நாட்டிற்குத் தேவை புதிய திசை மற்றும் புதிய வேகம் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்ததன் 76ம் ஆண்டை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைமையகத்தில் ஏற்றப்பட்ட மூவர்ணக் கொடிக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பங்கேற்றது மறக்க முடியாத தருணம் என தெரிவித்துள்ளார்.
மேலும், 76வது சுதந்திர தினத்தில் இன்று அடியெடுத்து வைக்கிறோம் என்றும், ஒரு புதிய ஆற்றலைப் புகுத்தி, நாட்டின் நலன் சார்ந்த பணிகளுக்கு புதிய திசையையும் வேகத்தையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நமது தாய்நாடு புராதனமானது, காலம் காலமாக இருக்கக்கூடியது என்றும் அதேநேரத்தில் அது நவீனமானது என்றும் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, தாய்நாட்டின் சேவைக்காக நாம் நம்மை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஊழலும், குடும்ப அரசியலுமே நாட்டின் இரு பெரும் சவால்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை என தெரிவித்த ராகுல் காந்தி, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.
– பால. மோகன்தாஸ்






