உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என ஐநா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உயிரை காத்துக்கொள்வதற்காக உக்ரைன் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது 8.74 லட்சமாக இருப்பதாகவும், இது விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 1-ஆம் தேதி மட்டும் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று வரும் அகதிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், உக்ரைன் அகதிகளில் அதிகபட்சமாக சுமார் 4 லட்சத்து 54 ஆயிரம் பேர் போலந்திலும், ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் ஹங்கேரியிலும், 79 ஆயிரம் பேர் மால்டோவாவிலும், 69 ஆயிரம் பேர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்திருப்பதாக ஐநா குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்தும் வரும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த மாணவி மெளனி சுகிதா கோவைக்கு விமானத்தில் வந்தார். பின்னர் அங்கிருந்து அந்தியூர் வந்த மாணவி மெளனி சுகிதாவை ஆரத்தழுவி ஆனந்த கண்ணீருடன் பெற்றோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி மெளனி சுகிதா, உக்ரைனில் இருந்து ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் வழியே தம்மை இந்திய வெளியுறவு துறை மீட்டதாக கூறினார். மத்திய அரசு சார்பில் போதுமான வசதிகள் செய்தாகவும் அவர் குறிப்பிட்டார். போர் பதற்றம் நிறைந்த கீவ், கார்க்கிவ் நகரங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்றும் மெளனி சுகிதா கோரிக்கை விடுத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








