நண்பர்களுடன் திரையரங்கில் ரசித்து பார்க்கலாம் – தி லெஜண்ட் விமர்சனம்

அருள் சரவணன் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ள தி லெஜன்ட் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.   வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு வரும் ஹீரோ சரவணன்…

அருள் சரவணன் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ள தி லெஜன்ட் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.

 

வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு வரும் ஹீரோ சரவணன் அங்கு தனது நண்பன் மற்றும் அவரது குடும்பம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டு வேதனை அடைகிறார். விஞ்ஞானியான சரவணன் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனை பிடிக்காத சிலர் ஹீரோவின் மனைவியை கடத்தி செல்கின்றனர்.

 

கடத்தி செல்லப்பட்ட மனைவியை கண்டுபிடிக்கிறாரா? சர்க்கரை நோய்க்கு தீர்வு கிடைக்கிறதா? என்பது தான் தி லெஜன்ட் படத்தின் கதை. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் முதல் முறையாக ஹீரோவாக தி லெஜன்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கி உள்ளனர். சரவணனுடன் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், ரோபோ சங்கர், ஊர்வசி ரௌடேலா, கீத்திகா திவாரி, யாஷிகா ஆனந்த், ராய் லட்சுமி, யோகி பாபு, பிரபு என பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

 

வில்லன் கதாப்பாத்திரத்தில் சுமன் நடித்துள்ளார். குடும்பம், காதல், சென்டிமென்ட் என முதல் பாதி நகர்கிறது. விஞ்ஞானம், மருந்து, பழி வாங்குதல் என இரண்டாம் பாதி நகர்கிறது. 5 பாடல்கள், 6 சண்டை காட்சி என இந்த வயதிலும் தன் ஒட்டு மொத்த திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார் சரவணன்.

தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்த சரவணன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனை தொடர்ந்து படத்தின் ஒவ்வொரு அப்டேட்ஸ் வெளியாகும் போதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. தனது முதல் படம் இது என்று தெரியாத அளவிற்கு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சரவணன்.

 

தனது முதல் படத்திலேயே பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார் அருள் சரவணன். குறிப்பாக ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு கிடைக்காத வரவேற்பு அருள் சரவணனுக்கு கிடைத்துள்ளது. தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள தி லெஜன்ட் திரைப்படம் சென்னையில் இன்று காலை 4 மணி சிறப்பு காட்சிகள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

 

இந்த படத்தை பொறுத்தவரை முதல் பாதியில் விவேக்கும், இரண்டாம் பாதியில் யோகி பாபுவும் சிரிக்க வைக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களின் எனர்ஜியை கொண்டு வர முயற்சி செய்துள்ளது. வேல்ராஜின் ஒளிப்பதிவு ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நிற்கிறது. குறிப்பாக சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில் நண்பர்களுடன் திரையரங்கில் ரசித்து பார்க்கும் திரைப்படமாக தி லெஜன்ட் உருவாகியுள்ளது.

 

தி லெஜண்ட் – அறிமுக நாயகனுக்கு அசத்தல் வெற்றி

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.