முக்கியச் செய்திகள் தமிழகம்

‘நாடக அரசியலின் அடுத்த காட்சி நாட்டுப்பற்றா?’ – பாஜக மாநில தலைவர் கேள்வி

நாடக அரசியலின் அடுத்த காட்சி நாட்டுப்பற்றா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டனம் அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த மூவண்ணக் கொடியைப் போற்றுவோம் என்ற உங்கள் பசப்பு அறிக்கையைப் படிக்க நேர்ந்ததாகவும், அதில், நாடக அரசியலின் அடுத்த தேசபக்தி ஸ்டிக்கர் ஒட்டும் காட்சியைத் தானும், தமிழ்நாடு மக்களும் அறிந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், ஏமாற்றுவதை மட்டுமே கடமையாகச் செய்து கொண்டு, பொய்யை மட்டுமே கண்ணியமாகப் பேசிக் கொண்டு, கண்மூடித்தனமாக உங்களை நம்புபவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து எத்திப் பிழைத்து வரும் தங்கள் கழகத்தின் சந்தர்ப்பவாத தேசியம், என்பது முதலைக்கண்ணீர் என்பதை முத்தமிழ் நாடறியும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இறையாண்மை மிக்க இந்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைத்துக்கொண்டு உங்களின் தரத்தையும் தாராதரத்தையும் வெளிப்படுத்தி வரும் நீங்கள், இந்தியாவின் பன்முகத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பற்றி, கவலைப்படும் தங்கள் திடீர் தேசபக்தி நகைப்புக்கு இடமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

தமிழ் கூறும் நல்லுலகிற்கு தங்கள் தகுதி நன்றாகத் தெரியும். தாங்கள் தேசியத்தை வெறுப்பவர்கள். போலி திராவிடத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள். எப்போதெல்லாம் உங்களுக்கு எதிர்ப்பு வலுக்கிறதோ, அப்போதெல்லாம் உங்கள் தனி திராவிட நாடு கோரிக்கையைக் கையில் எடுப்பீர்கள். உங்கள் திராவிட நாடு கோரிக்கையைக் கையில் எடுத்தால் எங்கே உங்கள் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் முதல் முதலாக மூவண்ணக் கொடியைக் கையில் எடுத்திருக்கிறீர்கள் எனக் கூறியுள்ள அவர், மாநில முதலமைச்சராகிய உங்கள் முன்னால் உங்கள் கட்சியின் 2ஜி ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர் ”தேவைப்பட்டால் தனி திராவிட நாடு கோரிக்கையைக் கையில் எடுப்போம்” என்று பேசியபோது அவரைக் கண்டிக்காமல், புன்முறுவலுடன் ரசித்த உங்கள் நாட்டுப்பற்றும், உங்கள் தேசிய பற்றும் தெளிவாக அனைவருக்கும் புரியும் என சாடியுள்ளார்.

மேலும், நீதிக்கட்சியின் பெயரைச் சேலம் மாநாட்டில் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்த போது, திராவிடம் என்ற பெயரை எதிர்த்து, அதைத் தமிழர் கழகம் என்று அறிவிக்க வேண்டும் என்று, தங்கள் நிதி அமைச்சரின் தாத்தா மதுரை சர். பி. டி. ராஜன், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம், மணப்பாறை திருமலை சாமி, பி. பாலசுப்பிரமணியன், போன்ற பல தலைவர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். தெலுங்கர்கள் தெலுங்கர்களாக, கன்னடர்கள் கன்னடியர்களாக, மலையாளர்கள் மலையாளிகளாக, இருக்கும்போது தமிழர்கள் மட்டும் தங்கள் பாரம்பரிய அடையாளத்தை அழித்துக் கொண்டு, ஏன் திராவிடர்களாக மாறவேண்டும்? என்று அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு, இன்னும் தங்கள் தரப்பு பதில் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர்,

