“நெல் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, அரசு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் திருமண விழாவில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அந்த பகுதியில் தண்ணீர் இல்லாமல் வாடும் நெல் பயிர்களைக் கண்டதும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தஞ்சை பகுதியில் நமது விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கு போதிய அளவுக்குத் தண்ணீர் பாய்ச்சினால் தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். இன்று அந்த நெற்பயிர்கள் எல்லாம் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறது.

விவசாயிகள் கடன் வாங்கி நடவு செய்திருக்கும் நிலையில், சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால் நெல் எல்லாம் பதராகி விடும். அதனால் அரசு மேட்டூர் அணையில் இருந்து உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்போது தான் பயிர்களைக் காப்பாற்ற முடியும். இன்னும் 20 நாட்களில் நெல் அறுவடைக்கு வந்து விடும். அதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்து விடும். அரசுக்கு அதிகமான நெல் உற்பத்தி கிடைக்கும். எனவே, விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, அரசு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.

விவசாயிகள் என்ன கோரிக்கை வைத்தார்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, நெல் பயிர்களுக்கு 20 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படுவதாக கூறுகின்றனர். ரத்தத்தை வியர்வையாக செலுத்தி உழைக்கிறவர்கள் விவசாயிகள். தண்ணீரை நம்பித்தான் அவர்களின் வாழ்வாதாரம் இருப்பதால், அரசு இதை உணர்ந்து, உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.