சென்னையில் தன்னுடன் பழகிய இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று கூறிவிட்டு தனது காதலனுக்காக சென்னை வந்துள்ளார். பின்பு கோயம்பேட்டில் உள்ள கால் சென்டரில் வேலை பார்த்துக்கொண்டு லேடிஸ் ஹாஸ்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில், தனது பக்கத்து ஊரான அறந்தாங்கியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 20) என்பவருடன் இளம் பெண்ணுக்கு சென்னையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில்,சென்னையில் வேலை பார்த்து வந்த அந்த பெண்ணின் காதலன், தனது வேலையை பெங்களூருக்கு மாற்றம் செய்து சென்றுவிட்டார். இதனால், அந்த பெண்ணும், சந்தோஷ் இருவரும் அண்ணன் தங்கை உறவு என்று கூறி சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 4 மாதங்களாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். மேலும் இருவரும் அவரவர் வேலை பார்க்கும் இடத்தில் சந்தோஷ் ஒரு பெண்ணிடமும், அந்த பெண் வேறொரு இளைஞரையும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட சந்தோஷ், நேற்றிரவு வீட்டிற்கு வந்த போது இளம் பெண் துப்பட்டாவில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், இதை கண்டு அதிர்ச்சியடைந்து கதவை பூட்டிவிட்டு ஸ்ரீபெரும்புத்தூருக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரது தலை மற்றும் கண்புருவத்தில் காயம் இருந்ததால் போலீசார் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து சந்தோஷை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தோசும் அந்த பெண்ணும் நெருக்கமாக பழகி வந்தது தெரியவந்தது. மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து அந்த பெண்ணை தாக்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு இளம் பெண், சந்தோஷை தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதே போல நேற்றிரவு சந்தோஷ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது, அவரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக விசாரணையில்
தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு பயந்து சந்தோஷ் அந்த பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது போல நாடகமாடி தப்பியோடியது விசாரணையில்
தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சந்தோஷை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் இளம்பெண்ணின் செல்போனில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதால் சைபர் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
-இரா.நம்பிராஜன்








