உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு – உச்சநீதிமன்ற நீதிபதி கவலை!

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளதாக நீதிபதி கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார். முன்னர் ஆண்டுக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 36 ஆயிரம் வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி, வழக்குப் பட்டியலில் கடைசிப் பகுதியில் இடம்பெற்றிருந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாத சூழல் இருப்பதால், வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி சுந்தரேஷ், புதிதாக தாக்கல் செய்யப்படும் இடைக்கால மற்றும் ஆரம்பகட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், உச்சநீதிமன்றப் பதிவகத்தால் அவற்றை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க நீதிமன்றம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.