ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவும், ஆளுநரின் செயல்பாடும்…

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.தற்போது அந்த அறிவிப்பை ஆளுநர் ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் கட்சி மற்றும்…

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.தற்போது அந்த அறிவிப்பை ஆளுநர் ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் கட்சி மற்றும் பொதுமக்களிடம் விவாத பொருளாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் சிக்கி பலரும் பணத்தை இழந்து கடனாளியாகி தற்கொலைக்கு தள்ளப்படும் அவலம் தொடர்ந்தது. எளிதில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் இதில் சிக்கி சின்னாபின்னமாகினர். இந்நிலையில் தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.

தற்போது அந்த அறிவிப்பை ஆளுநர் ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் கட்சி மற்றும் பொதுமக்களிடம் விவாத பொருளாகியுள்ளது.
இப்போது இல்லை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே இது தொடர்கதையாகி வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை அதிகரித்ததையடுத்து கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை செய்யும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

அந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த சட்டம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஆட்சிக்கு வந்த திமுக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

இதையும் படிக்க: சினிமாவில்கூட நம்பமுடியாதது….மேஜர் சுந்தர்ராஜனின் நிஜ வாழ்க்கையில் நடந்த அந்த உண்மைச் சம்பவம்…

அந்த குழு அளித்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய அவரச சட்டத்தை இயற்றியது. மேலும், ஆன்லைன் சூதாட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி சட்டசபையில் கடந்தாண்டு அக்டோபர் 19-ம் தேதி தாக்கல் செய்தார். அது சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனிடையே தமிழக அரசு அக்டோபரில் கொண்டுவந்த அவசரச் சட்டம், கடந்த நவம்பர் மாதம் காலவதியானது. அப்போதே ஆளுநர் ரவியின் செயல்பாடு விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறியிருந்தார். அவரின் சந்தேகங்களுக்கு தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கமளித்தார். இதன் காரணமாக ஆளுநர் விரைவில் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

‘ஒரு நபரின் திறமையைக் கொண்டு சம்பாதிப்பது அரசியலமைப்பின் 19(1) g பிரிவின்கீழ் அவரின் அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எனவே, அடிப்படை உரிமைக்கு எதிராக எந்த அரசும் சட்டம் இயற்ற முடியாது. சைபர் அணுகல் விவகாரத்தில்,ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையதொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் இந்த விவகாரம் வருகிறது.’ என ஆளுநர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.