சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு போதை மருந்து சப்ளை செய்த நைஜீரியவை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் கும்பலை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னையில் மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நட்சத்திர விடுதிகள் மற்றும் வசதி படைத்தோர் வீட்டு பார்ட்டிகள் மற்றும் சொகுசு விடுதிகளில் நடைபெறும் பார்ட்டிகளுக்கு போதை மருந்து சப்ளை செய்யப்படுவது தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடிப்படையாக வைத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள நபர் ஒருவரின் வீட்டில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.7.45 கிராம் கொக்கைன் 7.20 கிராம் எம்டிஎம்ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நபருக்கு எங்கிருந்து போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகள் கிடைக்கிறது என விசாரணை செய்ததில் நைஜீரியர்கள் மூலமாக சென்னையில் பேருந்து மார்க்கமாக மறைத்து ராயப்பேட்டையைச் சேர்ந்த முக்கிய நபரிடம் விநியோகம் செய்தது தெரியவந்துள்ளது.
அடுத்த கட்டமாக போதை மருந்து சப்ளை செய்யும் நேரம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொண்ட மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பொழுது போதைப் பொருள் கடத்தி வந்த மூன்று நைஜீரியர்களை கைது செய்தனர். அவர்களிடம் சோதனை நடத்தியதில் 407 கிராம் ஆம்பட்டமைன் 138 கிராம் எம்டிஎம்ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த மூன்று நைஜீரியர்களை விசாரணை செய்ததில் பெங்களூரில் இருந்து இந்த போதை மாத்திரைகள் மற்றும் ஒரு நைஜீரிய கும்பலிடம் இருந்து வாங்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக பெங்களூர் விரைந்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நைஜீரியர்கள் தங்கி இருக்கும் வீடு ஒன்றை அதிரடியாக சோதனை செய்ததில் மூன்று நைஜீரியர்களிடம் 601 கிராம் ஆம்பட்டமைன் 172 கிராம் எம்டிஎன்ஏ மாத்திரைகள் மற்றும் மேலும் 3 நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாடுகளில் இருந்து இந்த போதை மருந்துகள் மாத்திரைகள் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அகமதாபாத்திற்கு கடத்திவரப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு அங்கிருந்து பெங்களூரு வழியாக சென்னையில் விநியோகம் செய்யப்படுவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது
டெல்லியில் கொண்டுவரப்படும் இந்த போதைப் பொருள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு நைஜீரியர்கள் மூலமாக கடத்தப்படுவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக படிப்பதற்காகவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் வேலைக்காகவும் தற்காலிக விசாவில் வந்துள்ள நைஜீரியர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இந்த போதை பொருள் கும்பலோடு சேர்ந்து இந்தியா முழுவதும் போதை மருந்துகளை விநியோகிப்பது தெரியவந்துள்ளது
மொத்தமாக போதை பொருளை மறைத்து கொண்டு வருவதற்கு இரண்டு லட்ச ரூபாய் கமிஷன் பெறுவது தெரிய வந்துள்ளது. அதை ஒரு மாநிலத்திற்கு கொண்டு வந்தவுடன் பல்வேறு முக்கிய நகரங்களில் பிரித்து விநியோகம் செய்ய பல்வேறு நைஜீரியர் கும்பல்கள் பிரிந்து போதைப் பொருளை சப்ளை செய்ததும் தெரிய வந்துள்ளது. அதற்கு மொத்தமாக கொடுக்கப்படும் ஒரு லட்ச ரூபாயை இந்த நைஜீரியர்கள் பிரித்துக் கொண்டு தொடர்ந்து இதுபோன்று போதை பொருளை மாநிலத்திற்குள்ளாக சப்ளை செய்வது தெரியவந்துள்ளது.
