மாயமான டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல்: கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா!

டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா சென்று மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் பின்னடைவாக, சப்தம் வந்த இடத்தில் டைட்டன் நீர்மூழ்கி இல்லை என்று அமெரிக்க கடலோர காவல் படைப் பிரிவு தளபதி ஜான்…

டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா சென்று மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் பின்னடைவாக, சப்தம் வந்த இடத்தில் டைட்டன் நீர்மூழ்கி இல்லை என்று அமெரிக்க கடலோர காவல் படைப் பிரிவு தளபதி ஜான் மாகா் தெரிவித்தாா்.

1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு டைட்டானிக் கப்பல் சென்றுகொண்டிருந்தது. ஏப்ரல் 14-ம் தேதி இரவில் எதிர்பாராதவிதமாக பனிப்பாறையின் மேல் அந்த கப்பல் மோதியது. மூழ்க வாய்ப்பே இல்லை என கூறப்பட்ட அந்த கப்பல், 3 மணி நேரத்தில் நீரில் முழுவதுமாக மூழ்கியது.

இந்த கோர விபத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 1500 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்து 110 ஆண்டுகள் ஆனாலும் கப்பல் பயண வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக பார்க்கப்படுகிறது. கடலுக்குள் மூழ்கிய அந்தக் கப்பல், அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கிடந்தது 1985ம் ஆண்டில் கண்டறியப்பட்டது. ஆனால் கடும் சேதம் அடைந்ததால் டைட்டானிக் கப்பலை கடலுக்கு மேலே இழுத்து வர முடியவில்லை.

அதனால் டைட்டானிக் கப்பலை ஆழ்கடலுக்கு சென்று ஆய்வாளர்கள் பார்த்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்புக்காக திரைத்துறையினரும் சென்று வருகின்றனர். இந்நிலையில், டைட்டானிக் கப்பலை சுற்றுலா பயணிகள் பார்வையிட அழைத்து செல்லும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்தது. டைட்டன் நீா்மூழ்கி என அழைக்கப்படும் அதில் 5 பேர் பயணிக்க முடியும்.

இந்நிலையில் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக பிரிட்டன் தொழிலதிபா் ஹமீஷ் ஹாா்டிங், ஓஷன்கேட் நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், நீா்முழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் கமாண்டோவுமான பால்-ஹென்றி நாா்கியோலே, பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேஸாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 பேருடன் நீர்மூழ்கி வியாழக்கிழமை புறப்பட்டது.

கடலுக்கு அடியில் சுமார் 4 கி.மீ சென்ற நிலையில் நீர்மூழ்கிக்கும், கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டிருந்த போலார் பிரின்ஸ் என்ற கப்பலுக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த நீா்மூழ்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பவில்லை. இதனையடுத்து மாயமான அந்த நீா்மூழ்கியை தேடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  நீா்மூழ்கிக் கப்பலில் உள்ளவர்கள் சுவாசிக்க 96 மணிநேரம் மட்டுமே ஆக்ஜிசன் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கிட்டத்தட்ட 80 மணி நேரத்தை நெருங்கவிருப்பதால், நீர்மூழ்கிக்குள் இருக்கும் ஆக்ஸிஜன் தீர்ந்து போகும் அபாய கட்டத்தில் இருப்பதும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அச்சத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இதனிடையே நீா்மூழ்கி மாயமான ஆழ்கடல் பகுதியிலிருந்து சப்தம் எழுந்தது கண்டறியப்பட்டது. அது நீா்மூழ்கிக்குள் இருப்பவா்கள் எழுப்பிய ஓசையாக இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அவா்கள் உயிருடன் மீட்கப்படுவாா்கள் என்ற நம்பிக்கை எழுந்தது.

ஆனால் சப்தம் டைட்டன் நீா்மூழ்கியிலிருந்து வந்தததாக உறுதியாகக் கூற முடியாது என்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடலோர காவல் படைப் பிரிவு தளபதி ஜான் மாகா் தெரிவித்தாா். மேலும், டைட்டன் நீா்மூழ்கியைத் தேடுவது, தொடா்ந்து சிக்கலான மற்றும் மிகக் கடுமையான பணியாக உள்ளது என்று அவா் கூறினாா். எனினும், ஆழ்கடலில் நிபுணத்துவம் பெற்ற பிற அமைப்புகளின் ஆலோசனைகளுடன் கடலுக்குள் மூழ்கியவா்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாக அவா் தெரிவித்தாா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.