நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஓரணியில் ஒன்றிணைவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பாட்னாவில் ஆலோசனை மேற்கொண்டனர்.
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. இந்த தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் பாஜக தீவிரம் காட்டும் நிலையில், மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று காலதாமதமாக நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது.
பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட 6 மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, முதலமைச்சர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- பி.ஜேம்ஸ் லிசா