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்றுத் தேசியத்திற்குப் பெருகிவரும் ஆதரவைக் கண்டவுடன், தங்களுக்குத் தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது. அதனால், சுதந்திர தினத்தைக் கூட சுதந்திரமாகக் கொண்டாட விடாமல், உங்கள் அடக்குமுறை அரசியலை வெளிப்படுத்துகிறீர்கள். பாரத அன்னை சிலைக்கு, முறையான அனுமதி பெற்று மரியாதைகள் செய்ய, பாஜக தொண்டர்கள் மணிக்கணக்காகக் காத்திருந்தபோது அந்த சிலை இருக்கும் மண்டபத்தின் கதவுகளைப் பூட்டி வைத்திருந்த உங்கள் அச்சம் வெளிச்சமாகி இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், எங்கள் கட்சியின் துணைத் தலைவர் கே.பி.இராமலிங்கம், பாரத அன்னைக்கு மரியாதை செய்ததற்காகத் தேசியக் கொடியை ஏற்றியதற்காகக் கைது செய்து இருக்கிறீர்கள் எனத் தெரிவித்துள்ள அவர், இதுவா தங்கள் தேசபக்தி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்த தமிழ்நாடு வீரர் லக்ஷ்மணன் பூதவுடலைப் பெற, மதுரை விமான நிலையத்திற்கு பாஜக தலைவர்களும், உறுப்பினர்களும், சென்றிருந்தபோது அங்கே வந்திருந்த தமிழ்நாடு நிதியமைச்சர், அஞ்சலி செலுத்தும், அரசு நிகழ்ச்சியை, அரசியலாக்கி, தரம் தாழ்ந்து நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மறைந்த வீரர் லக்ஷ்மணன் திமுகவுக்குக்காக்கப் போராடி உயிரிழக்கவில்லை. இந்த நாட்டுக்காகப் போராடி வீர மரணம் எய்தி இருக்கிறார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. இதில், மலிவான அரசியல் செய்தவர் யார்? என்பதை தமிழ்நாடறியும். உங்கள் அமைச்சரின் காரின் மீது, செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை நான் நியாயப்படுத்தவும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், அதை ஆதரிக்கவுமில்லை. ஆனால், “சிந்தனை இல்லாத தங்கள் ஆட்சிக்குக் கிடைத்த சிந்த்ரெல்லா” பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். ஸ்டிக்கர் ஒட்டும் கலையில் வித்தகரான நீங்களும், உங்கள் கட்சியினரும், தமிழ்நாட்டில் பிரதமருக்குக் கிடைத்த ஆதரவைக் கண்டவுடன், தேசப்பற்று ஸ்டிக்கரை நெற்றியில் ஒட்டிக் கொள்ளத் தயாராகி இருக்கிறீர்கள் எனக் கூறியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘புதிய லேப்டாப் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?’

மேலும், கிட்டத்தட்ட 50 ஆண்டு காலகட்டத்தில் ஆட்சியிலிருந்த நீங்கள், அதாவது தங்கள் கட்சி, இதுவரை எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குச் சிலை வைத்திருக்கிறீர்கள்? இதுவரை எத்தனை முறை தாங்கள் வஉசி பெயரை உச்சரித்திருக்கின்றீர்கள்? வீரன் அழகுமுத்துக்கோன் பெயரைச் சொல்லி இருக்கிறீர்களா? மருது சகோதரர்கள், கொடி காத்த குமரன், வீர மங்கை வேலுநாச்சியார், கடலூர் அஞ்சலையம்மாள் இப்படிப்பட்டவர்கள் பற்றிப் பேசி இருக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், தேசியக்கவி என்று இந்தியத் தேசமே போற்றிய முண்டாசுக்கவிஞர் பாரதியை, அவரின் சீடரான பாரதிதாசனாரைக் கொண்டாடியது போல இல்லாமல், தங்கள் ஆட்சிக் காலங்களில் பாரதியைத் தமிழ்நாட்டில் பேச மறந்தது ஏன்? தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகப் போற்றிப் பாதுகாத்த முத்துராமலிங்கத் தேவர் பெயரை மட்டும் ஓட்டுக்காக மட்டும் தாங்கள் உச்சரிப்பது உண்டு. மற்றபடி அவர் மேல் உண்மையான மரியாதை இல்லாமல், அவர் நினைவிடத்தில் பிரசாதமாக வழங்கப்பட்ட திருநீரை தரையில் வீசி அவமானப்படுத்துவீர்கள் எனக் குற்றச்சாட்டுக் கூறியுள்ளார்.

பிரதமரின் ஒற்றைச் சொல் கேட்டு, கிளர்ந்தெழுந்த தேசபக்தி எழுச்சியைக் கண்டவுடன், உங்களைப் போன்றோர் எல்லாம் அச்சத்தினால் கலங்கி, இப்படி திடீர் தேசியப்பற்று கொண்டு, கடிதம் எழுதி முதலைக் கண்ணீர் வடிப்பதை, நானும் என் தமிழ் மக்களும் நன்றாகப் புரிந்து கொண்டோம் எனத் தெரிவித்துள்ள அவர், கடிதத்தின் இறுதியில் “மூட அரசியல் தனத்தை சட்டப்படி அடக்குவோம்” என்று முழங்கி இருக்கின்றீர்கள். உங்கள் அடக்குமுறையைக் கண்டு நாங்கள் யாரும் அஞ்சப்போவதில்லை. நாட்டின் இறையாண்மைக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிராக எவர் புறப்பட்டாலும், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க, பாஜகவின் ஒவ்வொரு தொண்டனும் தயாராக இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவர் பின்னாலும், நானும், என் மூத்த தலைவர்களும் இருக்கிறோம் என்ற உண்மையை தயவுசெய்து மறந்துவிட வேண்டாம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள அவர், தங்களுக்கும், தங்கள் கட்சியினர் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலக கோப்பை கால்பந்து: கத்தாரை வீழ்த்தி ஈகுவடார் அணி வெற்றி

G SaravanaKumar

உக்ரைன்: வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டும் – ஐநா

Arivazhagan Chinnasamy

”எச்.ஐ.வி உள்ளோரை அன்பால் அரவணைத்திடுவோம்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D