மருத்துவர் ஒருவருக்கு, அவரிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நன்றிக்கடனாக அளித்த பரிசும், அதற்கான காரணமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் பல நேரங்களில் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சூழலில் யாருடைய உதவியாவது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவோம். நம்முடைய அந்த சூழ்நிலையை புரிந்துகொண்டு, நாம் கேட்காமலேயே நமக்கு உதவுபவர்களை நம்மால் என்றுமே மறக்க முடியாது. அவ்வாறு உதவக்கூடியவர்களுக்கு நாம் நன்றிக்கடனாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்றும் நினைப்போம்.
அந்த வகையில், மருத்துவர் ஒருவருக்கு, அவரிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நன்றிக்கடனாக அளித்த பரிசும், அதற்கான காரணமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : இளஞ்சிவப்பு பூக்கள் நிறைந்த தோட்டமாக மாறி பூத்துக் குலுங்கும் பெங்களூரு – வைரலாகும் புகைப்படங்கள்
காமத் என்ற மருத்துவர் ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில், “நோயாளிகள் அனைவரையும் நான் பார்த்து முடித்த பிறகு, ஒருவர் எனது க்ளீனிக்கிற்கு வந்தார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக என்னிடம் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்மணி வங்கியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் பெறும் வருமானத்தை கருத்தில் கொண்டு, நான் அவரிடம் சிகிச்சைக்காக இதுவரை பணம் வாங்கியதில்லை.
உலர் பழங்கள் கொண்ட ஜாடியை என்னிடம் கொடுத்து, உகாதி வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்தார். மேலும் ’நான் இங்கு நோயாளியாக வரவில்லை. நான் வங்கியில் வேலைபார்க்கும் கடைசி நாள் இன்று. நீங்கள் செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி’ என்று கூறினார்” என்று பதிவிட்டுள்ளார். உலர் பழங்கள் இருக்கும் ஜாடியின் புகைப்படத்தையும், அதனுடன் இணைத்துள்ளார்.
கடந்த சில நாடளுக்கு முன் பதிவிடப்பட்ட இந்த ட்வீட், 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 10,000-க்கும் அதிகமான லைக்குகளையும் குவித்துள்ளது. இந்த நெகிழ்ச்சிப் பதிவிற்கு ட்விட்டர் வாசிகள் பலரும் பல்வேறு நேர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மருத்துவர் காமத்திற்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.








