உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாய் யானை..! 2 மாத குட்டியானை நடத்திய பாசப்போராட்டம்..!

சத்தியமங்கலம் அருகே பாசப்போராட்டத்தால் தவித்த இரண்டு மாத குட்டியானை மற்ற யானைகளுடன் சேர்த்துவைக்கப்பட்டது. வனத்துறை வரலாற்றில் நிகழ்ந்த அரிய நிகழ்வு என கள இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள…

சத்தியமங்கலம் அருகே பாசப்போராட்டத்தால் தவித்த இரண்டு மாத குட்டியானை மற்ற யானைகளுடன் சேர்த்துவைக்கப்பட்டது. வனத்துறை வரலாற்றில் நிகழ்ந்த அரிய நிகழ்வு என கள இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்
அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் நேற்று முன்தினம் குட்டியுடன் சுற்றித்திரிந்த தாய் யானை திடீரென உடல் நலம் குன்றி மயங்கி விழுந்தது. இரண்டு மாத குட்டி யானையின் சத்தம் கேட்டு வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தாய் யானையை பரிசோதனை செய்து, அதற்கு தீவிர சிகிச்சை அளிக்க தொடங்கினர்.

40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யானைக்கு உண்பதற்கு பச்சிளம் இலைகள், பழங்கள், தர்பூசணி ஆகியவற்றை கொடுத்தும், மருந்து மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றை செலுத்தி தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். இருந்தாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று மதியம் தாய் யானை பரிதாபமாக உயிரிழந்தது. தாயை சுற்றி சுற்றி வந்த குட்டி யானையை புட்டிப்பால் கொடுத்து பராமரித்து வந்த நிலையில் மற்ற யானைகளுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

மனித வாடை பட்ட குட்டி யானைகளை இதுவரை மற்ற யானைகள் எதுவும் சேர்த்துக்
கொண்டதாக தகவல்கள் இல்லை. இந்நிலையில் இரண்டு மாதமே ஆன இந்த குட்டியை
காட்டுக்குள் அழைத்துச் சென்று மற்ற யானைகளுடன் வனத்துறையினர் விட்ட போது,
அதனை பாசத்தோடு மற்ற யானைகள் ஏற்றுக்கொண்டு அதனை அழைத்துச் சென்றது
நெகிழ்ச்குரிய சம்பவமாக பார்க்கப்படுகிறது. இன்று மதியம் அந்த குட்டி யானையை அழைத்துக் கொண்டு ஒரு யானைக் கூட்டம் பண்ணாரி அருகே உள்ள மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்து செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர் ராஜ்குமார் கூறும் பொழுது,

வனத்துறை வரலாற்றில் இதுவரை தாயை விட்டு பிரிந்த குட்டியானையை, மனித வாடை பட்ட நிலையில் மற்ற யானைகள் ஏற்றுக் கொண்டதாக வரலாறு இல்லை. ஆனால் இதுவே முதல் முறையாக இந்த குட்டி யானையை மற்ற யானைகள் ஏற்றுக்கொண்டு தன்னுடைய கூட்டத்தில் சேர்த்து அதனை அழைத்துச் சென்ற நிகழ்வு. முதல் முறையாக நாங்கள் பார்க்கின்றோம். அந்த குட்டி யானையை தொடர்ந்து எங்கள் வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.