இந்திய பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்திற்குட்பட்ட சிங்குர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ” மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை மாற்ற மாநில மக்கள் விரும்புகிறார்கள். போலி ஆவணங்களுடன் வங்காளத்தில் வசிக்கும் ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால், மாநில அரசு அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு எல்லைப் பகுதிகளில் வேலி அமைக்க மாநில அரசிடம் நிலம் கோரி கடிதம் எழுதப்பட்டது. பலமுறை இக்கடிதம் எழுதியும், மாநில அரசு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் வங்காள மக்களைச் சென்றடைவதை திருணாமுல் காங்கிரஸ் அரசு தடுக்கிறது. மேற்கு வங்க மீனவர்கள் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பத் யோஜனா திட்டத்தின் டிஜிட்டல் தளத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து சலுகைகளைப் பெறுவதற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. மத்திய அரசு மாநிலத்திற்கு பலமுறை கடிதங்களை அனுப்பி வருகிறது, ஆனால் அவர்கள் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டுகிறார்கள்.
டெல்லியில், முந்தைய அரசும் மத்திய திட்டங்களை செயல்படுத்துவதை எதிர்த்தது, ஆனால் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது. அவர்கள் (ஆம் ஆத்மி) தோற்கடிக்கப்பட்டு வெளியேறினர். மேற்கு வங்கத்திலும் அதேதான் நடக்கும், பாஜக இங்கு ஆட்சி அமைக்கும்.
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் தேவை. மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மேம்படும் போதுதான் முதலீடுகள் வரும், ஆனால் மாநிலத்தில், கலவரக்காரர்கள், கொள்ளையர்கள் மற்றும் மாஃபியாக்களுக்கு கட்டுபாடற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாஃபியா ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டுவரும். இது மோடியின் உத்தரவாதமும் கூட” என்றார்.