குறிப்பாக சென்னை ராயப்பேட்டையில் கைது செய்யப்பட்ட முக்கிய போதை பொருள் சப்ளை மன்னன் நட்சத்திர விடுதிகள், சொகுசு விடுதிகள் ஆகிய இடத்திற்கு மட்டும் போதைப் பொருளை ,கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக தீவிரமாக சப்ளை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. சொகுசு பார்ட்டிகள் நடக்கும் பொழுது இந்த போதை மாத்திரைகள் கை மாறுவதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
முதன்முறையாக எம்டிஎம்ஏ எனப்படும் ராஜபோதை மாத்திரைகளை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மொத்தமாக வெளிநாட்டில் இருந்து வாங்கும் போது சில லட்சங்களுக்கு வாங்கும் போதைப்பொருள் கும்பல் சில்லறை விலையில் பணக்காரர்களுக்கு விற்கும் பொழுது ஒரு மாத்திரை பத்தாயிரம் ரூபாய் என விற்பதாக கண்டுபிடித்துள்ளனர்
பத்தாயிரம் ரூபாய் அளவிற்கு கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த போதை மாத்திரை ஒரு முறை பயன்படுத்தினால் 8 மணி நேரம் போதை குறையாமல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இதனை சப்ளை செய்த ராயப்பேட்டையைச் சேர்ந்த நபர் மால்கள் நட்சத்திர விடுதிகளில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்ததன் மூலம் கிடைக்கப் பெற்ற தொடர்புகளை வைத்து இந்த போதைப் பொருள் மாத்திரைகள் சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சாதாரணமாக விற்பனை பிரதிநிதியாக இருந்த போது குறைந்த அளவு சம்பாதித்த அந்த நபர் போதைப்பொருள் சப்ளை செய்தால் அதிக அளவு பணம் கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்த சர்வதேச போதை பொருள் கும்பலுடன் இணைந்து நைஜீரியர்கள் மூலமாக போதை மருந்துகளை வாங்கி சென்னையில் முக்கிய நட்சத்திர விடுதிகளுக்கும் தமிழகத்தின் பல முக்கிய நட்சத்திர விடுதிகளுக்கும் சப்ளை செய்வதாக தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளை ஒவ்வொரு இடத்திலிருந்தும் கை மாற்றுவதற்கு ரகசியமாக கோடுவேர்டுகளை பயன்படுத்தி வாங்கி செல்கின்றனர்.
குறிப்பாக Ecstasy என்று அழைக்கப்படும் இந்த போதை மாத்திரைகளை
Adam, BeansCandy, Clarity, Dancing Shoes, E, Happy Pill, Hug, Hug Drug, Love Drug, Lover’s Speed, Molly, Moon Rocks, Rolls, Scooby Snacks, XTC என பல கோடுவேடுகளை பயன்படுத்தி ரகசியமாக யாருக்கும் சந்தேகம் வராமல் போதைப் பொருளை கைமாற்றுகின்றனர்
இந்த கோடுவேர்டுகளை கூறும் நபர்களுக்கு மட்டுமே போதை சப்ளை செய்யும் நபர்கள் எம் டி எம் ஏ எனப்படும் ராஜ போதை மாத்திரைகள் சப்ளை செய்வார்கள். இதேபோன்று கொக்கைன், ஆம்பட்டமைன் ஆகிய போதைப் பொருட்களுக்கும் கோடு வேர்டுகளை பயன்படுத்தினால் மட்டுமே சம்பந்தப்பட்ட பொருளை சப்ளை செய்வார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறாக மொத்தமாக தற்போது பிடிபட்டுள்ள நைஜீரிய கும்பல் மற்றும் சென்னையின் முக்கிய போதை பொருள் சப்ளை மன்னனிடமிருந்தும் 7.45 கிராம் கொக்கைன் ஒரு கிலோ கிராம் ஆம்பட்டமைன், 317.2 கிராம் எம்டிஎம்ஏ மாத்திரைகள் ஆகிய போதை பொருட்களை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் சிக்கிய முக்கிய போதப் பொருள் சப்ளை மன்னன் எந்தெந்த நட்சத்திர ஓட்டல் மட்டும் சொகுசு விடுதிகளுக்கு சப்ளை செய்துள்ளான் மற்றும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட போதை பொருட்களை இவருக்கு எந்தெந்த நைஜீரியர்கள் சப்ளை செய்துள்ளார்கள் என்கிற பட்டியலையும் அவர்களது வங்கிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த முக்கிய போதை பொருள் சப்ளை மன்னனின் அடையாளம் மற்றும் தகவல்களை வெளியிட்டால் மற்றவர்கள் தப்பித்து விடலாம் என மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகசியமாக அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







