“மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வரும் தகவல் தவறானது” – ஓபிஎஸ் அறிக்கை!

வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக உரிமை மீட்புக் குழு புறக்கணிக்கப் போவதாக வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும்,  பாஜகவிற்கு தான் ஆதரவு எனவும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக உரிமை மீட்புக் குழு புறக்கணிக்கப் போவதாக வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும்,  பாஜகவிற்கு தான் ஆதரவு எனவும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

“அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதையும்,  இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும் முதற்கண் கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் “இரட்டை இலை” சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது நமது விருப்பம். இதனை, பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். இதனைத் தொடர்ந்து “இரட்டை இலை” சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பாஜகவிற்கு நமது ஆதரவினை தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அதுபற்றிய விவரங்கள் அனைத்தையும் நானே தெரிவிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, இதற்கிடையே பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.