பள்ளிக் குழந்தைகளின் படிப்பிற்கு தேவைப்படும் சாதி சான்றிதழ்களை வழங்க கோரி, காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த ஏராளமானனோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில் காட்டு நாயக்கர் இன சமூகத்தை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல வருடங்களாக வசித்து வரும் இவர்களுக்கு தமிழக அரசால் இதுவரை இலவச வீட்டு மனை பட்டாவோ, தங்களது குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கு தேவையான சாதி சான்றிதழ்களோ எதுவும் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் , தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்திற்கு 50-க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் இன சமூகத்தை சேர்ந்தவர்கள் வருகை தந்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
பின்னர் கூட்டம் முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், சாதி சான்றிதழ் வழங்க கோரியும் ஆண்கள், பெண்கள், பள்ளி குழந்தைகள் என ஏராளமானோர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் வசித்து வரும் காட்டு நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அந்த மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன், இது தொடர்பாக துறைரீதியான அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா