யாசகம் பெற்ற பணத்தை தொடர்ந்து முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கு அளித்து வருகிறார் முதியவர் பூல்பாண்டியன். மக்களிடமிருந்து பெறப்பட்ட யாசகத்தை மக்களுக்கே கொடுப்பதில் ஆத்மார்த்தமான திருப்தி என்று பெருமிதம் கூறினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பூல்பாண்டியன் என்கிற முதியவர் வழக்கம் போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
பொதுவாகவே மக்களிடம் இருந்து யாசகம் பெற்று அதனை அரசு பள்ளிகளுக்கு கொடுத்து உதவும் பூல்பாண்டியன், முதலமைச்சரின் தனி நிவாரண நிதிக்கும் தொடர்ந்து நிதி வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்த பூல்பாண்டியன் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக பத்தாயிரம் ரூபாயை வழங்கினார்.
இதுவரை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.56 லட்சம் வழங்கியுள்ள பூல்பாண்டியன் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட யாசகத்தை பொதுமக்களின் நலனுக்காக அளிப்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
மேலும் எங்கு சென்றாலும் தான் பலருக்கு உதவி செய்வேன் என்ற நம்பிக்கையுடன் தன்னிடம் யாசகம் கொடுப்பதாகவும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் ஆயிரக்கணக்கில் எனக்கு பணம் கொடுத்து உதவுகிறார்கள் என்றும் பூல்பாண்டியன் கூறினார்.







