடி அருகே பிரபல நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக கூறி சுமார் 500 சவரன் நகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி புதியம்புத்தூர் அடுத்த நடுவகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் கிரேனா, ஜெயலட்சுமி, பாக்கியராஜ். இவர்கள் மூன்று பேரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரிடம் புதியம்புத்தூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் 10 பவுன் தங்க நகைகளை அடகு வைத்தால் அதை ஷேர் மார்க்கெட் மற்றும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து முன்பனமாக பத்தாயிரம் ரூபாய் வாங்கி தருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் 35 சவரன் நகை தந்தால் கார் வாங்க முன்பணம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி அவரை ஏமாற்றி சுமார் 85 சவரன் நகைகளை வாங்கியுள்ளனர். இதற்காக ரூபாய் 40 ஆயிரம் மட்டுமே மதன்குமாரிடம் அவர்கள் கொடுத்துள்ளனர்.
சந்தேகம் அடைந்த மதன் குமார், முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனம் சென்று தங்களுடைய ஏஜென்ட் கிரேனா ஜெயலட்சுமி பாக்யராஜ் ஆகியோர் தன்னிடம் 85 பவுன் நகைகளை வாங்கிவிட்டு பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு நிதி நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என .ஊழியர்கள் தெரிவத்துள்ளனர்.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மதன் குமார், தூத்துக்குடி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கிரேனா, ஜெயலட்சுமி, பாக்கியராஜ் ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார், சுமார் 30 லட்சம் மதிப்புள்ள 69 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதே நபர்கள் புதியம்புத்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 500 சவரன் தங்க நகைகளை மோசடியாக பெற்று ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.







