பாஜகவிற்கு ஒரே கொள்கை திமுக ஆட்சியை அகற்றுவதே என அக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
நாமக்கல் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்துார் பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட்டார். இதன் உண்மையான குற்றவாளிகளை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை எனக்கோரி தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறியது.
போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டது. மாவட்ட நிர்வாகத்தினர் அப்பகுதியிலுள்ள கிராமங்களில் கூட்டங்களை நடத்தி மக்களை நேரில் சந்தித்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பாஜகவிற்கு ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே. அதற்கு ஒவ்வொரு கட்டமாக முயற்சி எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அனகா காளமேகன்






