மயிலாடுதுறை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைத்துத் தராததைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . ஆனந்த தாண்டவபுரம் பகுதியில் இருந்து சேத்தூர் வரையிலான 5 கிலோ மீட்டர் சாலை, கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சிதிலமடைந்து, குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்காததால் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மேலும் சில கோரிக்கைகளான, A7 அரசு பேருந்தினை சேத்தூர் மெயின் ரோடு வரை இயக்கிட வேண்டும், கீழ மருதாந்தநல்லூர், ஆனந்ததாண்டவபுரம் மற்றும் சேத்தூர் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குக் குடிமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, ஏராளமானோர் ஒன்றிணைந்து கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, சாலையில் அடுப்பினை வைத்து, கஞ்சி காய்த்து சமையல் செய்து, நூதன முறையிலும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போரட்டம் குறித்த தகவலை அறிந்து வந்த வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் மணல்மேடு காவல்துறையினர், போரட்ட தரப்பினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இப்போராட்டம் காரணமாக, மணல்மேடு பகுதியில் இருந்து வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் சாலையில், 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: